Wednesday, June 26, 2013

இவருக்கு என் மேலே என்ன வெறுப்பு, எதுக்காக ஒதுக்கறார்

'தீபக் பிறப்பதற்கு முன்னாலே நிறைய இடங்களுக்கு என்னை இவர் பைக்ல அழைச்சிட்டுப் போயிருக்கார். இப்போ குழந்தைக்கு மூணு வயசாச்சு. குழந்தையை வீட்டிலே பார்த்துக்க அம்மா இருக்காங்க. ஆனாலும்கூட இப்பெல்லாம் என்னை எங்கேயும் வெளியே அழைச்சுட்டுப்போக மாட்டேங்கிறார். இவருக்கு என் மேலே அப்படி என்ன வெறுப்பு, எதுக்காக என்னை ஒதுக்கறார்னு தெரியலே!''

கண்ணீர் பொங்க ரம்யா என்னிடம் புகார் செய்தாள். 'உங்கள் நண்பர்தானே, நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்' என்பதைச் சொல்லாமல் சொன்னாள்.

முடிவெடுப்பதற்கு முன்னால், இரு தரப்பையும் அறிந்துகொள்வதுதானே முறை? மோகனைத் தனியே சந்தித்தேன்.

'ரம்யா சொல்வது உண்மைதானா?'' என்று கேட்டேன். தயக்கத்துடன் ஒப்புக்கொண்டான்.

'அவ மேலே உனக்கு என்ன வெறுப்பு?''

'யார் சொன்னது வெறுப்புன்னு? நான் அவளை உயிரா நேசிக்கிறேன்!''

'பின்னே... எதுக்காக அவகூட வெளியே போவதைத் தவிர்க்கிறே?''

மோகன் உடனடியாக பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்ட பிறகு, 'நான் சொல்லும் பதிலைக் கேட்டு நீ சிரிக்கக்கூடாது. கேலி செய்யக்கூடாது!'' என்று நிபந்தனைகள் போட்டுவிட்டுப் பிறகு விஷயத்துக்கு வந்தான்.

'சாலை விபத்தில் மோட்டார் பைக்கில் சென்ற கணவன், மனைவி இரண்டு பேருமே மரணம்கிற மாதிரியான செய்திகள் அடிக்கடி பேப்பரிலே வருது. போதாத காலம், எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆச்சுன்னா எங்க குழந்தை அனாதை ஆயிடுமே! அதனாலேதான், இரண்டு பேரும் ஒரே நேரத்துல வெளியே போவதை முடிந்தவரை தவிர்க்கிறேன். இதை ரம்யாவிடம் சொன்னா ஏத்துக்கமாட்டா.  அல்லது, அச்சானியமா சொன்னதா நினைச்சுக் கண்கலங்குவா. அதனாலதான் காரணத்தை அவளிடம் சொல்ல முடியாம தவிக்கிறேன்.''

எனக்குச் சிரிப்பு வரவில்லை; அதே நேரம், கேலி செய்யவும் தோன்றவில்லை. ஆனால், திகைப்பாக இருந்தது. மோகன் எப்போதுமே கொஞ்சம் எதிர்மறையாகச் சிந்திப்பவன்தான். ஆனால், இந்த அளவுக்கு அவன் சிந்தனைகள் நெகடிவ்வாகவே இருந்தால்... அவன் வாழ்க்கை என்ன ஆவது?

அப்போதுதான் புராணப் பாத்திரமான நளன் என் நினைவுக்கு வந்தான். தமயந்தியின் கணவன் அல்ல; ராமாயணத்தில் இடம்பெற்ற வேறொரு நளன். அந்த நளனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது எதற்கு கதை என்கிற முகக்குறிப்பு அவனிடம் தெரிந்தாலும், பொறுமையாகவே கதையைக் கேட்டான்.    

சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்தான். அதனால், வானரப் படையுடன் இலங்கைமீது போர் தொடுத்து சீதையை மீட்க முடிவெடுத்தார் ராமர். ஆனால், இலங்கை செல்ல வேண்டுமானால் மாபெரும் கடலைக் கடக்க வேண்டும். அதற்குப் பாலம் அமைக்க வேண்டும்.

பாலம் அமைக்க வானர சேனை உற்சாகமாக முன்வந்தது. மாபெரும் கற்களைக் கொண்டுவந்து கடலில் போட்டது. ஆனால், அவையெல்லாம் கடலில் மூழ்கின. பின்பு எப்படிப் பாலம் கட்டுவது? சமுத்திரராஜனை நோக்கித் தியானம் செய்தார் ராமர். ஆனால், பலனில்லை. ஒருகட்டத்தில் கோபமடைந்த ராமர், தன் அஸ்திரத்தால் கடலையே வற்ற வைக்க முடிவெடுத்தார். நடுநடுங்கிய சமுத்திரராஜன் மன்னிப்பு கோரினான். 'ராமபிரானே! நளன் என்ற வானரத்தின் தலைமையில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடக்கட்டும். அப்போது பாலத்தை எளிதாக எழுப்பலாம்'' என்று ஒரு ஆலோசனையும் கூறினான்.

அதுபோலவே நளன் தலைமையேற்றான். அவனது ஆணைப்படி பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருள்களும் பிற வானரங்களால் குவிக்கப்பட்டன. பாறைகளும், கற்களும் கொண்டுவரப்பட்டன. மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டன. சிறு குன்றுகள்கூடப் பெயர்த்து எடுக்கப்பட்டன. அனைத்தையும் கொண்டு, மொத்தப் பாலமும் ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.

அதுசரி, எத்தனையோ வானரங்கள் இருக்க நளனின் தலைமையை ஏற்குமாறு சமுத்திரராஜன் ஏன் ஆலோசனை கூறவேண்டும்? அதற்குக் காரணம் உண்டு.  

விஸ்வகர்மாவின் புத்திரனான நளன் என்ற அந்த வானரம், தன் குலத்திற்கேற்ப சிறு வயதில் துடுக்குத்தனமாக இருந்தது. ஒருநாள், கங்கைக்கரையில் ஓர் உத்தமமான பிராமணன் தன்னுடைய சாளக்கிராமங்களை வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தான். அந்த வழியே சென்ற சிறுவன் நளன், அந்த தெய்வ உருவங் களை எடுத்துக் கங்கையில் வீசினான்.

பதறிய பிராமணன், அந்த உருவங்களைத் தேடிப் பார்த்தபோது, அவை கிடைக்கவில்லை. உடனே அவன் நளனைப் பார்த்து, 'உன் கையால் நதியிலோ கடலிலோ எதைப் போட்டாலும் அது மிதக்கும்'' என்று சாபமிட்டான்.  

இந்தச் சாபத்தை நினைவுகூர்ந்த சமுத்திரராஜன், நளனால் கடலில் வீசப்படும் கற்களும் பாறைகளும் ​மூழ்காமல் மிதக்கும் என்பதால், எளிதில் பாலம் அமைக்க முடியும் என்பதை உணர்ந்து, அந்த ஆலோசனையைக் கூறினான். பாலமும் விரைவில் எழும்பியது.

'நளனுக்குக் கிடைத்த சாபத்தையே பாலம் எழுப்பச் சாதகமாக்கிக் கொண்டனர். இப்படித்தான் நெகட்டிவ்வான விஷயங்களைக் கூட நாம் கையாள வேண்டும். மிகவும் அபூர்வமாக நடக்கக்கூடியதை எல்லாம் அனுமானம் செய்துகொண்டு கஷ்டப்படுவதை தவிர்க்கப் பார்!'' என்றேன் நண்பனிடம்.

'எனக்குப் புரியாமல் இல்லை. ஆனா, ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டால் என்ன பண்றதுன்னு என்னால் இப்படி நெகடிவ்வாகத்தான் நினைக்க முடியுது. அதை மாற்றிக்கொள்ள முடியலை!'' என்றான், பரிதாபமாக.

ஆறுதலாக அவன் தோளைத் தட்டியபடி ஒரு கேள்வி கேட்டேன்... 'ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தது எந்த மாதிரி மனிதனாக இருக்க வேண்டும்? பாஸிடிவ்வான எண்ணம் ​கொண்டவனா? அல்லது, நெகட்டிவான எண்ணம் கொண்டவனா?''

'இதிலே என்ன சந்தேகம்? நமக்கு இறக்கை கிடையாது. அப்படி இருந்தும் நம்மால் பறக்க முடியும்னு நினைத்தவன் பாஸிட்டிவ் எண்ணம் ​கொண்டவனாகத்தானே இருந்திருப்பான்?'' என்றான் மோகன்.

'சரி, இன்னொரு கேள்வி. பாரசூட்டைக் கண்டுபிடித்தவன் பாஸிட்டிவ் எண்ணம் கொண்டவனா? அல்லது, வேறு மாதிரியா?''

மோகனின் முகத்தில் ஒரு சின்னக் குழப்பம். பிறகு, நான் சொல்ல நினைத்ததைப் புரிந்துகொண்டதால், ஒரு மலர்ச்சி. மேலும் தெளிவாக்க விளக்கினேன்.  

'விமானத்தில் போகும்போது விபத்து உண்டாகலாம். பயணிகள் அதில் இறந்துவிடலாம். இப்படி எதிர்மறையான, நெகட்டிவ் சிந்தனைதான் பாரசூட் கண்டுபிடிக்க வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்காக விமானத்திலேயே போகக்கூடாது என்று அவன் முடிவெடுக்கவில்லை. மாறாக, அப்படி விபத்து நேர்ந்தாலும், அதிலிருந்து தப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தவன்தான் பாரசூட்டைக் கண்டுபிடித்து பெரிய சமூக சேவை செய்திருக்கிறான்.

இப்படி எதிர்மறையான விஷயங்களையே ஆக்கபூர்வமான முடிவுக்குக் கொண்டுவரலாமே! விபத்தில் மாட்டிக்கொண்டு தவறான மருத்துவ சிகிக்சையால் ஒரு காலையே இழந்தார் சுதா சந்திரன். ஆனாலும், அப்படியே தேங்கிப் போகாமல் அந்தச் சோதனையையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் அவர் பரத நாட்டிய நிகழ்ச்சி செய்ததுதானே அவருக்கு உலகப் புகழ் தேடித் தந்தது?

இப்படி நெகட்டிவை பாஸிட்டிவாக மாற்றிக்கொள்ளக் கற்றுக் கொள். எதிர்மறையாகத்தான் சிந்திக்க முடிகிறது என்கிறாய். இருக்கட்டும்; ஆனால், அதிலிருந்து மீள்வதும், மாற்றிக்கொள்வதும் உன் கையில்தான் இருக்கிறது. லட்சக்கணக்கானோர் தினமும் தத்தமது துணையோடு வாகனங்களில் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். விபத்து ஏற்படுமே என்று அவர்கள் எல்லாம் வீட்டிலேயா முடங்கிவிட்டார்கள்?! எனவே, மனைவியோடு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டாம். மறக்காமல் ஹெல்மெட் அணிந்துகொள். பின்னால் உட்காரும் உன் மனைவி தன் துப்பட்டாவை சரியாக முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறாளா என்பதை உறுதிசெய்து கொள். கவனமாக வண்டியை ஓட்டு. இந்தப் பொறுப்பு உணர்வு விபத்து வாய்ப்பை மிகவும் குறைத்துவிடும்'' என்றேன் நான்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, கடைத்தெருவில் நடந்துகொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்துகொண்டிருந்த மோகன் என்னைப் பார்த்ததற்கு அடையாளமாகத் தலையசைத்தான். அவன் பின்னால் உட்கார்ந்திருந்த ரம்யாவும் புன்னகைத்தாள்.