Saturday, May 23, 2015

தவறு செய்தவர்கள் தப்பவே முடியாது

உயிருக்கோ, வேலைக்கோ பாதுகாப்பு இருக்கிறது என்றால், யாராக இருந்தாலும் ஆட்டம் போடுவர். அதுவும், பெரிய இடத்தால், தனக்கு துன்பம் நேராது என்பது தெரிந்துவிட்டால், ஆட்டம் எல்லை மீறி போகும்.

ஒரு சமயம், கோபாலச் சிறுவர்களுடன், கண்ணனும், பலராமனும் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த பனங்காட்டில், தேனுகாசுரன் என்பவன், கழுதை வடிவில் வாழ்ந்து வந்தான். அவன், யாரையும் காட்டிற்குள் நுழைய விடுவதில்லை. அவனிடம் இருந்த பயத்தால், அக்காட்டிற்கு அருகில் கூட யாரும் போவதில்லை.

அன்று, அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில், பனம் பழ வாசனை காற்றில் தவழ்ந்து, மூக்கைத் துளைத்தது. அவற்றை உண்ண விரும்பிய கோபாலச் சிறுவர்கள், 'பலராமா... கண்ணா... இந்த பனங்காட்டில், ஏராளமான பனம் பழங்கள் இருக்கின்றன; ஆனால், தேனுகாசுரன் அவற்றை எடுக்க விடாமல் அட்டூழியம் செய்கிறான்...' என்றனர். 'அப்படியா... வாருங்கள் இப்போதே அங்கே சென்று பனம் பழம் சாப்பிடலாம்...' என்று கூறினான் கண்ணன்.

பலராமனும், கண்ணனும் மரத்தில் ஏறி பழங்களை உதிர்த்தனர்.

சத்தம் கேட்டு, ஓடி வந்தான் தேனுகாசுரன்.

பெரிய கழுதை உருவில், கோபாவேசத்தோடு வந்தவனைக் கண்டு, கோபாலச் சிறுவர்கள் பயந்து நடுங்கினர்.

தான் என்ன அக்கிரமம் செய்தாலும், கண்ணன் தன்னைக் கொல்ல மாட்டார் என்ற விஷயம் தேனுகாசுரனுக்கு தெரியும் என்பதால், அவன், கோபாலச் சிறுவர்களை விரட்டியதுடன், பலராமன் மார்பில், தன் பின்னங்கால்களால் உதைத்தான்.
உடனே, அவனின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து, 'கரகர'வெனச் சுழற்றி வீசினார் பலராமன்.

'ஆ' வென்று அலறியபடி கீழே விழுந்து உயிரை விட்டான் அசுரன்.

அவனைப் போன்ற கழுதை வடிவம் கொண்ட அசுரர்கள் பலர் ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இறந்தும் போயினர். கோபாலச் சிறுவர்கள் சந்தோஷமாக பனம் பழங்களை உண்டனர்.

பனங்காடு தேனுகாசுரனுடையது அல்ல; அவன், பலாத்காரத்தால் அதை ஆக்கிரமித்து, தன் வசப்படுத்தி வைத்திருந்தான்.

இதனால் தான், பொதுச் சொத்தை ஆக்கிரமித்து, தன்வசப்படுத்துவோரை, அடுத்த பிறவியில் கழுதையாக பிறப்பர் என்று சொல்வதுண்டு.

'இனி உன் வம்சத்தினர் யாரையும் கொல்ல மாட்டேன்....' என, பிரகலாதனிடம், பரவாசுதேவனான கண்ணன் கூறியிருந்தார்.

பிரகலாதன் பரம்பரையில் வந்த தேனுகாசுரனுக்கு இத்தகவல் தெரியும். அந்தத் தைரியத்தில், அட்டூழியங்கள் செய்து வந்தவனை, கண்ணன், தான் கொல்லாமல், பலராமரை விட்டுக் கொல்ல வைத்தார்.

தவறு செய்தவர்கள் தப்பவே முடியாது!