Tuesday, May 5, 2015

தேர்வு முடிவை எதிர்கொள்ளும் மாணவர்களே, வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழு!

இரவு 10.45க்கு அலைபேசி அழைத்தது. யார் இந்த நேரத்தில்? யோசனையுடன் எடுத்தேன். "ஹலோ, ஆன்ட்டி நித்யா பேசுகிறேன்", என்ற குரல் கண்ணீருடன் என்னை அழைத்தது.

"என்னடா?" என கேட்டதும், "சாவதற்கு முன் உங்களுடன் பேசனும் போல் இருந்தது, அதான் கூப்பிட்டேன்" என்றாள். என் சப்த நாடியும் ஒரு நிமிடம் ஆடிப்போனது. "ஏன்" என்ற ஒற்றை கேள்விக்கு ஆயிரம் காரணங்கள்! அழுது கொண்டே கூறினாள். பெற்றோர் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைப்பதாகவும், தன்னைப்பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பதாகவும் கூறினாள். ஆனால் அவள் பிளஸ் 2 பரிட்சையில் நன்றாக எழுதவில்லை; நல்ல மதிப்பெண் வராது என்று கூறினாள். அவர்களை ஏமாற்றுவதை காட்டிலும் சாவதே மேல் என்றாள்.


ஏன் சரியாக தேர்வு எழுதவில்லை என்ற கேள்விக்கு, 'நன்றாகத்தான் படித்தேன், ஆனால் பரிட்சையில் எல்லாம் மறந்து விட்டது' என்று தேம்பினாள். அன்று இரவு அவளை சமாதானம் செய்து, அடுத்த நாள் பெற்றோரையும், அவளையும் என்னிடம் வரச்செய்தேன். நித்யா முயற்சித்த முடிவை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். அவள் தன் இயலாமையை கூறி பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாள். பெற்றோரிடம் இருக்கும் ஒரே விலை மதிக்கத்தக்க சொத்து என்றால் அது தன் உயிர் தான் என்பதை நித்யா உணர்ந்தாள்.
பெற்றோரின் மனநிலை விலை உயர்ந்த வணிக பொருளாய் மாறி விட்டது கல்வி. நன்கு படிக்கும் மாணவனுக்கே நல்ல கல்லூரியில் சேர சில லட்சங்கள் வேண்டும் என்றாகி விட்ட நிலையில், பெற்றோரின் தவிப்பும் நியாயமானதே. தன் பிள்ளை பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்கி விட்டால், பின் நல்ல கல்லூரி, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை அமையுமே என்பதே அனைத்து பெற்றோரின் மனநிலை.


ஆனால் எந்த குழந்தையின் நல்வாழ்விற்காக போராடுகிறார்களோ, அந்த குழந்தையின் மனஅழுத்தத்திற்கு சில நேரங்களில் பெற்றோர்களே காரணம் ஆகி விடுகிறார்கள். கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகாது தான். ஆனால் சில நொடிகளேனும் பாரம் தாங்காமல் குஞ்சு திணறுவது போல், சில சமயம் குழந்தைகள் திணறுகின்றனர். இந்த அழுத்தத்தை பெற்றோர் மட்டும் தருவதில்லை. பள்ளி ஆசிரியர்கள், சமுதாயம், சக மாணவர்கள் என அனைத்து திசையில் இருந்தும் நெருக்கடி வரும் பொழுது குழந்தைகள் தாங்கும் சக்தியை இழக்கின்றனர்.


குழந்தைகளின் மனநிலை


பனிரெண்டு வயது முதல் குழந்தைகளுக்கு விடலை பருவம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அவர்களின் உடலிலும், மனதிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களின் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்களால் மனதில் குழப்பம், எரிச்சல், கோபம், அழுகை, காதல், பொறாமை என பல உணர்ச்சி போராட்டங்கள் நடக்கின்றன.இப்பருவத்தில் அவர்களிடம் ஆழ்ந்த முற்போக்கு சிந்தனையை காட்டிலும், உணர்ச்சியால், தூண்டப்படும் சிந்தனையே மேலோங்கி நிற்கிறது. அதுவே அவர்களை பல நேரங்களில் விபரீதமான முடிவு எடுக்கத் தூண்டுகிறது.
இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறையில் அவர்களின் கவனத்தை திசைதிருப்பவென்று ஏராளமான தூண்டில்கள் உண்டு. வீடியோகேம்ஸ், அலைபேசி, இணையதளம், சமூகவலைதளம், வாட்ஸ்அப், பேஸ்புக் என அனைத்தும், படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவனை கூட திசை திருப்பி விடும்
வல்லமை பெற்றவை ஆகும்.ஆனால் இவை எல்லாம் தெரிந்திருந்தால் மட்டுமே சமுதாயத்தில் அவர்களுக்கு நன்மதிப்பு உண்டு என்ற நிர்பந்தத்தாலே பல குழந்தைகள் இதில் ஈடுபாடு காட்டுகின்றன.


மேலும் பல குழந்தைகளுக்கு பாடங்களில் அடிப்படை கருத்துக்களில் ஆழ்ந்த ஞானம் இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் பாடங்களை குருட்டு மனப்பாடம் செய்து, புரியாமல் படித்து தேர்ச்சி பெற்று, பெரிய வகுப்பிற்கு வரும் போது, திணறிப்போகின்றனர். இக்குழந்தைகளை அதிக மதிப்பெண் வாங்கச் சொல்வது, நடக்கவே தெரியாத குழந்தையிடம் ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வென்று வா என்று கூறுவது போல் அல்லவா?நாம் நம் குழந்தைகளுக்கு நடனம் கற்றுத்தருகிறோம். கம்ப்யூட்டர் கற்றுத்தருகிறோம். ஆனால் தோல்வியடையும் போது, அதனை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக் கொடுத்திருக்கிறோமா?


பல வீடுகளிலும், பள்ளிகளிலும், மாணவர்களிடம் தோல்வி என்ற ஒன்றே இருக்க கூட்ாாது என்று எதிர்பார்க்கின்றனர். தோல்வி தானே வெற்றியின் முதல் படிக்கட்டு. எந்தக்குழந்தைக்கு தன்னம்பிக்கையும், வீழ்ந்தால் தாங்கி பிடிக்க சமூக ஆதரவும் (குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார்) குறைவாக இருக்கிறதோ அந்த குழந்தைகளே தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்று உளவியல் ஆய்வு சொல்கிறது.


இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி அவசியம் தேவை. உங்கள் குழந்தையின் படிக்கும் திறனை கண்டு கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். அவர்கள் தோல்விகளை சந்திக்கும் போது, தாங்கிப்பிடிக்கும் சக்தியாய் உங்கள் அன்பு இருக்கட்டும்.


தன்னம்பிக்கை விதை பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் என்பது வாழ்வின் வெற்றிக்கு ஏணிப்படியாய் அமையும் என்றாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றியை நிர்ணயம் செய்து விடாது. வீழ்ந்தாலும் துணிவாய் எழ தன்னம்பிக்கை என்ற விதையை சிறு வயது முதலே விதைப்போம்.பள்ளிப்பருவம், தேர்வு, மதிப்பெண்- இது எல்லாம் வாழ்வின் ஒரு அத்தியாயம். ஒரு அத்தியாயத்தின் முடிவு சரியாக இல்லை என்பதற்காக வாழ்க்கையையே
அழிப்பது சரியா. இன்னும் வாழ்வில் உருவாக்க, வெல்ல எத்தனையோ அத்தியாயங்கள் உண்டு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டிருந்தால் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் உருவாகியிருக்க மாட்டார். இன்று சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்த்தால், வீழ்ந்த பின்னர் வீறு கொண்டு எழுந்து வென்றவர்களே அதிகம்.
சரி நித்யா இன்று என்ன செய்கிறாள். அவள் கணித்தது போலவே, பிளஸ் 2 தேர்வில் அவ்வளவு நல்ல மதிப்பெண் வாங்கவில்லை. அவள் பெற்றோர் மேலும் கடன் வாங்கி, நித்யாவை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர். அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில்,


தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்தாள். இன்று பிரபலமான
மென்பொருள் கம்பெனியில், கை நிறைய சம்பாதிக்கிறாள். வாழட்டும் இது போல பல நித்யாக்கள்.


எனவே பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்கொள்ளும் மாணவர்களே... வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். வீழ்ந்தாலும் அது நீங்கள் வீறு கொண்டு எழவே என எண்ணுங்கள்.--வி.ரம்யவீணா,குழந்தைகள் மனநல நிபுணர், சென்னை