Thursday, May 28, 2015

மனைவியால் யோகம் யாருக்கு ?

ற்காலத்தில் விலைவாசி உயர்வு காரணமாக கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் ஓரளவாவது குடும்பத்தை நடத்த முடியும் என்கிற நிலை! திருமணத்துக்குக் குடும்பத்தாருடன் சென்று பெண் பார்க்கும்போதே, 'பெண் வேலைக்குப் போவாளா?' என்று மணமகன் கேட்கும் நிலை அமைந்துவிட்டது. மேலும், குடும்ப வறுமை காரணமாகவும், ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் பெண்கள் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம்! 

கணவரின் ஜாதகப்படி, அவருக்கு அமையப்போகும் மனைவி, வேலைக்குச் செல்வாரா என்பதை அறிந்துகொள்ளாலாம்.

கணவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ம் இடம் மனைவியைக் குறிக்கும் ஸ்தானம் ஆகும். அந்த 7ம் வீட்டில் இருந்து 10ம் இடம் கணவரின் ஜாதகத்தில் 4ம் இடம் ஆகும். இந்த 4ம் வீட்டுக்கு அதிபதியான கிரகம் வலுத்திருந்தால், மனைவி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் யோகம் அமையும்.

4ம் வீட்டோன் ஆட்சி, மூலத் திரிகோணம், உச்சம் ஆகிய நிலைகளில் இருக்கும்போது, அந்த ஜாதகரின் மனைவிக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும்.

4ம் வீட்டோன் லக்னம் 7, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும், 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும், மனைவி வேலைக்குச் சென்று பொருள் திரட்டுவாள்.

7ம் வீட்டோனும் லக்ன அதிபதியும் ஒன்றுகூடி 4, 10 ஆகிய இடங்களில் வலுப்பெற்று இருந்தால், கணவனும் மனைவியும் கூட்டாகத் தொழில் செய்து பொருள் திரட்டும் யோகம் உண்டாகும்.

4ம் வீட்டில் சூரியன் அதிபலம் பெற்று இருந்தால், மனைவிக்கு உயர் பதவி, யோகம் அமையும்.

களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். அவர் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண பலம் பெற்று வலுத்திருப்பாரானால், மனைவியால் யோகம் கூடும். பண வரவு உண்டாகும். சொத்துக்களும் சேரும்.

சுக்கிரன் பலம் பெற்று 7ம் வீட்டோனுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால், மனைவியால் வீடு, நிலம், மனை, வாகன யோகம் உண்டாகும். சுகமும் கூடும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். இருவரும் சேர்ந்து தொழில் புரிந்து அதிக செல்வம் திரட்ட வாய்ப்பு உண்டாகும்.

உதாரணமாக, ஒருவருக்கு மேஷ லக்னம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 7ம் வீட்டுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். 7ம் வீட்டுக்கு 10ம் வீடான 4ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து அவருடன் 4ம் வீட்டோன் சந்திரனும், 9ம் வீட்டோன் குருவும் கூடி இருந்தால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள்.

மனைவியால் சொத்துக்களும் சேரும். மனைவியுடன் கூட்டு சேர்ந்து பொருள் திரட்டும் யோகமும் உண்டாகும். சுக அனுபவம் கூடும். மன மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வாழ வாழி பிறக்கும்.

கடக லக்னத்தில் பிறந்த இன்னொரு ஜாதகரை எடுத்துக்கொள்வோம். இவருக்கு 7ம் வீட்டோன் சனி ஆவார். சனி துலாத்தில் தன் உச்ச ராசியில் வலுத்திருப்பாரேயானால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டோன் குரு ஆவார். குரு 4ல் தனுசில் தன் ஆட்சி, மூலத்திரிகோண ஸ்தானத்தில் வலுத்திருப்பதால், வேலைக்குப் போகும் மனைவி அமைவாள். கௌரவமான பதவி கிடைக்கும். சொத்தும், சுகமும் சேரும். வாகன யோகமும் உண்டாகும். தெய்வ பக்தி மிகுந்தவள் ஆவாள். நல்ல குணம் அமையும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய் ஆவார். அவர் 4ல் இருந்தால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள். சிம்மச் செவ்வாய்க்கு தோஷம் இல்லை. செவ்வாயுடன் சூரியன் ஒன்று சேர்ந்து இருப்பாரானால், மனைவிக்கு உயர் அதிகாரம் உள்ள அரசுப் பதவி கிடைக்கும். நிலங்களும் சொத்துக்களும் சேரும்.

துலா லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டோன் செவ்வாய் ஆவார். செவ்வாய் 4ல் தன் உச்ச ராசியில் இருப்பாரானால், மனைவி வேலைக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், வீடு, மனை நிலங்கள் சேரும்.

பொதுவாக ஆணின் ஜாதகத்தில் 4க்கு உரிய கிரகம் வலிமை பெற்றுக் காணப்பட்டால், மனைவியால் அந்த ஜாதகருக்கு யோகம் உண்டு.