Friday, May 8, 2015

விவேகானந்தர் கருத்துக்கள்

 விவேகானந்தர் கருத்துக்கள்
 
கவலைப்பட வேண்டாம் பெரிய மரத்தின் மீதுதான் புயற்காற்று மோதுகிறது: கிளறிவிடுவதனால் நெருப்பு மேலும் நன்றாக எரிகிறது; தலையில் அடிபட்ட பாம்பு படமெடுக்கிறது என்று இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

நெஞ்சுபுண்பட்டு வேகும்போதும் துன்பப் புயல் நம்மைச் சுற்றி நாலா புறங்களிலும் வீசும்போதும் இனி வாழ்க்கையில் ஒளியையே காண முடியாதா என்று தோன்றும்போதும். நம்பிக்கையும் துணிவும் கிட்டத்தட்ட அறவே நம்மை விட்டு அகன்று விட்ட போதும் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆன்மிகப் புயல் சூழ்ந்த நிலையின் நடுவில்தான் பிரம்மத்தினுடைய ஒளி நமது உள்ளத்தினுள் பிரகாசிக்கிறது.

ஆடம்பர வாழ்கையின் மடியிலே தாலாட்டப்பட்டு வளர்ந்தவன் ரோஜாமலர்ப் படுக்கையில் படுத்திருப்பவன் எப்போதுமே ஒரு துளிக் கண்ணீர் சிந்தாதவன் எவனோ, அவன் என்றைக்காகிலும் சான்றோனாக ஆகியிருக்கிறானா? இத்தகையவன் என்றைக்காகிலும் தனக்குள் இருக்கும் பிரம்மத்தை மலரச் செய்திருக்கிறானா?

அறிவு உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவுக்கு பகுத்தறிவு என்னும் ஒரே ஒரு நிலை மட்டும்தான்உண்டு அந்த ஒரு நிலைக்குள் இருந்தபடியே அறிவு வேலை செய்கிறது. தனக்கு உரிய அந்த எல்லையைக் கடந்து அறிவு செல்ல முடியாது.

அறிவாற்றலால் ஒருபோதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு இதயம் ஒருவனை அழைத்துக்கொண்டு போகிறது இதயம் அறிவையும் கடந்து தெய்விக அருள் என்னும் நிலையை அடைகிறது அன்புள்ளம் கொண்ட மக்களுக்குப் பாலிலிருந்து வெண்ணெய்கிடைக்கிறது. அறிவாற்றல் நிறைந்த மிக்க மக்களுக்கோ எஞ்சியுள்ள மோர் மட்டுமே கிடைக்கிறது.

நாம் அனைவரும் நேர்மையானவர்களாகத் திகழ்வோமாக இலட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லைஎன்றால் நமது பலவீனத்தை நாம் ஒப்புக்கொள்வோம் ஆனால் இலட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருப்போமாக இலட்சியத்தைத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுபோக எவரும் முயற்சி செய்ய வேண்டாம்.

மனிதகுலம் பிழையிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் மாறாக உண்மையிலிருந்து மற்றோர் உண்மைக்குத்தான் பிராயாணம் செய்கிறது தாழ்ந்த ஓர் உண்மையிலிருந்து உயர்ந்த மற்றோர் உண்மைக்கு மனித குலம்செல்வதாக நீங்கள் கருதலாமேயன்றி பிழையிலிருந்து உண்மைக்குச் செல்கிறோம் என்று நினைப்பது பொருந்தாது.

உயிரினம் தாழ்ந்தாக இருப்பதற்கு ஏற்ப புலன் இன்பத்தை நாடும் நாட்டமும் அவற்றில் மிகுந்து காணப்படும். மக்களில் ஒரு சிலர்தாம் நாய் ஓநாய் ஆகியவை உணவைத் தின்னும்போதும் காட்டும் அதே அளவு ஆர்வத்தோடு உணவைச் சாப்பிட முடியும் ஆனால் நாயும் ஓநாயும் அனுபவிக்கும் இன்பமெல்லாம் புலன்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றன.

எல்லா நாடுகளிலும் மனித இனத்தில் தாழ்ந்த இயல்புடையவர்கள், புலன் இன்பங்களிலேயே மகிழ்ச்சி அடைபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் பண்பாடு மிக்கவர்களும் படித்தவர்களும் சிறந்த சிந்தனை, தத்துவங்கள், கலைகள், விஞ்ஞானங்கள் ஆகியவற்றில் இன்பம் காண்பவர்களாக இருக்கிறார்கள். ஆன்மிக வாழ்க்கை என்பது இவற்றை எல்லாம் கடந்த மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறது.

புத்தர் இயேசு கிறிஸ்து போன்ற பெரியோர்களின் வரலாறுதான் இந்த உலகத்தின் வரலாறாகத் திகழ்கிறது. உணர்ச்சி வசப்படாதவர்களும் பற்றற்றவர்களும் இந்த உலகிற்கு மிகுந்த நன்மையைச் செய்திருக்கிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருந்தல் வேண்டும் அந்தக் குணங்கள்தாம், அவர் வாழ்க்கையில் அடைந்த சிறந்த வெற்றிகளுக்குக் காரணங்களாகும் அவர் முற்றிலும் சுயநலம் அற்றவராக இல்லாமலிருக்கலாம். ஆனால் அப்படி இருப்பதற்கிடையிலும் அவர் சுயநலத்தைத் துறந்துவிடும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பவராக இருந்திருப்பார். அவர் அறவே சுயநலம் இல்லாதவராக இருந்திருப்பாரானால் அவர் அடைந்த வெற்றி புத்தர்பிரானின் வெற்றியைப் போன்றோ இயேசுநாத புத்தர்பிரானின் வெற்றியைப் போன்றோ இயேசுநாதரின் வெற்றியைப் ஒரு மாபெரும் வெற்றியாக விளங்கியிருக்கும் சுயநலமற்ற தன்மையின் அளவுதான் வெற்றியின் அளவை இடத்திலும் நிர்ணயம் செய்கிறது.

உண்மை தூய்மை சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்த நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.

முன்னேறிக்கொண்டே இரு முறையற்ற ஒரு செயலைச் செய்துவிட்டதாகவே நீ நினைத்தாலும் அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யலாம் இருந்திருந்தால் இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத் தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழி காட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்! உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தை உறுதியாகப்பற்றிக்கொண்டு முன்னேறியபடியே இரு!

மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் தர்மமாகும் மற்றவர்களுக்கத் தீமை செய்வது பாவமாகும். வலிமையும் ஆண்மையும் தர்மம். பலவீனமும் கோழைத்தனமும் தீமை சுதந்திரமான வாழ்க்கை புண்ணியமாக அமைகிறது மற்றவர்களிடமும் அன்பு செலுத்துவதுதான் புண்ணியச் செயலாகும் மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதே பாவச் செயலாகும். கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பது தர்மம். சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பதே பாவம். ஒருமைப்பாடு காண்கிற ஞானமே தர்மமாகும் வேற்றுமையைக் காண்பதுதான் பாவச் செயலாக அமைந்திருக்கிறது.

தற்காலத்தில் ஒருவன் மோசஸ் இயேசு கிறிஸ்து புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாகச் சொன்னால் அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான் ஆனால் ஒரு ஹக்ஸ்லி டின்டால் டார்வின் ஆகிய இவர்களின் பெயர்களை அவன் சொல்லட்டும் அவர்களுடைய கருத்து என்னவாக இருந்தாலும் மக்கள் அதை அப்படியே கேள்விக்கிடமின்றி நம்பிவிடுவார்கள்.

ஹக்ஸ்லி இப்படிச் சொல்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டால் அதுவே பலரக்குப் போதுமானதாக இருக்கிறது. நாம் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள்தாம் என்றாலும் முன்பு கூறியது மதவாழ்கையைச் சேர்ந்த மூடநம்பிக்கையாக இருந்தது. பின்னால் குறிப்பிட்ட இது, விஞ்ஞான ரீதியான மூடநம்பிக்கைகளின் மூலமாகத்தான் உயிரோட்டம் தரக்கூடிய ஆன்மிகக் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. விஞ்ஞான ரீதியான இன்றைய இந்த மூடநம்பிக்கையின் மூலமாகவே காமமும் பேராசையும் விளைந்திருக்கின்றன. முதலில் கூறிய மூடநம்பிக்கை கடவுள் வழிபாடாக இருந்தது. பின்னால் கூறிய இதுவோ அருவருக்குத் தக்க செல்வம் புகழ் அதிகாரம் ஆகியவற்றின் வழிபாடாக இருக்கிறது. இதுதான் இந்த இரண்டு மூடநம்பிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு.

மக்களிடையே உண்மையான சமத்துவம் என்பது எப்போதுமே இருந்ததில்லை இனி இருக்கப்போவதும் இல்லை இங்கு நாம் அனைவரும் சமமானவர்களாக எப்படி இருக்க முடியும்? அப்படிப்பட்ட சாத்தியமே இல்லாத ஒரு சமத்துவம் மரணத்தையே குறிப்பிடுகிறது, ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் வேறுபாட்டை எது உண்டாக்குகிறது? இந்த வேறுபாடு பெரும்பாலும் அறிவாற்றல் காரணமாக ஏற்படுகிறது நாம் யாவரும் ஒரே அளவிலான அறிவாற்றலுடன்தான் பிறந்திருக்கிறோம் என்று தற்காலத்தில் பைத்தியக்காரனைத் தவிர வேறு எவரும் சொல்ல மாட்டார்கள்.

வாழ்க்கையில் எனக்கு உள்ள ஒரே பேராவல் இதுதான் ஒவ்வொருவரின் இருப்பிடத்துக்கும் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு செல்லக்கூடிய ஓர் இயக்கத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வைக்க வேண்டும் அதன் பிறகு ஆண்களும் பெண்களும் தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும். வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்சனை குறித்து நம் முன்னோர்களும் மற்ற நாட்டவர்களும் கொண்டிருந்த கருத்துக்களை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். குறிப்பாக இப்போது மற்ற நாட்டவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் பார்த்து அதன் பிறகு அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும்.

இராசயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான் நமது வேலையாகும். இயற்கையின் நியதியையொட்டி அவை தாமாகவே படிகங்களாக மாறுதலடைந்துவிடும் கடுமையாக உழை உறுதியாக இரு பாமர மக்களின் மதத்துக்கு ஊறு விளைவிக்காமல் அவர்களை முன்னேற்றமடையச் செய்தே உன் இலட்சியமாக இரக்கட்டும்.

மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலம் சரி ; அதிஷ்ட தேவதை. உனக்கு அருள் புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும் உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும் - நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவள வேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. அமைதியாகிய துறைமுகத்தை ஒருவன் அடைவதற்குள் எத்தனை எத்தனை பெரும் புயல்களையும் அலைகளையும் சமாளித்து வரவேண்டியிருக்கிறது

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும். கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகிலே மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.இதுஎன் உறுதியான நம்பிக்கை.

எவன் ஒருவன் தன்னைக் குறித்து மிதமிஞ்சிய எச்சரிக்கை உள்ளவனாக இருக்கிறானோ அத்தகையவன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்துக்கு ஆளாகிறான் யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான் நஷ்டம் வந்துவிடுமோ என்று ஒருவன் எப்போதும் பயந்துகொண்டே இருக்கிறானோ அத்தகையவன் எப்போதும் நஷ்டத்தையே அடைகிறான் இவற்றை எனது வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன்.

வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய பணி என்ன என்பது எனக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்டபிரிவினரிடம் அதிகப் பற்றும் , வேறு ஒரு பிரபவினரிடம் தீவிர வெறுப்பும் கொண்டிருப்பது என்பது என்னிடம் இல்லை. நான் இந்தியாவிற்கு எந்த அளவுக்கச் சொந்தமானவனோ, அதே அளவுக்கு உலகம் முழுவதற்கும் சொந்தமானவன் படித்த இந்துக்களிடையே நீ காணும் அந்தச் சாதிவெறி பிடித்த மூடநம்பிக்கை கொண்ட இரக்கமற்ற, போலித்தனம் மிக்க நாதிக்க மனம் கொண்ட கொழைகளில் ஒருவனாக வாழ்ந்து இறந்து போவதற்காகப் பிறந்தவன் என்றா என்னை நீ நினைக்கிறாய்? கோழைத்தனத்தை நான் வெறுக்கிறேன். கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியலாகும். மற்றவை எல்லாம் வெறும் குப்பைத்தான்.

ஆன்மிக வாழ்க்கையில் நான் பேரின்பம் பெறாமற் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்க்கையிலா திருப்தியைநாடுவேன்? எனக்கு அமுதம் கிடைக்காமற் போனால் அதற்காகச் சாக்கடை நீரையா நாடிச் செல்வேன்?

நீயே தூய்மை பொருந்தியவன் ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது விழித்துக்கொள். எழுந்து நில். இந்த உறக்கம் உனக்கு ஏற்றதல்ல. துன்பப்படுபனானகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே. எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது. இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்.உனக்கும் சொல்லிக்கொள். அப்போது உன் வாழ்க்கையில். ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல் அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.

உன்னைப் போன்ற மக்களிடம்தான் நான் நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என் சொற்களின் உண்மையான கருத்தைப் புரிந்துகொண்டு, அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள். உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா என் அறிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.