Thursday, March 21, 2013

ஆட்டிஸம் ஒரு மனநோய் தவறான கருத்துநாம் மூன்று வயதில் என்ன செய்தோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? ஐஸ்வர்யாவால் முடியும். அதீதமான ஞாபக சக்தியின் காரணமாகத் தன்னுடைய மூன்று வயதிலிருந்து என்னென்ன நடந்தது என்பதைத்தனக்குத்தானேபேசிக்கொள்வாள். நினைவுத்திறன் மட்டுமல்ல... புதிர்களை விடுவிப்பதிலும் அபாரமான திறமை. அவளுடைய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 100 முதல் 2,000 வரையிலான துண்டுகள் கொண்ட பல்வேறு வடிவங்களில் பஸில்ஸ் (புதிர்க் கட்டம்) பெற்றோர்கள் வாங்கித் தந்து ஊக்குவிக்க, இன்று அவள் பஸில் குயின்! 

இதுவரைதான் பார்த்தறியாத உலகின் மூலையில் எங்கோ இருக்கும் இயற்கைக் காட்சிகள், ஓவியங்கள், மனித உருவங்கள் என எத்தகைய பஸில்ஸ்களையும் இணைக்கும் ஆற்றல்கொண்ட ஐஸ்வர்யாவின் பஸில் படங்களைப் பல கண்காட்சிகளிலும் பங்குபெறச் செய்திருக்கிறார்கள் அவரின் பெற்றோர். இதற்கு நல்ல வரவேற்பு. இவளது இந்தத் தனித் திறமையால் ஐஸ்வர்யாவுக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு!

ஐஸ்வர்யா உருவாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட புதிர் அட்டைகளை 2009 ஏப்ரலில் கண்காட்சியாக நடிகை ரேவதி திறந்து வைத்தார். 2013-ல் அவர் உருவாக்கிய பஸில் கட்டங்களை காலண்டர் ஆக்கிக் கண்காட்சி நடத்தி இருக்கிறார்கள். எத்தனையோ சாதனைக் குழந்தைகள் இருக்க, ஐஸ்வர்யாவை முதன்மைப்படுத்தக் காரணம், ஐஸ்வர்யா ஒரு ஆட்டிஸக் குழந்தை. ஆட்டிஸம் ஒரு மனநோய் என்ற பரவலான தவறான கருத்து இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி அனைவரையும் வியக்கவைத்த படம் ஹரிதாஸ். ஆட்டிஸம் பாதித்த மகனுக்கும் தந்தைக்குமான பாசப் போராட்டத்தை அருமையாக வெளிப்படுத்தி, உணர்வுபூர்வமான படம் என்ற பாராட்டைப் பெற்றது. உண்மையில் ஆட்டிஸம் என்றால், என்ன?

நரம்பியல் நிபுணர் லஷ்மி நரசிம்மன் ஆட்டிஸம் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'சுற்றுப்புறத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனக்காக ஓர் உலகத்தை உருவாக்கிக்கொண்டு, அதிலேயே இருப்பவர்களை ஆட்டிஸ நிலையில் இருப்பவர்கள் என்கிறோம்.

பொதுவாக 4:1 என்ற அளவில் ஆண் பெண் குழந்தைகளிடையே ஆட்டிஸப் பாதிப்பு விகிதம் இருக்கிறது.

ஆட்டிஸம் என்றால் என்ன?

நமது மனம் என்பது ஒரு மாய உலகம். அவரவர் மனதில் எழும் ஆயிரம் கோடி எண்ணங்கள், புதுப் புதுக் கண்டுபிடிப்புக்களின் விதைகள் எல்லாம் தீவிரமாகக் குவிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவுகள்தான். ஆனால், எண்ணங்களைத் துறப்பவன் உலகத்தை மறந்து தனக்குள் மூழ்குகிறான். ஆட்டிஸக் குழந்தைகளின் நிலைப்பாடும் இதுதான். அவர்கள் நம்மைப்போல சாதாரணர்கள் அல்லர்; அவர்களை உலக விஷயங்களின் அழுக்குகள், அழகுகள் எதுவும் பாதிப்பது இல்லை. புதிதாகப் பிறந்து அப்பழுக்கின்றி வாழ்கிறார்கள். அவர்களைத் தொந்தரவுபடுத்தாமல், கேலி செய்யாமல் இருந்தால் போதும்.

ஆட்டிஸம் குறித்த சமுதாய விழிப்பு உணர்வு எப்படி உள்ளது என்பதைப் பற்றி ஆட்டிஸக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியான 'லோட்டஸ்' நிறுவனர் திருமதி நந்தினி மற்றும் மியூசிக் தெரபிஸ்ட் லட்சுமி மோகன் ஆகியோருடனும் பேசினோம்.

நந்தினி: ஆட்டிஸக் குழந்தைகள் என்றால் மன நலம் குன்றியவர்கள் அல்ல. மற்ற குழந்தைகள் செய்யும் சாதாரண விஷயங்களை இவர்களால் தன்னிச்சையாகச் செய்ய முடியாது... அவ்வளவுதான். ஆனால், அசாதாரணமான திறமையும் தனித்தன்மையும் உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால்தான் ஆங்கிலத்தில் இவர்களை 'ஸ்பெஷல் சில்ட்ரன்' என்பார்கள்.

நாங்கள் எங்கள் சென்டரில் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்போம். அவர்களுக்குப் பிடித்தவற்றைச் செய்ய ஊக்கப்படுத்துவோம். இதற்கு மியூசிக், பெயின்டிங், டிராயிங், எனப் பல்வேறு கலைகள் மூலம் அவர்களுக்குத் தெரபி கொடுக்கிறோம். இது அவர்களது தனித் திறமை மற்றும் கற்பனா சக்தியை வெளிப்படுத்த உதவுகிறது.  குழந்தை குறிப்பிட்ட வயதுக்குமேல் யாரையும் சாராமல் இருக்கத் தேவையான தினசரி அலுவல்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். வந்து செல்லும் இடம் இந்தக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலே, பாதிப் பிரச்னைகளுக்குக்குத் தீர்வு கிடைத்துவிடும். 'என் குழந்தை எழுதவில்லையே... என் குழந்தை படிக்கவில்லையே' என்று பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் என் குழந்தை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்க வேண்டும்.

நம்புங்கள்! ஐஸ்வர்யாவை மட்டுமல்லாமல், கீழே நாம் சொல்லியிருக்கும் திறமைசாலிகள் அனைவருமே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

தன்னுடைய மாணவர்களைப் பற்றி பெருமிதம் பொங்கப் பகிர்ந்துகொண்டார் லட்சுமி மோகன்.

முகுந்த்: சூப்பர் சிங்கர் போட்டிக்குச் சென்றால், சொல்லியடித்து ஜெயிப்பான். வயது 15. வெண்கலக் குரலில் பாட ஆரம்பித்தால், அனைவரையும் அவன் இசைக்கு அடிமையாக்கிவிடுகிறான். குரலும் அபாரம். உச்சரிப்பும் மிகத் தெளிவு. இவனுக்கு இசைதான் மூச்சு. எப்போதும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். கேட்பதை அப்படியே பாடும் ஆற்றல் உண்டு. இவன் மட்டுமே பாடிய சி.டி. தொகுப்பை (ஹெவன் அன்ப்ளக்டு) ஆட்டிஸக் குழந்தைகளுக்கான அமைப்பான 'லோட்டஸ் ஃபவுண்டேஷன்' உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வெளியிட்டது.

பிரசன்னா என்கிற வைத்திய நாதன்: பிரசன்னாவுக்கு இப்போது 32 வயது. இசையில் கெட்டிக்காரர். கர்நாடக இசை பிடிக்கும். பெரும்பாலான ராகங்களைக் கண்டுபிடித்துவிடுவார்.

ஜோதிகிரண்: இப்போது எட்டு வயது. மிக அழகாகப் பாடுவான். இசை ஒன்றே போதும். ராக ஆலாபனையைக்கூட அப்படியே பாடும் அபார ஆற்றல் உண்டு இவனுக்கு.

கண்ணன்: குட்டிக் கண்ணனுக்கு மூன்று வயது.  இசை உயிர். அவனைவிட பெரிய மிருதங்கத்தையும் சிரமப்பட்டு வாசிக்க முயல்வான்.எதிர்காலத்தில் பெரிய கலைஞனாக வரும் வாய்ப்பு மிக அதிகம்.


 

'ஆட்டிஸம்' என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளாகிய பேச்சுத்திறன், சமுதாயத் தொடர்பு மற்றும் புலன் உணர்வு இவற்றைப் பாதிக்கும். ஆட்டிஸம் நோய் பாதித்த ஒவ்வொரு குழந்தையும் மற்றவரிடம் இருந்து வேறுபடுகிறார்கள். ஆட்டிஸக் குழந்தைகளிடம் பெற்றோர் மற்றும் சமூகத்தினர் சில விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் நரம்பியல் நிபுணர் ஏ.வி.ஸ்ரீனிவாசன்.

1. கருத்துக் கேட்காதீர்கள்: ஆட்டிஸக் குழந்தைகளிடம் பதிலை எதிர்பார்த்து எதையும் கேட்காதீர்கள். கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்பது, அவர்களுக்குத் தெரியாது. குழப்பம் அடைந்துவிடுவார்கள்.

2. பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள்: அவர்கள் பேச ஆரம்பித்தால் கேளுங்கள். வீட்டினர் யாரும் இடைமறித்துப் பேசக் கூடாது. அவர்களால் ஒரு சமயத்தில் ஒரு செயலை மட்டுமே செய்ய முடியும். இடையில் நாம் பேசினால், அவர்கள் பேசுவதா, கேட்பதா அல்லது சும்மா இருப்பதா எனத் தவித்துப்போய்விடுவார்கள்.

3. கோபப்படுத்தாதீர்கள்: அவர்களை எவ்விதத்திலும் கோபப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் பொருட்களைத் தூக்கி எறிவார்கள். பிரச்னை பெரிதாகும்.

4. மாற்றிப் பேசாதீர்கள்: சொல்வது ஒன்றும் செய்வதும் ஒன்றுமாக இருக்காதீர்கள். குழந்தையால் உங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

5. அதிகம் எதிர்பார்க்காதீர்கள்: சாதாரணமாக நடந்துகொள்வார்கள், பேசுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். நன்றி உணர்வையும் எதிர்பார்க்க வேண்டாம்.

- நரம்பியல் நிபுணர் ஏ.வி.ஸ்ரீனிவாசன்

  

உலக அளவில் சாதனையாளர் - ஸ்டீபன் வில்ட்ஷையர் (Stephen Wiltshire)

வெறும் 15 நிமிடங்கள் பார்த்த காட்சிகளை, அதுவும் ஏரியல் வியூ என்று சொல்லப்படுகிற, பறவைப் பார்வையில் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியங்களாக வரைகிறார் ஸ்டீபன்.

1974-ல் லண்டனில் பிறந்த இவர் பொதுவான ஆட்டிஸக் குழந்தைகளைப் போலவே பேச்சு, சமூகத் தொடர்பு போன்ற திறன்கள் அற்றவராகவே சிறு வயதில் இருந்தார். ஐந்து வயதாகும்போது பள்ளியில் இவரது ஓவியத் திறமை வெளிப்படத் தொடங்கியது.

ஆரம்பத்தில் கார்களையும் விலங்குகளையும் ஓவியமாகத் தீட்டிய அவரது கவனம் நகரங்களை அச்சு அசலாக வரைவதில் திரும்பியது.

ஹெலிகாப்டரின் மீதிருந்து எந்த ஒரு நகரத்தையும் ஒரு முறை முழுவதுமாகப் பார்த்துவிட்டால் பின்னர் தன் நினைவில் இருந்து, அந்த நகரை தத்ரூபமாக வரைந்துவிடுகிறார். ரோம், டோக்கியோ, ஹாங்காங் எனப் பல நகரங்களை ஓவியங்களாக்கி இருக்கிறார்.

2006-ல் ஸ்டீபன் பிரிட்டீஷ் அரசவையின் உறுப்பினராக அவரது கலைச்சேவையைப் பாராட்டி நியமனம் செய்யப்பட்டார்.MBE (Member of the Order of the British Empire) எனப்படும் இந்த விருது இங்கிலாந்தின் மிகப் பெரிய விருதுகளில் ஒன்று. லண்டனிலும் நியூயார்க்கிலும் தன்னுடைய சொந்த ஆர்ட் கேலரிகளை நடத்தி வருகிறார்.