Sunday, June 30, 2013

புகைப்படம் கொடுக்காதீர் இளம் பெண்களே...



நான், கல்லூரி மாணவி. இரண்டு வருடத்திற்கு முன், பிளஸ் 2 முடித்து பிரியும் போது, தோழி ஒருத்தி, "என் நினைவாக போட்டோ ஒன்று வேண்டும்...' என்று கேட்டதால், நானும் என் புகைப்படம் ஒன்றை அவளிடம் கொடுத்தேன். அன்று நான் கொடுத்த புகைப்படம், என் தோழியின் அண்ணன் கையில் கிடைத்திருக்கிறது. என்னுடைய பெயர், விலாசம் அனைத்தையும் எப்படியோ அறிந்து கொண்டு, என்னிடம் பேச ஆரம்பித்தார். என் தோழியின் அண்ணன் என்ற முறையில், நானும் அவருடன் சகஜமாக பேசினேன்.

திடீரென்று, ஒரு நாள் அவர் என்னிடம், "ஐ லவ் யூ' என்று சொல்லி விட்டார். அதிர்ச்சியடைந்த நான், அன்றிலிருந்து அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஒரு முறை கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போது, என்னை வழி மறித்து, தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினார். நான் மறுக்கவே, தன் சட்டை பையிலிருந்து என்னுடைய புகைப்படத்தை எடுத்துகாட்டி, "என்னுடன் பேசாவிட்டால், இந்த புகைப்படத்தை நீ தான் எனக்கு கொடுத்தாய் என்று, உன் பெற்றோரிடம் கூறி விடுவேன். அதுமட்டுமல்ல, வலைதளத்தில் போட்டு, நாறடித்து விடுவேன்...' என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் அவருடன் பேசத் தொடங்கினேன், நான் பேசின மகிழ்ச்சியில், அவரும் என் வீட்டு விலாசத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பி விட்டார். இது என் பெற்றோர் கண்ணில் பட்டு, நடக்கக் கூடாத விவகாரமெல்லாம் நடந்து, நான் கல்லூரிக்கு செல்வது தடை செய்யப்பட்டது. படிப்பில் ஆர்வம் உள்ள நான், படிப்பையும் பாதியில் நிறுத்தி, பெற்றோரின் அன்பையும் இழந்து, அனாதையாக நிற்கிறேன்.

சகோதரிகளே... உங்கள் நினைவாக உங்கள் தோழியிடம் புகைப்படம் கொடுக்கும் போது, சற்று சிந்தித்து செயல்படுங்கள். இல்லையேல், எனக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்!