Sunday, August 30, 2015

வெற்றி மந்திரங்கள்!


வெற்றி மந்திரங்கள்!

புத்தகத்தின் பெயர்: தந்தா – ஹெள குஜராத்திஸ் டூ பிசினஸ்

ஆசிரியர்: ஷோபா பொன்ரே (மராத்தி மூலம்);  ஷலாக்கா வாலிம்பே (ஆங்கிலம்)

பதிப்பாளர்: ராண்டம் ஹவுஸ் இண்டியா


ந்தியாவில் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் எதுவென்று கேட்டால், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது குஜராத்தும், மகாராஷ்ட்டிரமும்தான்.   2011-ல் `தி எக்கானமிஸ்ட்' பத்திரிகை தயாரித்த அறிக்கையின்படி, இந்தியாவின் `குவாங்டாங் (Guangdong)' என அழைக்கப்பட்ட மாநிலம் குஜராத்தான்! 

இந்த மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல்களும், ஷாக்களும் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அப்படி அவர்கள் தங்களது தொழிலில் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதை ஏறக்குறைய 280 பக்கங்களில் தெளிவாக, எளிமையாக, `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல ஐந்து தொழிலதிபர்களின் அனுபவங்களையும், அவர்களின் வெற்றி மந்திரங்களையும் பதிவுசெய்து சமீபத்தில் வெளியாகி இருக்கிறது `தந்தா' (Dhandha) என்கிற புத்தகம். `தந்தா' என்றால் இந்தியில் `வியாபாரம்' என்று அர்த்தம்.


இந்தப் புத்தகம் பிரபல மராத்தி எழுத்தாளர் ஷோபா பொன்ரேவால் எழுதப்பட்டு, ஷலாக்கா வாலிம்பேயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து பேரில் முதலாமவர் பீம்ஜிபாய் பட்டேல் என்கிற பிரபல வைர வியாபாரி. சூரத் நகரில் 120 ஏக்கர் பரப்பளவில் வைர வியாபாரம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் கொண்ட டைமண்ட் நகரின் துணை நிறுவனர். (பின்னாளில் இவருக்கும் இன்னொரு நிறுவனருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இவர் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார்).

இவருடைய இளமைப் பருவத்தில் இவர் படாத சிரமங்கள் இல்லை. பத்திரிகை வாசிப்பின் மூலம் தனது வாசிப்புத் திறமை யையும், உலக ஞானத்தையும் வளர்த்துக்கொண்டவர். பெரும்பாலான நாட்கள் தனது கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துவந்ததால், பள்ளிக்கூடம் செல்லவியலாத நிலை. தனது நண்பன் மூலம் மறுநாள் வகுப்புத் தேர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு பள்ளிக்குச் சென்ற இவர் தேர்வை நன்கு எழுதி அதிக மதிப்பெண் பெற்றார். இருந்தாலும் `வருகைப்பதிவு' குறைவு என்பதால் அப்போதிருந்த தலைமையாசிரியர் இவரை இனிமேல் பள்ளிக்கு வரவேண்டாமென்று கூறிவிட்டார். மொத்தமாக தனது வாழ்நாளில் இவர் பள்ளிக்கூடத்துக்கு சென்ற நாட்கள்  பதினைந்துதான்!


தனது கிராமத்தில் இருந்த நண்பர் மூலம் சூரத் சென்று அங்கு பிரபலமாக இருக்கும் `டைமண்ட் கட்டிங்' தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் (கட்டிங், பாலிஷிங், க்ரேடிங் போன்றவை) வேலை செய்து முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதன்பின் தனியாக பிசினஸ் செய்யத் தொடங்கினார். தனது சகோதரர்கள் மூவரையும் அந்தத் தொழிலில் ஈடுபடுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவில் நிபுணர்கள் ஆனார்கள். தொழில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றது. சில ஆண்டுகளில் சூரத்தில் 60 லேத் மெஷின், 120 பாலிஷிங் மெஷின், 300 தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ஆனார்.


1970-ம் ஆண்டு மும்பையில் வீடு வாங்க ஆரம்பித்தார்.  டில்லியில் ஒரு கிளை அலுவலகத்தைத் திறந்தார். அதன்பின் சிகாகோ, லண்டன், ஆண்ட்வெர்ப் (உலக அளவில் வைரத் தொழில் ஜொலிக்கும் நகரம், பெல்ஜியம் நாட்டில் உள்ளது) என அவரது சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது.


இப்போது இவர் தனது எழுபதுகளில் இருக்கிறார். தன்னால்தான் படிக்க முடியாமல் போய்விட்டது அந்த நிலை தனது கிராமத்தைச் சார்ந்த மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவருடைய அம்மாவின் நினைவாக ஹாஜிராதர் என்கிற இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். அதில் இன்றைக்கு ஏறக்குறைய 700 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.


அடுத்து, மோகன்பாய் பட்டேல். இவர் இங்கிலாந்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். 1960-களில் டாடா நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, அதன்பின் சொந்தமாக பட்டேல் எக்ஸ்ட்ரூஷன் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரிஸின் கீழ் 11 நிறுவனங்களை நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்று உலகளவில் புகழ்பெற்ற மெட்டல்பாக்ஸ் நிறுவனத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். 


தான் சொந்த நிறுவனம் ஆரம்பித்து நடத்துவதற்கு முன்பாக டாடா நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ய விரும்பி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோது அவரது உயர் அதிகாரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பகுதி நேர வேலை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், சம்பளத்தில் மாற்றம் இல்லை. இதுபோல மூன்று முறை இவரது ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக பல வருடங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக கடிதம் கொடுக்கப்பட்டபோது மோகனின் பிடிவாதத்தின் பேரில் அவருடைய ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

டூத்பேஸ்ட் மற்றும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான `கொலாப்சபில் அலுமினியம் ட்யூப்' உற்பத்தியில் உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனம் இது. இவர் தனது வெற்றிக்கு காரணமாக சொல்வது விடாமுயற்சி, எடுத்துக்கொண்ட விஷயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, எப்போதும் எளிமையு டனும், மரியாதையுடனும் நடந்துகொள்வது போன்றவைகளைத்தான். திமிராக நடந்துகொண்டால் அது எதிரியைத்தான் உருவாக்கும் என்பது இவர் மற்றவர்களுக்கு சொல்லும் பாடம்.


மூன்றாவதாக, தள்பட்பாய் பட்டேல். இவர் பரோடா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். இன்றைக்கு இவரும், இவருடைய உறவினர்களும் சேர்ந்து ஏறக்குறைய 65 மோட்டல்களை (சாலையோர ஹோட்டல்களை) வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் அமெரிக்கர் ஒருவரால் நஷ்டத்தில் இயங்கி வந்த 29 அறைகள் கொண்ட `இம்பீரியல் இன்' என்கிற மோட்டலை 1970-ல் தனது சேமிப்பு, சகோதரியின் சேமிப்பு, கடன் என பலவகையிலும் பணம் திரட்டி அதை 1,85,000 டாலருக்கு வாங்கினார்.

ஆங்கிலமே தெரியாத மனைவியை மோட்டலின் ரிசப்ஷனில் உட்கார வைத்து, மோட்டல் ஒரு ஸ்திரநிலையை அடையும்வரை தான் பார்த்து வந்த வேலையைத் தொடர்ந்தார். மொழி தெரியாத தனது மனைவி சந்தித்த பல கஷ்டங்களையும், நிறம் மற்றும் கலாசார வேறுபாட்டால் எதிர்கொண்ட சவால்களையும், அதை சமாளித்த விதத்தையும் நூலாசிரியர் மூலம் விளக்கியிருக்கிறார் தள்பட்.


ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டால் வெற்றி நிச்சயம் என்பது இவருடைய வெற்றியின் சூத்திரம்.

இந்த மோட்டல் உரிமையாளரின் புகழ் அவர் வசித்துவந்த பகுதியில் பரவியது. அதை அறிந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை மேயர் பதவிக்கு போட்டியிடும்படி கூற, அவரும் தயக்கத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்று மேன்ஸ்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் மேயர் பொறுப்பை ஏற்றார். இன்றைக்கு அமெரிக்காவில் விருந்தோம்பல் (Hospitality) தொழிலில் பட்டேல், ஷாக்களின் பங்கு ஏறக்குறைய 55 சதவிகிதம்!


நான்காவதாக, மேக்ஸ் நியூயார்க் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டான ஜெய்தேவ் பட்டேல். இவர் கடந்த முப்பது ஆண்டுகளில் விற்பனை செய்த பாலிசிகளின் மதிப்பு சுமார்  2.5 பில்லியன் டாலர். (அதாவது, 16,000 கோடி ரூபாய்). முதல் வருடத்திலிருந்து முப்பது ஆண்டுகள் வரை இவர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் `மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள்' அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். ஒருகட்டத்தில் அதன் `பிரசிடென்ட்'-ஆகவும் இருந்தவர். இவர் இந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இரண்டு வருடத்தில் எட்டு நிறுவனங்களில் வேலை பார்த்தார். அது இவருடைய நேர்மைக்கு கிடைத்த பரிசு(!).


இறுதியாக, இன்ஷூரன்ஸ் சம்பந்தமாக எதுவுமே தெரியாத இவர், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்து, தேர்வு எழுதி ஏஜென்ட்டாகச் சேர்ந்தார். விற்பனையாளருக்குத் தேவையான பேச்சுத் திறமையெல்லாம் இவரிடம் அப்போது இல்லை. மிகவும் அமைதியாக, குறைவாகவே பேசக் கூடியவர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக ஏறக்குறைய 200 நாட்கள் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு பரபரப்பாக செயல்பட்டார்.

இவரிடம் பாலிசி எடுத்தவர்களின் குடும்பத்தில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இன்ஷூரன்ஸ் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு விடும். இவருடைய வெற்றிக்கான மந்திரம் எதையும் சாதிக்க முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கை, நெருங்கிப் பழகி பாலிசிதாரர்களிடம் உறவை வளர்த்துக் கொண்டதுதான்!


இறுதியாக, ஹெர்ஷா குழுமத்தைச் சேர்ந்த ஹாசு ஷா அவரது மனைவி ஹெர்ஷா ஷா மற்றும் அவர்களது மகன்கள் ஜே ஷா, நீல் ஷா. இவர்களும் குஜராத்திலிருந்து சென்று அமெரிக்காவில் ஹோட்டல் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். 1979-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பியவுடன் ஹாசு முன்பு வேலை பார்த்துவந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையிலேயே வேலை கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் கண்ணில் ஹாரிஸ்பர்க்கில் 11 அறைகளைக் கொண்ட `ஸ்டார்லைட்' மோட்டல் விற்பனைக்கு என்கிற விளம்பரம் கண்ணில்பட, அதை 80,000 டாலர் கொடுத்து வாங்கினார்.


அதன்பின் படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஹெர்ஷா குழுமம் ஆனது. அதன் கீழ் விருந்தோம்பல், கட்டுமான தொழில் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டன. இன்றைக்கு இவர்களுக்குச் சொந்தமாக 100 ஹோட்டல்கள் இருக்கின்றன.


இவர்கள் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள். இவர்களின் வெற்றிக்கு காரணம் புரொஃபஷனல் அணுகுமுறை, ஆத்மார்த்தமான சேவை, பணியாளர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு  எனலாம். (1999-ல் அவர்கள் பங்குகளை வெளியிட்டபோது அனைத்துப் பணியாளர்களுக்கும் பங்குகளை ஒதுக்கித்தந்து பணியாளர்களுக்கு பங்குதாரர்கள் என்கிற அங்கீகாரத்தைத் தந்தது)


இந்த ஐந்து பேர்களுடைய வெற்றிக்குப் பின்னால் பொது வாக உள்ள விஷயங்கள் இரண்டு:

1. `ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்' என பொதுவாக சொல்வதுண்டு. ஆனால், இவர்களின் கதையில் இவர்களுக்குச் சமமாக இவர்கள் வீட்டுப் பெண்களும் கஷ்ட, நஷ்டத்தை பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். இது குஜராத்தியர் களுக்கே உரிய குணாதிசியம்.

2. தான் ஒரு நிலைக்கு வந்த பிறகு தனது உற்றார், உறவினருக் கும் உதவும் மனப்பான்மை. அவர்கள் நன்கு வளர்ந்துவிட் டால் நமக்குப் போட்டியாக வந்துவிடுவார்களே என்கிற எண்ணம் சிறிதும் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இது தள்பட்டின் விஷயத்தில் பளிச்சிடுகிறது. இதுவும் குஜராத்தியர்களின் தனித்தன்மை யாக இருக்கக்கூடும்.


இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பவர்கள் இன்றைய பிரதமர் நரேந்திர மோடியும், சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சனும்!