Monday, May 18, 2015

வாழ்க்கை காத்திருக்கிறது உங்களுக்காக.

சிறு தோல்விகளுக்கு நிலை குலைந்து போகிறோமே. நாம் நினைத்தது நடக்காமல் வேறுவகையில் நடந்ததை நம்மால் ஏன் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை? கவலை என்ற ஒற்றைச்சொல் இப்படிக் கொடூரமாய் நம்மைச் சம்மட்டியால் அடித்துச் சங்கடப்படுத்துகிறதே. 

கட்டயமாக நாம் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டுமா? கவலை கோரமான வலை. நம்நிலையைக் குலைக்கும் மாயவலை. ரணங்களைத் தரும் காயவலை. எதற்கும் நீங்கள் அச்சப்பட அவசியமில்லை. ஆகாயம் இடிந்து அப்படியே நம் தலைமீது விழப்போவதில்லை. பொறுமையாக அமர்ந்து சிக்கெடுத்தால் நுாலின் சிக்கலையும் வாழ்வின் சிக்கலையும் சில மணித்துளிகளில் சீராக்கலாம். சிக்கலில் மீண்டு எதையும் நேராக்கலாம். செய்கிறோமா? நாமாக அனுமதிக்காதவரை எந்தத் தோல்வியும் நம்மை எதுவும் செய்துவிடமுடியாது... நாம் மனம்தளர்ந்து, தினம் தளர்ந்து போகாத வரை. சாகும் அளவுக்கு இறைவன் நமக்குச் சங்கடங்கள் தரப்போவதில்லை.

யார் ஆறுதல் தருவார்? 

காத்திருக்கத்தான் வேண்டியதிருக்கிறது காலம் கனிந்து நம்மைக் கரையேற்றும் வரை. கவலை வலைகளில் சிக்குண்டு பின்னிக்கிடக்கும் நமக்கு ஆறுதலும் தேறுதலும் யார் தருவார்? நாம்தான் நமக்கு ஆறுதல். விழுதலின் விழுது எழுதலில் தான் உள்ளது.

பரந்த வானம் குறித்த பயமிருந்தால் பறத்தல் குறித்து நினைத்துப் பார்க்க முடியுமா பறவைகளால்? எட்டாவது மாதத்தில் எட்டடி வைத்து நடக்கத் தொடங்கும் நம் வீட்டு குழந்தைகள் எழுச்சியோடு நடப்பதற்குள் எழுந்து நடப்பதற்கு முன் எத்தனை முறை விழுந்து அடிகள் பட வேண்டியிருக்கிறது. அடிகள் படாமல் சிற்பமில்லை...சிறப்புமில்லை. தேர்வு முடிவுகள், அலுவலச் சூறாவளிகள், பொருளாதார நெருக்கடிகள், குழந்தைகளின் செய்கைகள், உறவினர்களின் செயல்பாடுகள் உங்களை உலுக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கா இவ்வளவு வருத்தம்? அதற்கா இவ்வளவு துயரம்? காற்று அசுர பலத்தோடு இருக்கும் சில கணங்களில் நம்மால் மகிழ்வாகத் துாற்றிக் கொள்ள முடியவில்லை தான். அதற்காகக் காற்றை விட்டு விட்டுக் காததுாரம் ஓடிவிட முடியுமா? நதி நீரின் இறுதித் துளிகளை நம்பிக் காத்திருக்கும் கடைசி மீன் போல் நாமும் காத்திருக்கலாம் நமக்கான நல்ல வினாடி வரும் வரை.ஆனந்தக் காட்சிகளை அழகாய் ரசிப்பதற்கு இறைவன் தந்த சோடிக் கண்களால் நாம் சோகத் துளிகளை வடித்துக் கொண்டிருப்பது நியாயமா? நீங்கள் பதறிய வினாடிகளைக் கடந்து பின்னோக்கிப் பார்த்தால் இதற்கா இவ்வளவு கலங்கினோம் என்று சிரிக்கத் தோன்றும். கலக்கம் நம்மைக் கலக்கும்.

அச்சம் வேண்டாம் எவரெஸ்ட் ஏறுகிறவனின் பார்வை எப்போதும் சிகர உச்சியை நோக்கித்தான் இருக்குமே தவிர, ரணமான தன் பாதங்களைக் கண்டு வருந்துவதில் இருக்காது. எல்லாப் பயணங்களும் கொப்புளமான சோடிக் கால்களின் துயரத்தில் தான் தொடங்குகின்றன. நாம் எப்போதும் வென்றவர்களுக்கே வெற்றிவிழா நடத்திக் கொண்டிருக்கிறோம். தோற்றவர்களையும் போற்ற வேண்டும். அவர்கள் தான் வெற்றியின் நெற்றியில் நாளை திலகமிடப் போகிறவர்கள்.நமது இரண்டாவது இதயமாகவே மாறிவிட்ட அலைபேசிகளிடம் கூட நாம் கற்றுக்கொள்ளப் பாடம் இருக்கிறது. இணையத்தின் வழியே ஏதேனும் வைரஸ் நுழைந்து விட்டால் உடன் உங்கள் அலைபேசியில் நீங்கள் நிறுவியுள்ள 'ஆன்டி வைரஸ்' எனும் எதிர்க்காப்பாளன் விரைவாய் செயல்பட்டு எப்படி அழித்துவிட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறதோ, அதேபோல் உங்கள் மனதில் மண்டிக்கிடக்கும் எதிர்மறை எண்ணங்களை உடன் அழித்துவிடுங்கள். இல்லையேல் அவை உங்கள் உற்சாகத்தை உருக்குலைக்க வைத்துவிடும். சிலநேரங்களில் உயிரையும் எடுத்துவிடும்.

ஆயிரம் பாடல்களைத் தேக்கிவைத்து, வேண்டிய நேரத்தில் விரும்பிய பாடல்கள் தரும் அலைபேசிகளைப் போல் நல்ல பாடல்களைத் தேக்கிவைத்து தேவையான போது பயன்படுத்துங்கள். பிசையும் பிரச்னைகளை இசை தன்வசமாக்கி இல்லாமல் செய்யும். தினமும் இரவு துாங்கும் முன் நல்ல இசை கேளுங்கள். மனம் மகிழ்ச்சியாகும்.

அலைபேசி எல்லாவற்றையும் தன் உள்நினைவகத்தில் பதிவு செய்து வைப்பதில்லை. சிலவற்றை நினைவகத்திற்கு வெளியே இருக்கும் வெளி நினைவுகள் 'சில்லு'களுக்கு மாற்றிவிட்டுத் தன் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறது. சிலவற்றை உடன் அழித்து விடுகிறது. நீங்களும் அதே போல் இருங்கள். உள்ளுக்குள் இருந்து உங்களைப் பிசையும் பிரச்னைகளை அவ்வப்போது அழித்துவிடுங்கள். இல்லையேல் உங்களை அது நிலைகுலைய வைத்துவிடும்.

அலுவலகப் பிரச்னைகளை வீட்டிலும், வீட்டுப் பிரச்னைகளை அலுவலத்திலும் நினைத்து மனதில் போட்டுக் குழப்பி உங்கள் வேகத்தையும், உற்சாகத்தையும் குறைத்துக் கொள்வதை விட வீட்டுக்கு வெளியே அவற்றை நிறுத்திவிடுங்கள்.
மகிழ்ச்சியை அளியுங்கள் 

எதிர்கொள்ளுங்கள் எதையும்...பயந்து ஓடுபவனையே காலம் பாய்ந்து தாக்குகிறது...பாடாய்ப்படுத்துகிறது. தற்கொலைக்குக்கூடத் துாண்டுகிறது. கோழைகளுக்குக் காலம், உயிருள்ள போதே கல்லறைப்பேழையைத் தயாரித்து வைக்கிறது. நேர்மை நம் வாழ்வை கூர்மையாக்குகிறது. உண்மை அதை அழகுச் சிற்பமாக்குகிறது. மூளையின் மூலம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளமுடியாது. இதயத்தின் இமைகள் திறக்கும் போது சில காட்சிகள் புலப்படும். புரியத் தொடங்கும் போது காட்சிகளின் உண்மையான பின்னணி புலப்படும்.

பயிற்சியும் முயற்சியும் அயர்ச்சியைப் போக்கும். எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு வாழ்க்கை வசந்தச் சாமரம் வீசுகிறது. எதார்த்தம் மட்டுமே எப்போதும் கெடாத பதார்த்தம். உயிரின் சிறப்பு உயர்வில் இருக்கிறது.
நிறுத்திவைக்கும் போது ஏணி எனப் பெயரெடுக்கும் மூங்கில் இணை, கிடத்தி வைக்கும் போது பாடை எனப் பெயர் பெறுகிறது. 

பார்வையை மாற்றிக்கொண்டு பாருங்கள் வாழ்க்கை வாகைசூட அழைக்கும்.
பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள். புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள், அவை உங்களுக்குப் புதிய படிப்பினைகளைத் தரலாம். தண்டவாளத்தில் தலைவைத்தபடி தன்னம்பிக்கை குறித்து பேசிக்கொண்டிருக்கலாமா? எதிர்மறையான பேச்சும் சிந்தனையும் நம்மை பலவீனப்படுத்தும். ஊசி முனை நுழைந்த பின்தான் நுாலே நுழைய முடிகிறது. நீங்கள் அனுமதிக்காதவரை உங்களை யாரும் துயரப்படுத்தி விடமுடியாது.

தோல்விகளில் இனியும் தொங்கிக் கொண்டிராதீர்கள். வெற்றியால் உங்களை வெளிப்படுத்துங்கள். பொறுமை உங்கள் வெறுமை நாட்களை அருமையாய் அலங்கரிக்கும். சிரமப்பட்டுச் சிகரமேறுங்கள்... சிகரமாய் மாறுங்கள். 

கனவு காணும் கண்கள், மகிழ்வலைகளைத் தேக்கிவைத்த நெஞ்சம் இவற்றோடு துன்பங்களில் இருந்து விடுபடுங்கள். விரைவாய் விண் எட்டலாம். விந்தைகள் பல 
புரியலாம். 

வாழ்க்கை காத்திருக்கிறது உங்களுக்காக. 


-முனைவர் சௌந்தர மகாதேவன், 
தமிழ்த்துறைத் தலைவர், 
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, 
திருநெல்வேலி. 99521 40275 mahabarathai1974@gmail.com