Saturday, June 8, 2013

மாத்தி யோசி - How You Can Be More Creative?

அன்றாட வாழ்வில் நம் மூளை கிரியேட்டிவ்வாகச் செயல்படத் தடையாக இருக்கும் 10 பூட்டுக்களைப் பற்றி 'நறுக்கென்று தலையில் ஒரு கொட்டு' போடுகிற மாதிரி சொல்வதே இப்புத்தகம்.  
கிரியேட்டிவிட்டி என்றால் என்ன? 'நம்முடைய அறிவையும், அனுபவத்தையும் வைத்துக்கொண்டு பல ஐடியாக்களைத் தேர்ந்தெடுத்து அலசுவதுதான் கிரியேட்டிவிட்டி' என்கின்றார் ஆசிரியர். எல்லோரிடமும் அறிவு இருக்கின்றது. அந்த அறிவை பயன்படுத்தும் முறையை சிறிதளவு மாற்றியமைக்கும்போதுதான் கிரியேட்டிவிட்டி வருகின்றது. உதாரணத்திற்கு, பின்வரும் கேள்வியைக் கேட்கின்றார் ஆசிரியர்.
IX - இந்த ரோமன் எண்ணில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்ய அனுமதியுண்டு. அப்படி செய்து அதை ஆறு என்று மாற்றவேண்டும். ஒரு நிமிஷம் செய்துதான் பாருங்களேன்! முடியவில்லையா?
நம் கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி, என்ன செய்தால் ஒன்பதை ஆறாக்க முடியும் என்று பார்ப்போம். இருக்கிற அமைப்பை மாற்றாமல்,  பிரச்னையைத் தீர்க்க நினைக்கிறோம் நாம்.
ஆனால், ரோமன் எண்ணில்தான் ஆறு வரவேண்டும் என்று நாம் சொல்லவில்லையே! எனவே, 'S' என்கிற வளைந்த கோட்டை முன்னால் போட்டால் 'SIX' என்று எளிதாக வந்துவிடுகிறது இல்லையா?
'இதேபோல நாம் வாழ்வில் சந்திக்கும் பல விஷயங்களிலும் இல்லாத பல விஷயங்களை நாமாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தக் கற்பனைக் கூண்டுக்குள் வாழ ஆரம்பித்து விடுகிறோம்' என்கின்றார் ஆசிரியர். உங்கள் முயற்சிக்கு புத்தகத்தில் உள்ள இன்னொரு சுவாரஸ்யமான கிரியேட்டிவ் புதிரையும் தருகிறோம்.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள். பறவை, ஆயுதம், எழுத்து என எதுவேண்டுமானாலும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இதை இப்படித்தான் பார்க்கவேண்டுமா என்று கேட்கும் ஆசிரியர், நம் மூளையை புதிதாக யோசிக்காமல் பூட்டிப்போடும் பத்து பூட்டுக்கள் என்னென்ன? அவற்றைத்  திறப்பது எப்படி என்பதைச் சொல்கிறார்.  
கிரியேட்டிவிட்டியானது நம் மூளையிலிருந்து அடிக்கடி தென்படவேண்டுமெனில், சாமான்ய வகை செயல்பாட்டு வழிமுறைகளால் நிரம்பியுள்ள நம் மூளையை முதலில் காலி செய்யவேண்டும். அப்போதுதான் கிரியேட்டிவ் செயல்முறைகளை நிரப்பிக்கொள்ள முடியும் என்கின்றார்.
வாழ்வில் எல்லாச் சூழ்நிலை களிலும் கிரியேட்டிவ் திங்கிங் தேவையற்றது என்று சொல்லும் ஆசிரியர், அது தேவைப் படும் சூழலை அறிந்து செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி ஓடோடி வரும் என்கிறார்.
எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரே ஒரு சரியான வழி அல்லது விடைதான் நம்மிடம் இருக்கின்றது என்றால், அது தவறு என்று சொல்லும் ஆசிரியர் இரண்டாவது சரியான வழி அல்லது விடைக்கான யோசனையை நாம் செய்யத் தவறிவிட்டோம்; நிறைய ஐடியாக்களே சரியான ஐடியாவைக் கொண்டுவரும் தாரக மந்திரம் என்கின்றார் ஆசிரியர்.
இரண்டுபேருக்கு நடுவே கொடுக்கல் வாங்கல் தகராறு வந்தது. இருவருமே கோர்ட்டுக்குப் போனார்கள். முதலில் வாதி தன் வாதத்தை வெகு சிரத்தையாக நீதிபதியின் முன் வைத்தான். 'நீ சொல்வதுதான் சரி' என்றார் நீதிபதி.
பிரதிவாதி துள்ளிக் குதித்து, 'நீதிபதி ஐயா! கொஞ்சம் பொறுங்கள். நான் என் தரப்பைச் சொல்கின்றேன்' என்று சொன்னான். 'அட, இதுவும் சரிதான்!' என்றார் நீதிபதி. இதைக்கேட்ட கோர்ட் கிளார்க், 'அது எப்படி வாதி சொல்வதும், பிரதிவாதி சொல்வதும் சரியாக இருக்க முடியும்' என்று கேட்க, நீதிபதியோ 'இதுவும் சரிதான்' என்றாராம்.
உண்மை எல்லாப் பக்கமும் இருகின்றது. நீங்கள் எந்த சைடில் இருந்து அதைப் பார்க்கின்றீர்கள் என்பதுதான் மேட்டர் என்று சொல்லும் ஆசிரியர் கிரியேட்டிவ் திங்கிங்கும் இதுபோன்றதுதான் என்கின்றார்.
லாஜிக்கலா இது சரியில்லை, ரூல்களை கடைப்பிடியுங்கள், பிராக்டிக்கலாக இருங்கள், கொஞ்சம் விளையாட்டுத் தனமாயும் சிறுபிள்ளைத்தனமாயும் யோசியுங்கள், இது என் ஏரியா இல்லை என்று சொல்லாதீர்கள், முட்டாள்தனமாய் இருக்காதீர்கள், தெளிவின்மை எனும் நிலையைத் தவிருங்கள், தப்பாகிவிட்டால் கொலைக் குற்றம் என்று நினைக்காதீர்கள், நானெல்லாம் கிரியேட்டிவ்வாய் செயல்பட முடியாது என்று நினைக்காதீர்கள் என கிரியேட்டிவிட்டிக்கு தடை போடும்  விஷயங்களை உதாரணங்களோடு பளிச்பளிச்சென தந்துள்ளார் ஆசிரியர்.
1983-ல் முதன்முதலாக வெளியிடப்பட்டு, 1998, 2008 என முப்பது வருடங்களாக மறுபதிப்புகளைச் செய்து விற்கப்பட்டுவரும் இந்தப் புத்தகத்தை மாத்தியோசிக்க நினைப்பவர்கள் அனைவரும் சிரத்தையாய் ஒருமுறையாவது படிக்கவேண்டும்.

Download the above book in the following link: