Tuesday, May 5, 2015

25 சதவீத பழம், காய்கறிகள் உண்ண தகுதியற்றவை!

கோவை மாவட்டத்தில் விற்பனையாகும் பழங்கள், காய்கறிகளில் 25 சதவீதம் உட்கொள்ள தகுதியற்றதாக இருப்பதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் மீண்டும் உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லரை வியாபாரிகள் பழங்களை பெற்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் உணவு பாதுகாப்பு துறை ஆய்வில், கோவை மாவட்டத்தில் விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், 25 சதவீதம் உட்கொள்ள தகுதியற்றதாக இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலும், இதே நிலை நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:அவ்வப்போது உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பழங்கள் மற்றும் காய்கறிகளில், 25 சதவீதம் உண்ணத்தக்கதல்ல என்பது தெரிந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் பழங்கள், காய்கறிகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.தற்போதைய ஆய்வுப்படி இதே நிலை, நீடித்து வருகிறது. பழங்கள், காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து கிருமி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் பழங்கள், காய்கறிகள் கையாளப்படுவதால், இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளிட்டவை வளர்வதால், அவை உட்கொள்ள தகுதியற்றதாகவும், பாதுகாப்பாற்றதாகவும் மாறி விடுகின்றன. நுகர்வோர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கிருமிகளை அழிக்க என்ன செய்யலாம்?

காய்கறி மற்றும் பழங்களின் மேற்புற தோல் பகுதியில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் வளர்ச்சி இருப்பதால், அவை உட்கொள்ள தகுதியற்றதாக மாறுகின்றன. அனைத்து வகையான விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் இக்கிருமிகள் இருக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் இவற்றை வாங்கிய பின், 20 நிமிடம் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதுதவிர ஒரு மணி நேரம் ஊற வைத்த பின் பயன்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் 50 பி.பி.எம்., குளோரினை நீரில் கலந்து அந்நீரில் கழுவிய பின் பயன்படுத்தலாம்.