Monday, August 24, 2015

உங்கள் குழந்தை சேட்டை பண்ணுகிறதா... சந்தோஷப்படுங்கள்!

உங்கள் குழந்தை சேட்டை பண்ணுகிறதா... சந்தோஷப்படுங்கள்!

ங்கள் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் ஷூவைத் தூக்கி எறிகிறதா? கண்ணில் படுவதை எல்லாம் எட்டி உதைக்கிறதா? என்ன கொடுத்தாலும் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! 'இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது?' என்று எரிச்சலாகிறீர்களா? இதில் எரிச்சலாக என்ன இருக்கிறது... சொல்லுங்கள்! குழந்தை என்றால் அப்படித்தான் சுட்டித்தனம் செய்யும். உங்கள் குழந்தை மட்டுமல்ல... எல்லா குழந்தைகளும் இப்படிச் சேட்டைக்காரர்கள்தான். அதுதான் குழந்தை! ஆனால், 90% மேலான பெற்றோர்கள், அந்தக் குழந்தைத்தனத்தைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைத் திருத்துவதாக நினைத்து மிரட்டுவது, அடிப்பது, தண்டனை கொடுப்பது என்ற பெயரில், அவர்களின் திறமைகளை, உணர்வுகளை, நல்ல எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பல கனவுகள் காண்கிறார்கள். `என் பிள்ளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும்' என்று நினைக்கிறார்களே தவிர, அவனை நல்ல மனிதனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கும்போது. ஆனால், வளர்ப்பு முறைதான் அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை தீர்மானிக்கிறது. சில பெற்றோர், குழந்தையின் ஒவ்வொரு அடியையும் தங்கள் விருப்பப்படியே நிகழ்த்துவார்கள். சிலரோ, சுதந்திரம் என்ற பெயரில் கண்காணிப்பை விட்டுவிடுவார்கள். இந்த இரண்டு அணுகுமுறைகளுமே தவறு. அளவான சுதந்திரமும், அவசியமான கண்டிப்பும் இணையும்போதுதான், குழந்தையை நல்லவிதமாக வளர்த்தெடுக்க முடியும்.

குழந்தையின் நடவடிக்கைகளை சரியாகப் புரிந்துகொள்வது, நல்ல பெற்றோருக்கான அம்சம். ஒரு குழந்தை கையில் எது கிடைத்தாலும் தூக்கி எறிகிறது என்றால், அவனுக்கு ஈட்டி எறிதல், பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுக்கான திறமையும், ஆர்வமும் இருக்கலாம். சில குழந்தைகள் கையில் எது கிடைத்தாலும் எடுத்து சுவரில், தரையில் என கிறுக்கிக்கொண்டிருக்கும். அவர்களுக்கு இயல்பாகவே ஓவியத்திறமை அமையப் பெற்றிருக்கலாம். ஆனால், அப்படி அதன் ஆர்வத்தையும், திறனையும் கவனிக்காமல், அதில் தொடர்ந்து ஊக்குவிக்காமல்... டாக்டர், இன்ஜினீயர் என்று பொருளீட்டுவதை முன்னிலைப்படுத்திதான் அதன் எதிர்காலத்தை தயார் செய்ய நினைக்கிறார்கள் பெற்றோர்கள் பலரும். இப்போது ரியாலிட்டி ஷோக்களின் விளைவாக, நடனமே வராத குழந்தையை டான்ஸ் கிளாஸ் அனுப்புவது, ஆர்வமில்லாத பிள்ளையை பாட்டு கிளாஸ் அனுப்புவது என்று படுத்தும் பெற்றோர்களும் பெருகிவருகிறார்கள்.

சமீபத்தில் என்னிடம் ஒரு மூன்று வயதுக் குழந்தையை அழைத்துவந்தார்கள். அந்தக் குழந்தை எதற்கெடுத்தாலும் பொய் சொல்வதாகச் சொன்னார்கள். அதனிடம் தனியாகப் பேசியபோது, பொய் அதன் இயல்பாகிவிட்டது புரிந்தது. அதற்குக் காரணம் தேடியபோது, அதன் குடும்பமே விடையாக இருந்தது. வீட்டுப் பெரியவர்கள் குழந்தை முன் பொய் பேசியது ஒரு காரணம். 'தண்ணியைக் கீழே கொட்டினியா?' என்ற அதட்டலுக்கு, 'நான் இல்லம்மா. அப்பா கொத்தித்தாங்க' என்று அது மழலையில் பொய் சொன்னபோது, 'எவ்ளோ சாமர்த்தியமா பேசுது பாருங்க!' என்று அதன் பொய்யை வீடே கொண்டாட, அதுக்குப் பொய் பிடித்துப்போய்விட்டது. எனவே, குழந்தைகளின் தவறுகளை ஒருபோதும் ரசிக்காதீர்கள்; கண்டியுங்கள்.

குழந்தைகளின் முதல் ரோல்மாடல் பெற்றோர்கள்தான். எனவே, அவர்கள் முன் நல்ல பெற்றோராக, நல்ல மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள். 'குழந்தைதானே, அதுக்கு என்ன தெரியப்போகுது?' என்று அதன் முன் பேசக்கூடாதவற்றை பேசாதீர்்கள்; செய்யக்கூடாதவற்றை செய்யாதீர்கள். குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். பென்சில், பாக்ஸ், ஷூ என்று அதற்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கும்போதும், அந்தப் பொருளின் விலை, அதை உருவாக்கத் தேவைப்படும் உழைப்பு என்று அதன் மதிப்பை உணர வையுங்கள்.

இன்றைய குழந்தைகளிடம் தலைமுறை இடைவெளி காரணமாக, ஒரு அதிகப் பிரசங்கித்தனம் இருக்கிறது. ஆனால், 'நாம நம்ம அப்பா, அம்மாகிட்ட இருந்த மாதிரியா இருக்குதுங்க? இதுங்க எல்லாம் அடங்கவே அடங்காதுங்க!' என்று அதையே 'டேக்கன் ஃபார் கிரான்டட்' ஆக, அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். நேரம் ஒதுக்கி, குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள். ஒரு விதை, நன்றாக முளைத்துச் செழிப்பதற்கும், நோஞ்சானாக மடிவதற்கும் காரணம்... அதன் வளர்ப்பும், வீரியமும்தான்.

குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் சுதந்திரமாக விளையாட அனுமதியுங்கள். கல், மண், செடி என்று இயற்கையின் மடியில் இளைப்பாறவிடுங்கள். 'அழுக்காயிடும், இன்ஃபெக்‌ஷனாயிடும்' என்று பொத்திப் பொத்தி வளர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி எங்கிருந்து கிடைக்கும்? நாளை உங்கள் குழந்தை இந்த உலகத்தை, இந்த மண்ணை, இந்தக் காற்றை, இந்த தூசை எல்லாம்தான் சந்திக்கவிருக்கிறது, இதையெல்லாம் தாண்டிதான் சாதிக்கவிருக்கிறது... மறவாதீர்கள்.  

கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை உங்கள் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளின் அடம், பிடிவாதத்தை முளையிலேயே கிள்ளுங்கள். நான்கு வயதுப் பையன் ஒருவன், என்ன சொன்னாலும் கேட்காமல், வாயில் கை வைப்பதும், மூக்கை நோண்டுவதுமாக ஏதேதோ செய்து அடம்பிடித்துக்கொண்டிருந்தான். 'அப்படியெல்லாம் செய்யக்கூடாது' என்று நான் சொன்னபோது, ஆற்றாமையில் தரையில் புரண்டு அழுதான். இதுவே அவன் வீடாக இருந்திருந்தால், அவன் கேட்டது கிடைத்திருக்கும்; நினைத்தது நடந்திருக்கும். ஆனால், நான் அவன் அடத்துக்கு வளையாமல் இருக்க, அதுதான் அவன் மூர்க்கத்தனத்துக்குக் காரணம் என்பது புரிந்தது. 'இவ்வளவு அடம், இவனுக்கு எங்கயிருந்து வந்தது?' என்று நான் கேட்க, அதை அவனிடம் வளர்த்துவிட்டிருந்த அவன் பெற்றோர் மௌனமாக நின்றார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு நல்ல பாலம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும். முன்பு கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, யாராவது ஒருவர் குழந்தையைக் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அதனால் குழந்தைகள் தவறான வழிகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார்கள். முன்பெல்லாம் டி.வி-யில் ஒரு முதலிரவு காட்சியோ, கற்பழிப்பு, ஆபாசக் காட்சியோ வந்தால் அருகில் உள்ள குழந்தையின் கண்களை மூடிப் பார்க்க விடாமல் செய்வார்கள் பெரியவர்கள். ஆனால், இன்றோ குழந்தைகள் கையில் ரிமோட்டை கொடுத்துவிட்டு தங்கள் வேலையை செய்யப் போய்விடுகிறார்கள். சிறுவயதில் குழந்தைகள் தடம்புரள விரிந்திருக்கும் வாய்ப்புகளில் இருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது, பெற்றோரின் கடமையே!

படிப்பு என்ற பெயரில் குழந்தைகளைச் சித்ரவதை செய்யாதீர்கள். நல்லொழுக்கத்தின் ஒரு பகுதியாகதான் படிப்பு இருக்க வேண்டுமே ஒழிய, படிப்புடன் ஒரு பகுதியாக நல்லொழுக்கத்தை இனியும் பார்க்காதீர்கள். காஸ்ட்லியான ப்ராஜெக்ட்டுகள் கொடுக்கும் பள்ளி வேண்டாம்; குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கும், திறமைக்கும், தேடலுக்கும், நல்லொழுக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதோடு படிப்பையும் கற்றுத்தரும் பள்ளியைத் தேர்ந்தெடுங்கள்.

இனியும் உங்கள் குழந்தையைப் பற்றி, 'சட்டையை கழட்டி அங்கே போடுறான்', 'பேக்கை தூக்கி வீசுறான்' என்று புகார் சொல்லாமல்... கொஞ்சம் அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்களின் நல்ல எதிர்காலத்தை கைதட்டி, விசில் அடித்து மகிழ்ச்சியோடு ரசிக்கலாம்!

குழந்தை பாதுகாப்பு டிப்ஸ்!

ஆண் குழந்தை களுக்கு பேன்ட்டில் ஜிப் அணிவிக்கும்போது, அதிகக் கவனம் தேவை. ஜிப், குழந்தையின் பிறப்புறுப்பின் மென் தோலில் சிக்கி, குழந்தை துடிதுடித்து, அதை மீண்டும் 'அன் ஜிப்' செய்யவும் முடியாமல் அப்படியே குழந்தையை மருத்துவமனைக்கு அள்ளிக்கொண்டு பெற்றோர் ஓடிய கதைகள் நிறைய உண்டு.

சுவர் விளிம்புகள், கதவு, மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும். குழந்தைகள் ஓடி விளை யாடும்போதோ, விழும்போதோ, நெற்றியில் இடித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதே போல, குழந்தைகள் அறைக் குள் சென்று கதவை தாழ் போட்டுக்கொள்ளா வண்ணம், தாழ்ப்பாளை உயரமாக அமைக்கவும்.