Monday, March 11, 2013

நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்


''பிறந்த குழந்தைக்கு அம்மை தடுப்பூசி, சொட்டுமருந்து எவ்வளவு அவசியமோ, அதேபோலத்தான் நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்'' என்று வலியுறுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ்.

 அதென்ன 'நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்'?

பரவலாக அறியப்படாத இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே சென்னை, மேத்தா மருத்துவமனையில், 'மெடிஸ்கேன்' நிறுவனம் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அங்கேதான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார் டாக்டர் சுரேஷ்.

''பல குழந்தைகளுக்கு பிறவிக்குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், பிறக்கும்போதே இது தெரிவதில்லை. குழந்தை வளர வளரத்தான் தெரியவரும். அப்போது அதைக் குணப்படுத்துவதும், எதிர்கொள்வதும் சிரமமாக இருக்கும். இதைத் தவிர்த்து, குழந்தை பிறந்தவுடனேயே பிறவிக்குறைபாடுகள் ஏதும் இருக்கிறதா.... அதன் தாக்குதல் பின்னாளில் வர வாய்ப்பிருக்கிறதா என்று அறிய வழிவகுக்கும் மருத்துவ பரிசோதனையே... 'நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்'. இதன் மூலம், பிரச்னையை முன்கூட்டியே அறிந்து, சிகிச்சையையும் ஆரம்பித்து அதிலிருந்து மீளமுடியும்'' என்று டாக்டர் சுரேஷ் புரிய வைக்க, அந்தப் பரிசோதனையை செய்வது எப்படி என்பது பற்றிப் பேசினார் டாக்டர் இந்திராணி சுரேஷ்.

''குழந்தை பிறந்த 48 மணி நேரத்திலிருந்து 7 நாட்களுக்குள் இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். குழந்தையின் குதிகால் கட்டைவிரலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் இதற்காக எடுக்கப்படும். முதற்கட்ட பரிசோதனையில் 'நெகட்டிவ்' என ரிசல்ட் வந்தால், 'குழந்தைக்கு எந்தவிதமான பிறவிக்குறைபாடுகளும் இல்லை' என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 'பாஸிட்டிவ்' என ரிசல்ட் கிடைத்தால், அடுத்தகட்ட பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சொட்டு ரத்தம் இதற்காக தேவைப்படும்.

இப்படி ஐந்து கட்டமாக நடத்தப்படும் சோதனையின் முடிவில் என்ன மாதிரியான பிறவிக்குறைபாடுகள் மற்றும் நோய்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விடலாம். அவற்றை மருந்து, மாத்திரைகள் மூலமாகவே குணப்படுத்திவிடலாம். ஒருசில குறைபாடுகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்'' என்ற இந்திராணி,

''இதன் முக்கியத்துவம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டிய ஒன்று. அதனால் நாங்கள் குழுவாக இணைந்து, டாக்டர் சுரேஷ் தலைமையில் 'நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்' பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். அந்த ஆய்வில், 700 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவிக்குறைபாடுகள் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதை கண்டறிந்தோம். எங்கள் ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில், பாஸிட்டிவ் ரிசல்ட் வந்த குழந்தைகளுக்கு சிகிச்சையையும் கொடுத்துள்ளோம்.

சி.ஏ.ஹெச் (CAH-Congenital adrenal hyperplasia) எனப்படும் குறைபாடு காரணமாக பெண் குழந்தை, பின்னாளில் ஆணாக மாறும் ஆபத்திருக்கிறது. இதை இந்த டெஸ்ட் மூலம் கண்டறிந்து தடுக்கலாம். 'கேலக்டோபீனியா' என்கிற தாய்ப்பால் ஒவ்வாமை குறைபாடு, 'ஹைப்போ தைராய்டிசம்' என்கிற மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்ற நோய்களையும் இதன் மூலம் கண்டறிந்து, தடுத்திட முடியும்!'' என்று நம்பிக்கையூட்டினார்.

இந்தப் பரிசோதனைக்கான செலவு பற்றிப் பேசிய டாக்டர் சுரேஷ், ''பொதுவாக 1,600 ரூபாய்க்குள் இந்த டெஸ்ட்டுக் கான செலவு முடிந்துவிடும். வசதியற்றவர்கள், சமூக சேவை அமைப்புகளின் உதவிகளைப் பெற்றாவது கட்டாயம் இந்தப் பரிசோதனையை செய்ய வேண்டும். இதற்காகவே இன்று ஏராளமான சேவை அமைப்புகள் உதவிக்கரம் நீட்டிவருவது குறிப்பிடத்தக்கது'' என்று குறிப்பிட்ட டாக்டர்,

''இந்த 'நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்', அமெரிக்காவில் அத்தியாவசியமான ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'இந்த டெஸ்ட் வேண்டாம்' என்று நினைக்கும் பெற்றோர், அந்தக் குழந்தை பிறந்த மருத்துவமனைக்கு கைப்பட கடிதம் எழுதித்தர வேண்டும். அப்போதுதான் இந்த டெஸ்ட் செய்யாமல் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். அந்த அளவுக்கு அவசியமான இந்த டெஸ்ட் பற்றி, தெரிந்து கொண்டு, பிறவிக்குறைபாடுகள் இல்லாத வருங்கால சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி எடுப்போம் வாருங்கள்!'' என்று அழைத்தார்!


(Source: Aval vikatan)