Friday, August 14, 2015

வாழும் கலையை வலிகள் இல்லாமல் கற்றுத் தெரிந்துக் கொள்வது லேசானது இல்லை

வாழ்க்கைப் பயணத்தில் முட்களும், கூர்மையான கற்களும் நிறையவே இருக்கின்றன. எவ்வளவு தான் கவனமாக நடந்தாலும், சில சமயங்களில், காயங்களும், வலிகளும், தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. வாழும் கலையை வலிகள் இல்லாமல் கற்றுத் தெரிந்துக் கொள்வது, அவ்வளவு லேசானது இல்லை.
எந்த சந்தர்ப்பத்தில் எப்படி பேசி நடந்துக் கொள்வது, எதை சீரியசாக எடுத்துக் கொள்வது, எவற்றையெல்லாம் மிகச் சாதாரணமானது என்று தாண்டிப் போவது போன்றவை, நாம் எவ்வளவு தான் படித்து பட்டம் பெற்றிருந்தாலும், அவ்வளவு லாவகமாக கை வருவதில்லை.

நமக்கு தெரிந்தவற்றை மட்டுமே, புரிபவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம். அந்த வட்டத்தை தாண்டி வரவோ, அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை, வலிகளை எதிர் கொள்ளவோ நாம் பயப்படுகிறோம்; தயங்குகிறோம்.

எங்கள் பெரியப்பா கூறிய ஒரு வார்த்தை, ஆழமாக யோசிக்க வைத்தது.
'வலியை அனுபவியுங்கள்; அதை பரிபூரணமாக உணருங்கள். ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள். வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகிவிடும்!'

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு வலிகள், அவமானங்கள், நமக்கு பிறராலும், பிறருக்கு நம்மாலும் ஏற்படுகின்றன.

சில வலிகளை நாம் உடனே தாண்டி வர நினைத்தாலும், அதை நாம் உணர விரும்புவதில்லை. அந்த வலி தரும் அவமானங்களை சந்திக்க, தயங்கியே நின்று கொண்டிருப்போம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு நல்ல மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி கத்தினாலும், கதறினாலும், தன் சிகிச்சையை செய்து கொண்டேயிருப்பார். நோயாளிக்கு வலித்தாலும், அங்கே கருணை பற்றிய நினைப்பின்றி, கடமை பற்றிய நினைப்போடு மருத்துவர் நடந்து கொள்கிறார்.
ஒரு மருத்துவரே இப்படி கடமையில் சரியாக நடக்கிறார் எனும்போது, இயற்கையை சந்தேகிக்கலாமா? இங்கு, 'நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் போலத்தான் இயற்கை நம்மை பக்குவப்படுத்துகிறது; எதற்கோ நம்மை தயார்படுத்துகிறது' என்று அந்த நேரத்து வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் வலியோ, மன வலியோ, காரணம் இல்லாமல் ஏற்பட்டிருக்காது. காரணம் நமக்கு தெரியும்; விளைவும் நமக்கு தெரிந்திருக்கணும்.

ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து விட்டால், அதன் வலிமை தெரிந்து விடும்; பின், கொஞ்சம் கொஞ்சமாய், அதன் தீவிரம் குறைந்து விடும். இதைத் தான் பெரியப்பா சொத்தை பல் விஷயத்திற்கு சொன்னதாக நான் எடுத்துக் கொண்டேன். தனக்கு தானே வெற்றி கொள்ள நினைப்பவர்கள் அமைதியையும், சந்தோஷத்தையும் நிரந்தரமாக தக்க வைப்பதற்காக தன்னை தானே வெற்றிக் கொள்வது மிகவும் அவசியம்.

பிறரை வெற்றி கொள்கிறவன் பலசாலி.
தன்னைத்தானே வெற்றிக் கொள்கிறவன்
மிகவும் சக்தி வாய்ந்தவன்!

ஆனால் முடியமாட்டேன் என்கிறது என்பது தானே உங்கள் வாதம்!
'என்ன காரணம் கொண்டும், வலிகளையும், வேதனைகளையும், என் மேல் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன்' என்று நமக்குள்ளேயே நாம் தீர்மானமாய் இருக்கணும்.

நேர்மறையான எண்ணத்தை நமக்கு நாமே தான் வளர்த்துக் கொள்ளவேண்டும். இதெல்லாம் சாத்தியமேயில்லை என்கிறீர்களா? சரி, உங்கள் வழிக்கே வருகிறேன்...

நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு, வலியையும், வேதனையையும் தாங்கும் திறன் அதிகமாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது. நாமும் கொஞ்சம் நேர்மறையாக யோசிப்போமே! கொஞ்சம் கொஞ்சமாக அதுவே நம் பழக்கமாகிவிடும்.

துன்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் உண்மை என்ற போதிலும், அதுவே மகிழ்ச்சி நிலையை அடைவதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப்படலாம். ஞானிகளும், அவதாரங்களும் துன்பத்திற்கு தரும் விளக்கம் இதுவே. அவர்கள் வலிகள், துன்பங்கள், சோதனைகளிலிருந்து ஆனந்தத்தையும், களிப்பையும் உணர்ந்து, வாழ்க்கையை அனுபவித்தனர்.

வலி என்பது ஒரு துன்பம்... 
அந்த துன்பம் ஓர் எச்சரிக்கை; 
அது ஒரு வழிக்காட்டியும் கூட!

வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஒப்பவாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழி காட்டும். நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம், நமக்கு தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.