Saturday, May 16, 2015

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும்

குழந்தைக்கு பசும்பால் தரலாமா?

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். நான்கு மாதங்கள் முடிந்ததுமே, தாய்ப்பால் போதவில்லை என தெரிந்தவர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார்கள். அடிக்கடி அழும் குழந்தை வேறு அது உண்மையோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும். எந்த வயதில் இருந்து திட உணவு ஆரம்பிப்பது? அதை எப்படிப் பழக்குவது?

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய் சத்தான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், குழந்தைக்கு தேவையான பால் நிச்சயம் சுரக்கும். தாய்ப்பாலில் தான் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதிலேயே 88 சதவிகிதம் நீர் உள்ளதால், தனியாக தண்ணீர் தரத் தேவை இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு, திட உணவுகளை மெல்ல பழக்கலாம்.

உணவின் அளவில் கவனம் தேவை

எந்த உணவைக் கொடுத்தாலும், முதலில் ஒன்றிரண்டு ஸ்பூன் அளவுக்குத் தரலாம். பின், குழந்தை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியதும் ஒவ்வொரு ஸ்பூனாக அளவை அதிகரிக்கலாம். குழந்தை சாப்பிடுகிறது என்பதற்காக, அதிகமாகவும் ஊட்டக் கூடாது. ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துத் தர வேண்டும். பழைய உணவை சூடுசெய்து தரக் கூடாது.

குழந்தையின் செய்கைகளைக் கவனியுங்கள்

உணவை முதன் முதலில் ஊட்டும்போது, முகம் சுளித்து, உணவை குழந்தைகள் துப்பலாம். உடனே, நிறுத்திவிடக் கூடாது. மூன்று நான்கு நாட்கள் கொடுத்து பழக்க முயற்சிக்கவும். சாப்பிட மறுத்து அழுதால், அன்றைய தினம் தவிர்த்துவிட்டு, மறுநாள் அந்த உணவைக் கொடுத்துப் பழக்கலாம். உணவு தேவை எனில், ஸ்பூனை கையில் பிடிக்க முயற்சி செய்யும். இதன் மூலம், குழந்தை உணவைக் கேட்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

உப்பு, சர்க்கரைக்கு நோ

தாய்ப்பாலில் எந்த சுவையும் இருக்காது. ஆறு மாதங்கள் வரையில் எந்த சுவையையும் சுவைத்திடாத குழந்தைக்கு, சர்க்கரை, உப்பு கலந்த உணவை உடனே தரக் கூடாது. பனைவெல்லம், பனங்கல்கண்டு போன்ற இனிப்புகளையும் பழக்கக் கூடாது. தேனில் இருக்கும் பாக்டீரியா, குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

பசும்பால் வேண்டாம்

தாய்ப்பால் போதவில்லை எனில், மருத்துவர் பரிந்துரைக்கும் ஆயத்த பால் பவுடரைத் தரலாம். பசும்பால் ஜீரணம் ஆக தாமதமாகும் என்பதால், ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு தரக் கூடாது. தவிரவும் பசும்பாலின் சுவைக்குப் பழகிய குழந்தைகள், தாய்ப்பாலைத் தவிர்க்க நேரிடலாம்.

மசித்த காய்கறிகள், பழங்கள்

உருளைக்கிழங்கு, கேரட், பூசணி போன்ற காய்களை வேகவைத்து, நன்கு மசித்துத் தரலாம். ஒரு வாரம் முழுவதும் உருளைக்கிழங்கு என்றால், அடுத்த வாரம் கேரட் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். தோல் நீக்கிய காய்கறிகளை நன்கு மசித்த பிறகே கொடுக்க வேண்டும். இந்த உணவுகளில் உப்பைத் தவிர்க்க வேண்டும்.

தோல் நீக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றை மசித்து, மாவு போல மாற்றிய பின் தரலாம். ஒருவேளை, காய்கறி, ஒருவேளை பழம் என, மாற்றி ஊட்டுவது நல்லது. இதனால், குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உணவை மிக்ஸியில் போட்டு, அரைத்துக் கொடுக்கக் கூடாது.

வளரும் குழந்தைக்கு புரதம்

பருப்பு சாதத்தை நெய் விட்டு குழந்தைக்குக் கொடுக்கலாம். நன்கு வேகவைத்து, மசித்த பச்சைப் பட்டாணியும் குழந்தைக்கு நல்லது. முட்டையில் புரதம் உள்ளது. ஒன்பது மாத குழந்தைக்கு, வெறும் மஞ்சள் கருவை மட்டும் தரலாம். ஆனால், ஒரு வயது ஆன பிறகுதான், குழந்தைக்கு வேகவைத்த முழு முட்டை, மீன், கோழி போன்றவற்றைத் தர வேண்டும். இவற்றில் காரம், மசாலாவைத் தவிர்க்கவும்.

பசியைப் போக்கும் கஞ்சி

அரிசியை இரண்டாக உடைத்து கஞ்சி வைத்துத் தரலாம். இதேபோல் கேழ்வரகுக் கஞ்சியும் தரலாம். இந்தக் கஞ்சிகளை ஒரே நாளில் அதிக அளவு சாப்பிடத் தரக்
கூடாது. ஒவ்வொரு ஸ்பூனாக பழக்கப்படுத்தி, அளவை அதிகரிக்க வேண்டும்.

நல்ல பாக்டீரியாவுக்கு யோகர்ட்

கடைகளில் விற்கப்படும் பிளெயின் யோகர்டை, ஒன்பது மாதக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஃப்ளேவர்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், பாலைவிட யோகர்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், குழந்தைக்கு நன்மையைச் செய்யும்.

நீர்த்த பழச்சாறு

முதன் முதலில் பழச்சாறை அறிமுகப்படுத்தும்போது, ஒரு ஸ்பூன் பழச்சாற்றில் மூன்று ஸ்பூன் நீர் கலந்து நீர்த்த வடிவில் தர வேண்டும். ஏழாவது மாதம் தொடங்கிய பின், பழச்சாறுகளை அப்படியே தரலாம். ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, எலுமிச்சை போன்ற அனைத்துப் பழச்சாறுகளையும் கொடுக்கலாம். ஆனால், மாலை ஐந்து மணிக்கு மேல் தரக் கூடாது.

சிப்பர் / பாட்டிலை தவிருங்கள்

எந்த உணவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஸ்பூன், பாலாடை போன்றவற்றில் ஊட்டுவதே நல்லது. சிப்பர், பால் புட்டி போன்ற ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும். பால் புட்டி மற்றும் சிப்பரில் குடித்துப் பழகும் குழந்தைகளுக்கு, கை சப்பும் பழக்கமும் ஏற்படக்கூடும்.

நல்ல தண்ணீர்

திட உணவுகளை உண்ணும் குழந்தைக்கு, நீரும் அவசியம். வடிகட்டி, நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறிய நீரை குழந்தைகளுக்குக் கொடுப்பதே நல்லது.

முதுகைத் தட்டிவிடுங்கள்

தாய்ப்பாலோ, பிற உணவுகளோ கொடுத்த உடன் குழந்தைகளைப் படுக்கவைக்கக் கூடாது. குழந்தையின் முதுகில் மெதுவாகத் தட்டி ஏப்பம் வந்த பிறகுதான் படுக்கவோ, உட்காரவோ வைக்க வேண்டும். குழந்தைக்கு விக்கல் வந்தால், முதுகில் இதமாகத் தடவிவிட்டு, ஒரு ஸ்பூன் நீரை அருந்தக் கொடுக்கலாம்.

தாய்ப்பாலை சேகரிக்கலாம்

று மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலை, பாட்டிலில் சேகரித்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாலை, குழந்தைக்குக் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், பால் சேகரித்த பாட்டிலை ஒடும் தண்ணீரில் (Running tap water) காண்பித்து, குளிர்ச்சியைப் போக்க வேண்டும். ஃப்ரீசரிலிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை, சூடு செய்வதோ மீண்டும் குளுமைப்படுத்துவதோ கூடாது. ஒருமுறை சேகரித்துவைத்த பாட்டிலைத் திறந்து, குழந்தைக்குக் கொடுத்துவிட்டால், மீண்டும் மூடி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. நிறைய பாட்டில்கள் வாங்கிவைத்து, அதில், ஒருவேளை குழந்தைக்குத் தேவைப்படுகிற பாலை மட்டும் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கும் பாலை, ஒன்றிரண்டு வாரம் வரை ஃப்ரீசரில்வைத்துப் பயன்படுத்தலாம்.

ஒர் ஆண்டு வரை குழந்தைகளுக்கு அறுசுவையை அறிமுகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, இனிப்பு, உப்பு, காரத்தைத் தவிர்க்க வேண்டும்.

திட உணவுகளை ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கொடுக்கலாம். இடை இடையே தாய்ப்பாலும் அவசியம். ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒருமுறை என, அதிகப்படியான உணவைக் கொடுக்கக் கூடாது.

தாய்ப்பாலிலே லாக்டோஸ் சர்க்கரை (Lactose sugar) உள்ளதால், குழந்தைக்கு இனிப்புச் சுவை தேவைப்படாது.

கை சப்பும் குழந்தைகளை அடிக்கக் கூடாது. வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு குழந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கவும். பசி இருக்கிறதா என உறுதிசெய்துகொள்ளவும். மருத்துவரின் உதவியோடு, கை சப்பும் பழக்கத்தை நிறுத்தலாம்.

குழந்தையின் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வயது வரையாவது கொடுக்க வேண்டும்.

பசும்பால், தேன், வேர்க்கடலை, முட்டையின் வெள்ளை கரு போன்றவற்றை ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்.
 
 

சௌமியா
ஊட்டச்சத்து ஆலோசகர்