Monday, March 18, 2013

வலிகளைப் போக்க ஒரு வழிகாட்டி!


'சர்க்கரை, பிபி, அல்சர்னு எனக்கு எந்த நோயும் இல்லை... நாற்பது வயசுல எப்படி ஜம்முன்னு இருக்கேன் பாரு' என்று பலரும் பெருமையுடன் பேசிக்கொள்வதைப் பார்த்து இருப்பீர்கள். இன்றைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கை சூழலில் என்னதான் உடலில் தெம்புடன் உற்சாகமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், வீட்டுக்குள் நுழைந்தவுடன், சாப்பிடக்கூட பிடிக்காமல், படுக்கையில் விழத் தோன்றுகிறது.  உடலும், மனமும் சோர்வடைவதற்கு, உடல் உழைப்பு குறைந்துவிட்டதன் விளைவுதான்.

 மேலும், இன்றைய தவறான உணவுப் பழக்கத்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் எடை கூடி, பல்வேறு உடல்ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரிவதால் கழுத்துவலி, கைகால் வலி, சதைப்பிடிப்பு என உடல் சம்பந்தப்பட்ட வலிகளும் வந்து, மனரீதியான பிரச்னைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இதற்காகவே, வருடம் ஒரு முறை குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதும், அடிக்கடி நண்பர்களுடன் ஜாலி டூர் போவதும் என நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதற்கு மகிழ்ச்சியைத் தேடிப் போகிறோம்.

மனம், உடல் இரண்டையும் ஒருங்கே உற்சாகத்தில் ஆழ்த்தும் அற்புத சக்தி பல்வேறு தெரப்பிகளுக்கு உண்டு. தற்போது பார்லர் முதல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரை ஆங்காங்கே 'தெரப்பி' அளிக்கப்படுகின்றன.  

முறையான தெரப்பிகளால், உடல் வலிகளைப் போக்கி, புத்துணர்ச்சி பெறலாம்; ரத்த ஓட்டத்தை சீராக்கலாம்; ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என பல 'கலாம்'களை உறுதிப்படுத்துகின்றன சமீபத்திய ஆய்வுகள்.

அழகூட்டும் பியூட்டி தெரப்பி, வலியையும் நோய்களையும் விரட்டும் இயற்கை தெரப்பி, ஆயுர்வேத முறையில் செய்யப்படும் தெரப்பி எனப் பல வகையான தெரப்பிகளைப் பற்றிய தெளிவான விவரங்களைத் தருகின்றனர் ஆயுர்வேத மருத்துவர் ஜே.ஜே. விஜயபால், இயற்கை அழகுக்கலை நிபுணர் மற்றும் அரோமா தெரப்பிஸ்ட் கீதா அசோக் ஆகியோர்.

''தெரப்பிகளுக்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் தேவைப்படும். ஒவ்வொருவரின் உடல் பாதிப்புப் பிரச்னைகளைப் பொறுத்து சிகிச்சையின் கால அளவு மாறுபடலாம். மசாஜ் என்ற பெயரில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது அல்ல. உடல் பாதிப்பும் இரட்டிப்பாகிவிடும்'' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.  

தேர்ந்த தெரப்பிஸ்ட்கள் மூலம், சிகிச்சை பெற்று, ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றினாலே போதும். வலிகள் ஓடிப்போகும்; மனமும் உடலும் வலிமையாகும். புத்துணர்ச்சிக்காகக் கிடைக்கப்பெறும் பல்வேறு தெரப்பி முறைகளைத் தெரிந்துகொள்வோம். வாருங்கள்!

பார்லர் தெரப்பி

பார்லர்களில் செய்யப்படும் தெரப்பி முறைகள், உடலுக்கு வலுவையும் மனதுக்குப் புத்துணர்ச்சியையும் தரக்கூடியவை. மாதம் ஒரு முறை இந்த தெரப்பி செய்து கொள்வதன் மூலம், அழகையும் ஆரோக்கியத்தையும் ஒருங்கே பெற முடியும்.  

அனல் குளியல்

ஒரு சிறிய அறையில் 70 முதல் 80 டிகிரி செல்சியஸ் வெப்பச் சூழல் உருவாக்கப்படும். அறையின் ஓரத்தில் கூழாங்கற்கள் பரப்பப்படும். அறை முழுக்க வெப்பம் பரவும். இந்த இடத்தில் கண்களை மூடி அமைதியாகப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். வியர்வை ஆறாகப் பெருகி, உடலின் தேவையற்ற கழிவுகள் பிரிந்து, இதமான உணர்வு ஏற்படும். வியர்வை வடிய வடியச் சில நிமிடங்கள் ஓய்வெடுப்பதுதான் அனல் குளியல்!

பலன்கள்: வியர்வை அதிகம் வெளியேறுவதால், கொழுப்பும் கரைக்கப்படும். எடை குறையும்.

நீராவிக் குளியல்

ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் வகையில் கட்டப்பட்ட அறையில், ஹீட்டரின் மீது தண்ணீர் பட்டு நீராவி உருவாகும். யூகலிப்டஸ் ஆயில்,  மூலிகை எண்ணெய் வகைகளைக் கலந்து தரையில் ஊற்றுவார்கள்.  இதனால், அறை முழுவதும் மூலிகை வாசனை இருக்கும். அந்த அறையில் 15 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்தால் போதும்.

பலன்கள்: சுவாசம் சீராகும்.  உடலில் உள்ள கழிவுகள் வியர்வையாக வெளியேறும். மூலிகை எண்ணெய்களை உடலில் தடவி மசாஜ் செய்த பிறகு, நீராவிக் குளியல் எடுக்கலாம். இதனால், கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும்.

நீர் அழுத்தக் குளியல்

இது தொட்டிக் குளியல்தான். மோட்டார் பம்ப் மூலமாக வெதுவெதுப்பான தண்ணீர் அதிகமான அழுத்தத்தோடு தொட்டிக்குள் பீய்ச்சி அடிக்கப்படும். கூடுதலாகத் தண்ணீரில் நறுமணம் வீசும் மலர்களும் தூவப்படும்.

பலன்கள்: மலர்களால் மசாஜ் செய்வது போன்ற சுகம் கிடைப்பதுடன், வாசனையாகவும் இருக்கும். உடலின் நாடி நரம்புகளை எல்லாம் தொட்டுத் தடவிக் கொடுப்பது போன்ற உணர்வு கிடைக்கும். மனமும் சந்தோஷத்தில் மிதக்கும்.

சுடுகற்கள் மசாஜ்

வழக்கமான மசாஜ் முடிந்த பிறகு ஜெரேனியம் என்ற தாவர எண்ணெயை லேசாகச் சூடாக்கி, எரிமலைக் குழம்புக் கற்களை அதில் முக்கி, முதுகில் வைப்பார்கள். உடல் பொறுத்துக்கொள்ளக் கூடிய அளவில் சூடு இருக்கும். எண்ணெய்ப் பசையுடன் கூடிய கற்களால், முதுகில் இருக்கும் முக்கியமான அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.  

பலன்கள்: எலும்புகள் வலுப்பெறும். முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

பாத மசாஜ்

நம் உடல் முழுவதும் உள்ள நாடி, நரம்புகளின் இணைப்புகள் பாதத்தில் உள்ளன. அங்கு கை மற்றும் சிறப்பு ஸ்டிக் கொண்டு மசாஜ் செய்யப்படும். மேலும், முழுங்காலுக்குக் கீழ், பாதம் வரை பிரத்யேகமான மாய்ஸ்ச்சரைஸிங் க்ரீம் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு மசாஜ் செய்யப்படுகிறது.  

பலன்கள்: நரம்புகள் தூண்டப்பட்டு, கால் வலி குறையும்.  பாதம் புத்துணர்வு பெறும்.

 நேச்சுரல் தெரப்பி

விவசாயமே தொழிலாகக்கொண்டு வாழ்ந்த மனிதன் மண் தரையில் புழங்குவதும், பழங்கள், காய்கறிகள் எனச் சத்தான உணவை உண்டு வாழ்வதும், வண்ண மலர்களின் வாசத்தை நுகர்வதும் என்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இயற்கையான ஆரோக்கிய முறைகளே... களிமண் தெரப்பி, கலர் தெரப்பி, வாட்டர் தெரப்பி, பூக்கள் தெரப்பி என சிகிச்சையாக மாறிவிட்டது. இயற்கையான இந்த சிகிச்சைகள், உடலை நோயில் இருந்து காப்பதுடன், உடலுக்கு நல்ல வலுவையும் சேர்க்கும்.  

மட் தெரப்பி

ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரைகள், கழிமுகத் துவாரங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் ஆறு அடி ஆழம் தோண்டிய பின் கிடைக்கும் சுத்தமான களிமண்ணால் அளிக்கப்படும் சிகிச்சைதான் மட் தெரப்பி. இந்தக் களிமண்ணை 48 மணி நேரம் வெயிலில் காயவைத்து, அதன் பிறகு நன்றாக சலித்து, மண்பானைத் தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து தயார்ப்படுத்துவார்கள்.  

இந்த மண்ணை ஒரு மெல்லியத் துணியில் வைத்துக் கட்டி, முகம், உடம்பு, வயிறு மற்றும் தேவைப்படும் இடங்களில் ஒத்தடம் கொடுப்பார்கள். நேரடியாகவும் உடலில் பூசுவார்கள். முகத்தில் பூசினால் 20 நிமிடங்களுக்குப் பிறகும், உடம்பில் பூசினால் ஒரு மணி நேரம் கழித்தும் சுத்தமான தண்ணீரில் கழுவவேண்டும்.

சைனஸ், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த சிகிச்சையைத் தவிர்க்கவேண்டும்.

பலன்கள்: முகப்பரு, கரும்புள்ளி, கருவளையம் போன்ற பிரச்னைகள் குணமாகும். கம்ப்யூட்டரில் அதிக நேரம் பணிபுரிபவர்கள், தினமும் இந்தத் தெரப்பியைச் செய்து வந்தால், கண் எரிச்சல் நீங்கிக் குளிர்ச்சியாக இருக்கும். தலையில் தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை குறையும். கை, கால்களில் இந்தக் களிமண்ணைப் பூசி வந்தால் சருமம் மென்மையாகும்.

வாட்டர் தெரப்பி

உடலில் கலோரியைக் கட்டுப்படுத்த மருந்தே தேவை இல்லை. தண்ணீரே போதும்.  அதிக அளவு தண்ணீர் குடித்தால், வயிறு, குடல், சிறுநீரகம் என்று உடலில் எல்லா உறுப்புகளும் சுத்தமாகும். ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலம், உடல் உள் உறுப்புகள் சீராகின்றன. ஒரே சமயத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பதும் தவறு. பழங்களில் 70 சதவீதம் வரை நீர்சத்துதான் இருக்கிறது. தினமும், ஒருவேளை உணவாகப் பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

ஆறு, ஏரி, நீச்சல் குளத்தில் குளித்துவந்தால், ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைப்பதை உணர முடியும்.  தினமும் இரண்டு முறை நிறையத் தண்ணீரை உடலில் ஊற்றிக் குளிக்கவேண்டும். தினமும் மூன்று நிமிடங்கள் முகத்தில் குளிர்ந்த நீரையும், சாதாரண நீரையும் மாற்றி மாற்றி அடிப்பதுபோல் கழுவவேன்டும்.

பலன்கள்: சருமம் பளிச்சிடும். உடலில் ரத்த ஓட்டமும் சீராகும்; தெம்பு கூடும். முகத் தசைகள் வலுவடைந்து இளமையாகத் தோன்றும்.

கலர் தெரப்பி

 

மனித உடலுக்குள் 'சக்ரா' எனப்படுகிற அழுத்தப் புள்ளிகள் இருக்கின்றன. இந்த சக்கரங்களைத் தூண்டும்போது, அது உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தும். உடம்புடன் தொடர்பு உள்ள இந்த ஏழு சக்கரங்களும், வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என வானவில்லின் ஏழு வண்ணங்களை, அதே வரிசையில் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

இந்த சிகிச்சையில் நோயாளியைக் 'குப்புறப் படுக்கச் சொல்லி, அழுத்தப் புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்.  மசாஜ் முடிந்ததும், ஒவ்வொரு சக்ராவுக்கும் ஏற்றபடி, அந்தந்த வண்ணத்தில் பேக் போடப்படும்

கூந்தலுக்குப் பச்சை, முகத்துக்குச் சிவப்பு, கழுத்துப் பகுதிக்கு நீல வண்ணம் எனப் பிரத்யேக வண்ணங்களில் ஒளியை உடலில் காட்டும்போதே பலனை உணர முடியும். பக்க விளைவுகள் இல்லாதது. சிவப்பு, ரோஜா, சம்பங்கி, மஞ்சள் நிற சாமந்தி எனப் பூக்களை வைத்தும் கலர் தெரப்பி அளிக்கப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்த தெரப்பியை செய்துகொள்ளலாம். கற்றாழை, பழங்கள் என இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதால், பக்க விளைவுகள் என்பதே இருக்காது.  

பலன்கள்: சருமப் பிரச்னைகளைப் போக்கி மிருதுவாக்கும்.  மன சஞ்சலங்களையும் போக்கக்கூடியது. தேவையற்ற ரோமங்களை நீக்கச் செய்யப்படும் மெழுகு தெரப்பியிலும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ரோஸ் வாக்ஸ் பயன்படுத்தி கை, கால் சொரசொரப்பு, பாத வெடிப்புக்கும்,  புத்துணர்வுக்கு ஸ்ட்ராபெரி வாக்ஸ் பயன்படுத்துவதால், வெடிப்புகள் நீங்கி பஞ்சு போல் மிருதுவாகும்.  

அரோமா தெரப்பி

அரோமா என்றால் நறுமணம். இயற்கையாகக் கிடைக்கும் செடிகள், பூக்கள், மரங்கள், வேர்கள் போன்றவற்றில் இருந்து அரோமா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ரசாயனக் கலவை இல்லாததால், பக்க விளைவுகள் இல்லை. அழகோடு உடலுக்கு ஆரோக்கியமும் வலிமையும் கிடைக்கும். ரோஜா, மல்லி, சாமந்தி, லாவண்டர் போன்ற பூக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்படும்

இதில்  எசென்ஷியல் ஆயில், கேரியர் ஆயில் என இரு வகைகள். எசென்ஷியல் ஆயில் இயற்கையான பூக்களில் இருந்து நேரடியாகத் தயாரிப்பதால் வீரியம் அதிகம். இதை அப்படியே பயன்படுத்தக்கூடாது. கேரியர் ஆயிலுடன், எசென்ஷியல் ஆயில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்த நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இன்றிப் பயன்படுத்தக் கூடாது.

பலன்கள்: மன அழுத்தம் நீங்கி, மனம் அமைதி பெறும். சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவைப் பயன்படுத்துகின்றனர்

ஸ்கின் தெரப்பி

உடலைப் போர்த்தியிருக்கும் தோலில்தான் பிரச்னைகள் அதிகம். சருமத்தைப் பராமரிக்கவும், வலுவான திசுக்கள் உருவாகவும், புத்துணர்வு ஏற்படவும்  ஸ்கின் தெரப்பி சிறந்தது.

 

தலை, கை, கால், பாதம் மற்றும் முகத்துக்கான மூலிகை எண்ணெய் மற்றும் கிரீம்கள், மூலிகைத் தூள்கள், புத்துணர்ச்சிக்காகக் கொடுக்கப்படும் மருந்துகள் போன்றவை இதில் அடங்கும். இதனுடன் மூலிகைக் குளியல் சிகிச்சை முறைகளும் அளிக்கப்படுகின்றன.  கூடவே மூலிகைத் தேநீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  

பலன்கள்: மனம் தெளிவடையும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மூலிகைத் தேநீரால், சரும நிறம் கூடி உடலுக்கு அழகு, புத்துணர்வும் அதிகரிக்கும்.

மியூசிக் தெரப்பி

மிருதுவான இசையைக் கேட்கும்போது, மனம் சாந்தமடைகிறது.  'குத்துப்பாட்டு' எனப்படும் ஃபாஸ்ட் பீட் இசையைக் கேட்கும்போது நம்மை அறியாமல் ஆட வைக்கிறது. இசை அதன் போக்கிற்கேற்ப நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.

இசை தெரப்பியில் ஆக்டிவ் மற்றும் பாஸிவ் என இரண்டு உண்டு.  

பாடத் தெரிந்தவர்கள், சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், பஜனைப் பாடல்கள் என எது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறதோ அதனை அரை மணி நேரம் பாடலாம். அல்லது, புதிதாகக் கற்றுக்கொள்ளலாம். இது ஆக்டிவ் தெரப்பி.

பாடத் தெரியாவிட்டாலும், மனதிற்குப் பிடித்த பாடல்களைக் கண்ணை மூடிப் படுத்துக்கொண்டு ரசிக்கலாம்.  இது பாஸிவ் தெரப்பி.

பலன்கள்: வாயைத் திறந்து சத்தமாகப் பாடும்போது, உடலில் வேகஸ் எனும் நரம்பு தூண்டப்படுகிறது. இதனால் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.  சோர்வு, பதட்டம், மனக்குழப்பம் விலகி, மனம் ஆனந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஆயுர்வேத தெரப்பி

ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்க்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.  'ஆயுள்' என்றால் வாழ்க்கை என்று பொருள்.  'வேதம்' என்றால் அறிவியல் அல்லது அறிவு. ஆயுர்வேதம் என்றால், வாழ்வுக்கான அறிவியல் என்று பொருள் கொள்ளலாம்.

ஆயுர்வேத தெரப்பி மூலம் பல்வேறு நோய்களுக்கான தீர்வைப் பெறலாம்.

அப்யங்கம்

உடலின் முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் அதிகப்படியான வலிகளுக்கான மருத்துவம் இது. உடலில் 108 முக்கியப் புள்ளிகள் இருக்கும். இதை மர்மப் புள்ளிகள் என்பார்கள். எந்தப் பகுதியில் பிரச்னையோ, அந்த இடத்தில் பலா அஷ்வகந்தம், தான்வந்தரத் தைலம், ஷீரபலா தைலம் போன்ற தைல வகைகளைப் பயன்படுத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது.  ஃபைப்ரோமயால்ஜியா என்று சொல்லப்படுகின்ற உடல் வலி மற்றும் கை கால் வலி, குடைச்சல், முதுகு வலி போன்ற வலிகளைப் போக்கும். உடலில் வலுவைக் கூட்டும்.

ஸ்வேதம்

ஸ்வேதம் என்றால், ஒத்தடம். உடலில் சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வியர்வை வெளியேறும். தோலில் உள்ள கொழுப்பு குறைக்கப்படும். மருத்துவக் குணம் நிறைந்த மூலிகை இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைப்பார்கள். இதிலிருந்து வெளிப்படும் ஆவியை 10 முதல் 20 நிமிடங்கள் உடல் முழுவதும்படும்படி செய்வார்கள். கோதுமை, உப்பு, மணல், ஆமணக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி, உடலில் எண்ணெய்த் தன்மையை அதிகரிக்கச் செய்து, அவற்றை வியர்வையுடன் வெளியேற்றச் செய்வார்கள்.

பலன்கள்: சில வகை மூட்டு வலிகள் குணமாகின்றன. தோலின் நிறமும் மெருகேறும். மருந்து எண்ணெய் மற்றும் மூலிகைத்தூள் கொண்டு கைகளுக்கு இந்த மசாஜ் தெரபி கொடுப்பதால், ரத்த ஓட்டம் மேம்படுவதுடன் சருமத்தில் பளபளப்பும் கூடுகிறது.

திரவ ஸ்வேதம்

பலவிதமான மருத்துவ மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட தைலத்தை உடலில் தடவி வியர்வையை வெளியேற்றும் சிகிச்சை முறை இது.

பலன்கள்: உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.  

ஷஸ்டிக பிண்டஸ்வேதம்

அறுவதாம் குறுவை நெல்லுக்கு 'ஷாஸ்டிகம்' என்று பெயர். இது பச்சையாகத் தவிட்டுடன் இருக்கும். இதை லேசாகப் பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்கவேண்டும். இதனுடன் குறுந்தொட்டிக் கஷாயம், பால் முதுக்கன் கஷாயம் போன்றவற்றையும் சேர்க்கலாம். 200 அல்லது 300 கிராம் அளவில் சிறு சிறு மூட்¬டகளாகத் துணியில் கட்டவேண்டும். இதைக் கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது, சத்துக்களைத் தோல் உறிஞ்சிக்கொள்ளும். ஸ்வேதம் செய்வதற்கு முன்பு உடலில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டும்.  

வாதம்,  நரம்புப் பிரச்னை, தசைகள் பாதிப்பு போன்றவற்றில் இருந்து மீளவும், உடலின் பொது ஆரோக்கியத்திற்குப் பயன்படுவதுடன் இந்த தெரப்பி ஆண்மைத் தன்மையையும் பெருக்கவல்லது.

இளம்பிள்ளை வாதம், கால் சூம்பிப் போவது (மஸ்குலர் ஏட்ரஃபி) போன்ற பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை முறை ஏற்றது.

பலன்கள்: கால் தசைகள் வலுப்பெறும். நடக்க சிரமப்படும் குழந்தைகளை இந்த சிகிச்சை தந்து நன்றாக நடக்கவைத்துவிடலாம். 30 முதல் 45 நிமிடங்கள் வரை இந்த தெரப்பி செய்யப்படும். 14 நாட்களுக்கு இந்த சிகிச்சையைத் தினமும் செய்து கொள்ளும்போது, நல்ல பலன் கிடைக்கும்.  

சிரோதாரா தெரப்பி

நோயாளியை மல்லாக்கப் படுக்கவைத்து குறிப்பிட்ட உயரத்தில் இருந்து மூலிகை மற்றும் மருந்துகள் கொண்ட தைலத்தை முன் நெற்றிப் பகுதியில் பொழியச் செய்யும் சிகிச்சை முறை இது. வெதுவெதுப்பான ப்ராஹ்மி தைலம் மற்றும் சந்திரசேகர தைலத்திற்கு மனதை அமைதிப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. இதில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்ட உயரத்தில் பானையில் நிரப்பி, முன் நெற்றியில் விழுவதுபோல், கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் வைப்பார்கள். தலையில் இருக்கும் மர்மப் புள்ளிகளில் இந்த மூலிகை எண்ணெய் படுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள்:  இரண்டு வாரங்கள் தொடர்ந்து இந்த சிகிச்சையை மேற்கொண்டால், மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் போன்ற பிரச்னைகள் நீங்கும். மனம் ஒரு நிலைப்படும். பயம், பதட்டம் கட்டுப்படும். ஆழ்ந்த தூக்கம் வரும்.

தக்ர தாரா

தக்ர என்றால் மோர். மோரில் மூலிகைக் கஷாயத்தைக் கலந்து, அதை மண் பானையில் வைத்து புளிக்கவைப்பார்கள். ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்குக் கஷாயத்தை எடுத்துக்கொள்வார்கள். மீதியில் தண்ணீர் கலந்துவிடுவார்கள். இந்தக் கலவையில் மேலும் சில மூலிகைகளையும் சேர்த்து உடல் முழுக்கப் பூசுவார்கள்.

பலன்கள்: சோரியாசிஸ் மற்றும் அனைத்து விதமான தோல் நோய் பிரச்னைகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.  

பஞ்ச அம்ல தாரா

சிலருக்கு இடுப்பு எலும்புகளுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் தேய்ந்து சிதையக்கூடும். இந்த நோய்க்கு 'ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ்' என்று பெயர். ஐந்து வகையான மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.  

பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகி எலும்புகள் வலுவடையும்.

தைல தாரா

அதிகமாகப் பயணம் செய்யும் சிலருக்குத் தசைகள் இறுகித் தாங்க முடியாத வலி ஏற்படலாம். பிரபன்ஜன விமர்த்தன தைலம், மஹாமாஷ தைலம், கர்பூராதி தைலம், பலாஸ்வகந்தா தைலம் போன்ற  எண்ணெய்களை உடலில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்யப்படும்.  

பலன்கள்: 'ஃபைப்ரோமயால்ஜியா' போன்ற உடல் முழுவதுமான வலிகளைப் போக்கி, நல்ல தெம்புடன் வைத்திருக்கும்.  

கிரீவ வஸ்தி மற்றும் கிரீவ தாரா

நோயாளிகளைக் குப்புறப் படுக்கவைத்து, தோல் நீக்கப்படாத முழு உளுந்தை மூலிகைகளுடன் சேர்ந்து அரைத்த மாவைக்கொண்டு பின் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய அணை போல் அமைப்பார்கள். அதில் மூலிகை எண்ணெயை ஊற்றி, சிகிச்சை அளிப்பார்கள். 14 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.  

பலன்கள்: செர்விகல் ஸ்பான்டிலைட்டிஸ் (cervical spondylitis),கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (carpal tunnel syndrome),செர்விகோஜெனிக் (cervicogenic) தலைவலி, தலைசுற்றல் ஆகிய நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அடிக்கடி தலைசுற்றல், தொடர்ந்து வலி, படுத்து எழுந்திருக்க முடியாத நிலை உள்ளவர்களுக்கும் ஏற்ற சிகிச்சை இது.

ப்ருஷ்ட வஸ்தி

கிரீவ வஸ்தி போன்ற சிகிச்சை முறைதான் இதுவும். ஆனால், இந்த தெரப்பிக்கு தான்வந்த்ர தைலம் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு, கம்யூட்டர் முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு, ஐ.டி தொழில் செய்பவர்களுக்கு மேல் மற்றும் கீழ் முதுகுப் பகுதிகளில் வலி ஏற்படும். முதுகை நிமிர்த்தக்கூட முடியாத அளவுக்கு அவஸ்தை இருக்கும். தைலத்தைத் தேய்த்து மசாஜ் மூலம் வலிகளைப் போக்குவார்கள்.

பலன்கள்: உடலில் தசைகள் லகுவாகி, வலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். தசையில் இருக்கும் அடைப்புகள் நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.  

கடி வஸ்தி

இடுப்பில் செய்யப்படும் சிகிச்சையின் பெயர் கடி வஸ்தி. சகசராதி தைலம், லாக்ஷ£தி தைலம், கார்பாஸ அஸ்தியாதி தைலம் போன்ற மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலன்கள்: இடுப்பு, முதுகு வலி, லம்பார் டிஸ்க் ப்ரோலாப்ஸ், கீழ் முதுகு வலி, சயாடிகா (இடுப்பிலிருந்து கால் வரை நரம்பு இழுக்கும் வலி) போன்ற பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை அளிக்கும்.

ஜானு வஸ்தி மற்றும் ஜானு தாரா

இது முழங்கால் மூட்டின் மேல் செய்யப்படும் சிகிச்சை.  மூட்டு ஜவ்வு தேய்மானத்திற்கு லாக்ஷ£தி தைலமும்,  முறிவெண்ணா எண்ணெய், ஏசிஎல் லிகமென்ட் டேர் (ACL ligament tear)  பாதிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பலன்கள்: மூட்டு சம்பந்தப்பட்ட அனைத்து வலிகளுக்கும் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உத்வர்த்தனம் - உடல் எடை குறைக்க உதவும் தெரப்பி இது. 16 வகையான மூலிகைத் தூள்களை, தயிர் அல்லது மோரில் கலந்து ரிவர்ஸ் மசாஜ் செய்யப்படும்.  

பரிமர்ஜனம் - மூலிகைத் தூளைக் காய்ச்சி அந்தத் தூளை ஒரு மூட்டையாகக் கட்டி மூலிகைக் கஷாயத்தில் நனைத்து, மசாஜ் தரப்படும். குறைந்தது 24 நாட்களுக்கு இந்த சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

பலன்கள்: கூடுதல் உடல் பருமன், தொப்பை, தொடையின் பின்பக்கத்தில் அதிக சதை இந்த தெரப்பி மூலம் குறைத்துவிடலாம்.   பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு வயிறு தளர்ந்துபோய், உடலில் சேரும் கொழுப்பை கரைக்கப்படும்.  

காயகல்ப தெரப்பி

முதுமை அடையும் கால அளவைக் குறைத்து, உடல் செயல்பாடுகளைச் சீராக்கி,  நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும் சிகிச்சை இது. ஆயுர்வேத மருந்துகள், மூலிகைகள் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாக முழுமையான உடல் பராமரிப்பு கிடைக்கிறது.

பலன்கள்: 50 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலரும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.  நீண்ட ஆயுள் கிடைக்கும்.  

  உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்...

 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவதும் தடவி வந்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும்.

 இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்து தினமும் குளிப்பதற்கு முன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளபளவென மின்னும்.

 சூடான நீரில் 5 சொட்டுகள் கேமோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள்.  சுவாசம் சீராகும்.  சருமம் மிருதுவாகும்.

  வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.

  குளியல் அறையில், கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பிறகு குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும்.

  தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள்.   இது மனதை ஒரு நிலைப்படுத்தும்.  சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.

 வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.  

  கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள்.  மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.

 கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.  

 உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி... அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால்.. ஆரோக்கியம் அரவணைக்கும்.  

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்...

  காலை  5 .30 மணிக்கு :தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும்.  எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.

  காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

  காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்  கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.  

 காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட்.  இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

  மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

  இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.

இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது.  சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.  

தெரப்பியே தேவையில்லை என்பதுபோல், உணவிலும் உற்சாகமாக வைத்திருக்க... இந்த உணவைப் பின்பற்றுங்கள்...

இனி, உற்சாகம் உங்கள் கையில்...


தொகுப்பு: உமா ஷக்தி, படங்கள்: எம்.உசேன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், உதவி - ஹெர்ப்ஸ் அலைவ், சென்னை - 10. (Courtesy: Doctor Vikatan)