Friday, August 7, 2015

இவர்தான் ஷீர்டி சாயிபாபா. நீ இவரைச் சேர்ந்தவன்

ருநாள் இரவு, கனவா அல்லது நனவா என்று பிரித்து அறியமுடியாதபடி ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார் ரேகே.  படுத்துக்கொண்டு இருந்த ரேகே தம்முடைய உடலை விட்டுத் தனியே எழுந்து, தன்னுடைய உடலையே பார்த்தபடி இருக்கிறார். அப்போது, அவர் அருகில் மகாவிஷ்ணு தோன்றுகிறார். சில நொடிகளில் மகாவிஷ்ணுவுக்கு அருகில் மற்றும் ஒருவர் தோன்றுகிறார். 

''இவர்தான் ஷீர்டி சாயிபாபா. நீ இவரைச் சேர்ந்தவன். இவருடைய தர்பாரில் உனக்குத் தனியான இடம் உண்டு. நீ இவரைத்தான் நாடவேண்டும்'' என்று சொல்லிவிட்டு மகாவிஷ்ணு மறைந்துவிடுகிறார்.

இந்தக் காட்சியைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் மற்றும் ஒரு காட்சியும் அவருக்குத் தெரிந்தது. ரேகே வானத்தில் பறந்து சென்று, ஷீர்டியை அடைகிறார். அங்கிருந்து நேரே துவாரகாமாயிக்குச் செல்கிறார். தம்முடைய கால்களை நீட்டியபடி அமர்ந்திருக்கும் பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கிறார் ரேகே.

இந்தக் காட்சிகள் இரண்டும் ரேகேவின் மனத்திரையில் ஆழமாகப் பதிந்துவிட்டன. சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த ரேகே, உடனே ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசிக்கவேண்டும் என்றும், தான் கண்ட காட்சி உண்மைதானா என்பதை அறியவும் ஆர்வம் கொண்டார். ஆனாலும், படிப்பின் காரணமாக அவரால் உடனே ஷீர்டிக்குச் செல்ல முடியவில்லை. சில நாட்கள் கழித்து, ஷீர்டிக்குச் செல்லும் பாக்கியம் கிட்டியது.

துவாரகாமாயியில் தான் கனவில் கண்டதுபோலவே, பாபா தம்முடைய கால்களை நீட்டியபடி உட்கார்ந்திருப்பதையும், அவருடன் பல பக்தர்கள் இருப்பதையும் கண்ட ரேகே, பாபாவின் திருவடிகளில் தலை வைத்து வணங்கினார். உடனே பாபா அவரிடம், ''நீ ஒரு மனிதனின் காலில் விழுந்து வணங்கலாமா?'' என்று கேட்டார்.

ரேகேவுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் கண்ட காட்சியில் பாபாவே தம்முடைய குரு என்று தெரிந்ததால்தானே, ஷீர்டிக்கு வந்தோம். ஆனால், பாபாவோ தாம் மனிதன் என்றும், தம்முடைய காலில் ரேகே விழலாமா என்றும் கேட்கிறாரே என்றெல்லாம் நினைத்தபடி, குழப்பத்துடன் சற்று தள்ளிப்போய் அமர்ந்து, சிந்திக்கத் தொடங்கினார்.

ரேகே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தாலும், மகான்களிடம் அளவற்ற மதிப்பு வைத்திருந் தாலும், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே, அவர்களுடைய கால்களில் விழுவது எப்படிச் சரியாகும் என்று உள்ளூர எண்ணம் கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் சட்டம் படிப்பவர் அல்லவா? அவருடைய எண்ணத்தில் ஏற்பட்ட இத்தகைய சஞ்சலங்களை எல்லாம் போக்கி, ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பாபா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார் போலும்! சிந்தித்துப் பார்த்த ரேகேவுக்கு இந்த உண்மை புரிந்தது.

'சரி, எதற்கும் பாபாவையே கேட்டுவிடலாம்' என்று நினைத்தவராக, ரேகே மீண்டும் பாபா அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றார். அப்போது பாபாவின் அருகில் இருந்தவர்கள் எல்லோரும் போய்விட்டிருந்தார்கள். பாபா தனியாக இருக்கும் அந்தப் பிற்பகல் வேளையில் அவரை யாரும் தரிசிக்கக்கூடாது என்பது ஒரு நியதியாகவே இருந்தது. இதுபற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த ரேகே சற்றுத் தயங்கினார். ஆனாலும், பாபாவிடம் தம்முடைய சந்தேகத்தைக் கேட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவருடைய தயக்கத்தை விரட்டி, அவரை துவாரகாமாயிக்குள் செல்ல வைத்தது.

பாபாவிடம் சென்ற ரேகே, அவரை மறுபடியும் தலை தாழ்த்தி நமஸ்கரித்தார். அவருடைய தோளைத் தொட்டு எழுப்பிய பாபா, அவரைத் தம்முடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். ''நீ என்னுடைய குழந்தை. நீ எனக்குச் சொந்தமானவன்'' என்று சொன்னார். பாபாவின் அன்பு ததும்பும் இந்த வார்த்தைகள் ரேகேவைப் பரவசம் அடையச் செய்தன. தான் கனவில் கண்ட காட்சி நனவானதில் ரேகேவுக்கு அளவற்ற மகிழ்ச்சி! தம்முடைய உபாசனா தெய்வமான மஹாவிஷ்ணு கனவுக் காட்சியில் தெரிவித்தபடி, பாபா தமக்கு குருவாக வாய்த்துவிட்டார் என்று மன நிறைவு பெற்றார்.

பாபாவுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் தாயாக இருக்கும் பாக்கியம் பெற்ற ராதாகிருஷ்ண மாயி பற்றி ஏற்கெனவே பார்த்தோம். ரேகேவை ராதாகிருஷ்ண மாயி வீட்டில் தங்க வைக்கும் அளவுக்கு பாபா ரேகேவிடம் தனிப் பிரியம் வைத்திருந்தார். பாபாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாகக் கருதப்பட்ட தீட்சித் போன்றவர்கள்கூட விடுதியில்தான் தங்குவார்கள். ஆனால், ரேகேவை மட்டும் எப்போதும் ராதாகிருஷ்ண மாயியின் பராமரிப்பிலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டார் பாபா. அந்தத் தாய்தான் தம்முடைய செல்லப் பிள்ளையான ரேகேவைப் பாசத்துடனும் பரிவுடனும் கவனித்துக் கொள்வார் என்று பாபா நினைத்தார் போலும்!

தினமும் ராதாகிருஷ்ண மாயி சாயி நாமம் ஜபிக்கும்போது, அவருடன் சேர்ந்து தாமும் சாயி நாமம் ஜபிப்பார் ரேகே. ஒருநாள், அவர் அப்படி சாயி நாமம் ஜபித்துவிட்டுத் துவாரகாமாயிக்கு வந்தபோது, பாபா அவரிடம், ''இன்று காலை என்ன செய்துகொண்டிருந்தாய்?'' என்று கேட்டார்.

''நான் ஜபம் செய்துகொண்டு இருந்தேன்'' என்றார் ரேகே.

''என்ன நாமத்தை ஜபம் செய்து கொண்டு இருந்தாய்?'' என்றார் பாபா.

''என்னுடைய தெய்வத்தின் நாமத்தைத் தான் ஜபித்துக் கொண்டு இருந்தேன்'' என்றார் ரேகே.

பாபா திரும்பவும் அவரிடம், ''உன் தெய்வம் யார்?'' என்று கேட்டார்.

''என்னுடைய தெய்வம் யார் என்பது தங்களுக்கே தெரியும்'' என்றார் ரேகே. அதைக் கேட்டு பாபா புன்னகைத்தார்.

பின்னர் ஊருக்குத் திரும்பிய ரேகே, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஷீர்டிக்குச் சென்றார். செல்லும்போது ஒரு கேமராவையும் எடுத்துச் சென்றார். முன்பு போலவே அவரை அன்புடன் வரவேற்றார் பாபா. ரேகே தாம் கொண்டு வந்திருந்த கேமராவில் பாபாவைப் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார். ஆனால், அவர் பாபாவின் அனுமதியைக் கேட்கவே இல்லை. ரேகே படம் எடுப்பதை பாபாவும் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. படங்கள் எடுத்து முடித்ததும், ரேகே படச்சுருளைக் கழுவிப் பார்த்தார். அந்தப் படங்களில் பாபாவுடன் இருந்த எல்லோரும் இருந்தார்களே தவிர, ஒரு படத்தில்கூட பாபா இல்லை. கடைசியாக எடுத்த படத்தில் மட்டும், தம்முடைய குழந்தையான ரேகேவிடம் இரக்கம் கொண்டவராக, தம்முடைய திருவடி தரிசனம் தந்திருந்தார் பாபா.

இந்தச் சம்பவத்தின் மூலம், பாபா நடமாடும் தெய்வம் என்பதை ரேகே பரிபூரணமாகப் புரிந்துகொண்டார்.

அதன் பிறகு, ரேகேவுக்கு எத்தனையோ அனுபவங்கள். பாபாவை தரிசித்த பிறகு, சில வருஷங்களில் அவருக்குத் திருமணம் ஆனது. ரேகேவின் மனைவி கருத்தரிக்கவே, பாபாவிடம் சென்று அவருடைய ஆசிகளைப் பெற்று வருவதற்காக ரேகே ஷீர்டிக்குச் சென்றார்.

''என்னுடைய பரிசு ஒன்று உன்னிடம் இருக்கிறது'' என்று சொல்லி ரேகே தம்பதியரை ஆசிர்வதித்த பாபா, அவர்களுக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

உரிய காலத்தில் அழகான குழந்தையும் பிறந்தது. பாபாவின் ஆசிகளைப் பெறுவதற்காக மீண்டும் குழந்தையுடன் மனைவியை அழைத்துக்கொண்டு ஷீர்டிக்கு வந்தார் ரேகே