Wednesday, July 25, 2012

பிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் துகள்!

விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்த ஒரு துகளின் செயல்பாடுகளை விளக்கும் ஒரு புத்தகத்துக்கு, அறிந்தோ அறியாமலோ, அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் 'கடவுள் துகள்' என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டார்.

'கடவுள் துகளா, என்ன அது?' என்று அந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் பலரும், கடவுளை ஏறக்குறைய கண்டுபிடித்து விட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தத் தொடங்கிவிட்டார்கள். ராமகிருஷ்ணரும், ரமணரும், ராகவேந்திரரும், சாயிபாபாவும், வள்ளலாரும் இவர்களைப் பார்த்துச் சிரி, சிரி என்று சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அணுவையே ஐம்புலன்களால் அடையாளம் காண முடியாது. உணரவும் முடியாது. அதை விடவும் நுணுக்கமான இதை எப்படி உணர்வது? 'இருக்கு ஆனால் இல்லை' என்பதுதான் இந்தத் துகளின் தனிச்சிறப்பு!

ஒரு குட்டியூண்டு மீன் இடும் முட்டையைக் காட்டிலும் பல்லாயிரம் கோடி மடங்குகள் சிறியது இந்தத் துகள்!

இந்தத் துகள்தான் அனைத்து அணுக்களையும் இடைவிடாமல் ஆட்டிப் படைக்கிறது. ஒரு அணுக்கூட்டத்தை புல்லாக உருவாக்குகிறது. இன்னொரு அணுக்கூட்டத்தை பூண்டாக்குகிறது. புழுவாக உருவாக்குகிறது. மலையாக, மடுவாக, நதியாக, கடலாக, நட்சத்திரமாக, உலகாக, மனிதராக இடைவிடாமல் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இடைவிடாமல் அழித்துக்கொண்டே இருக்கிறது. பிறப்பும், இறப்பும் மனிதருக்கு மட்டுமல்லாது மலை, கடல், பாறை போன்ற ஜடப் பொருட்களுக்கும், ஏன் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனைக்கும் உண்டு.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களும் இடையறாது தோன்றித் தோன்றி மறையும் நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன என்னும் உன்னத  உண்மைதான் நடராஜனின் நடனமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர்களால் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இடையறாது சிவ தாண்டவம் நிகழ்கிறது என்று யோகிகளும், சித்தர்களும் கூறுவதன் பொருளே இதுதான்!

இந்த உண்மையை மறுக்க முடியாததால்தான் செர்ன் ஆராய்ச்சி நிலையத்தில் கடவுள் துகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பே, இந்திய அரசாங்கத்தால் அனுப்பப் பட்ட ஆறடி உயரமுள்ள நடராஜர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு அங்கிருக்கும் விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குப் பாரதம்தான் தாய் என்று அறிவித்தும் இருக்கிறார்கள்.

அண்ட சராசரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது ஒரு பெருவெடிப்பு. இந்தப் பெருவெடிப்பில்தான் பிரபஞ்சம் பிறந்தது! அணுக்கள் இருப்பதை அடையாளம் காட்டியதும் இந்தப் பெருவெடிப்புதான்! இது போன்றதொரு பெருவெடிப்பை சிறிய அளவில் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்தில் நிகழ்த்தி, ஆராய்ந்து கடவுள் துகள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இப்படிப்பட்டதொரு ஆராய்ச்சியை மேற்கொள்ள நம்மிடம் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே இந்து மதத்தைச் சேர்ந்த உன்னத மனிதர்கள் சிலர் 'அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் உள்ளது' என்ற பேருண்மையை உணர்ந்து சொல்லிவிட்டார்கள்.

அனைத்து அணுக்களின் மூலக்கூறும் ஒன்றே என்பதால், அவர்கள் அண்டவெளியை ஆராய்வதற்குப் பதிலாக அகத்தை ஆராய ஆரம்பித்தார்கள். உள்நோக்கிப் பயணம் செய்தார்கள். ஞானம் எய்தினார்கள். அவர்களே ரிஷிகள், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள்தான் அணுவை சிவனாக உருவகப்படுத்தினார்கள்; லிங்க வடிவம் கொடுத்தார்கள். நடனம் ஆடும் நடராஜரை உலகுக்கு அறிமுகப் படுத்தினார்கள்.

ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடவுள் துகளை இயக்குவது எப்படி என்ற தொழில் நுட்பத்தையும் கற்றறிந் திருக்கிறார்கள்.  

செம்பு உலோக அணுக்களை, தங்க உலோக அணுக்களாக மாற்றும் வண்ணம் கடவுள் துகளை இயக்கினார் கள். செம்பு தங்கமானது. இந்தக் கலை ரசவாதம் என்று அறியப்படுகிறது.

சென்னை, திருவொற்றியூரில் இருந்த காவ்ய கண்ட கணபதி முனிவருக்கு, திருவண்ணாமலையில் இருந்தபடி ரமண மகரிஷி தனது ஸ்தூல சரீரத்துடன் தரிசனம் அளித்திருக்கிறார்.

அவர் கடவுள் துகளை இயக்கி, அதாவது தனது சரீர அணுக்களைக் கட்டுப்படுத்தி, ரத்தமும், சதையும் கொண்ட இரு சரீரங்களாக உருவாக்கி, இரு வேறு இடங்களில் ஒரே சமயத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஷீர்டி பாபா, ராகவேந்திரர், காஞ்சி முனிவர், சேஷாத்ரி சுவாமிகள் ஆகிய பலரும் இதுபோல் காட்சி அளித்திருக்கிறார்கள். வள்ளலார் ஓர் அறைக்குள் சென்று தன்னை உள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டார். தனது உடலையே கண்ணுக்குப் புலப்படாத அணுத்துகள்களாகப் பிரித்துப் பிரபஞ்சத்தோடு கலக்க வைத்தார்.  

சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் காட்டும் அகவழியில், நாம் உள்நோக்கிப் பயணிப்போம். அந்தப் பயணத்துக்கு முதல் வாசல் தியானம்!


சிறியதிலும் சிறியது பரமாணு; பெரியதிலும் பெரியது ஆகாசம். சிறியதிலும் சிறியதாக அதாவது பரமாணுவாகவும், பெரிதிலும் பெரியதாக - ஆகாசமாகவும் உயிரினங்களின் இதயக் குகையில் உறைந்திருக்கிறார் பரம்பொருள் என்கிற விளக்கம் உபநிடதத்தில் உண்டு (அணோரணீயான் மஹதோ மஹீயான் ஆன்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ:) கடவுளின் பரிமாணம் என்பது மனித சிந்தைக்கு எட்டாத ஒன்று என அதற்கு விளக்கம் அளிக்கலாம்.

பரம்பொருளின் சாந்நித்தியம் பரமாணுவிலும் உண்டு; அகண்ட இடைவெளியிலும் உண்டு என்கிறது உபநிடதம். 'தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்ற கூற்று, வேதக் கருத்தை வெளியிடுகிறது. அதாவது, கண்ணுக்குப் புலப்படும் தூணிலும் உண்டு (மஹத்து, பெரியது); கண்ணுக்கு எட்டாத துரும்பிலும் (பரமாணு) இறைவன் இருப்பார் என்று விளக்குவதாக ஏற்கலாம்.

'அணுவிலும் அணுவாக (பரமாணு) இருப்பவர், எல்லோருடைய ஆன்மாவாகவும் (ஸர்வாத்மா) விளங்குபவர்' என்று மனுஸ்ம்ருதி கூறும் (ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸமணோரபி:). 'கண்களாலும் மற்ற புலன்களாலும் அறிய இயலாதவர்; ஊடுருவி செயல்படும் திறமை பெற்ற மனம் அடையாளம் கண்டுவிடும்' என்கிறார் வியாசர் (நைவாசௌசஷ§ஷாக்ராஹ்ய:...).

அணுவிலிருந்து அண்டம் வெளிவந்ததாக தர்சனங்கள் விளக்கும். அத்துடன் நிற்காமல்... அணுவில் உறைந்த பரம்பொருள் அண்டமாகக் காட்சியளிக்கும் என்றும் உரைக்கும். பெரிதிலும் பெரிதான அண்டத்திலும், சிறிதிலும் சிறிதான பரமாணுவிலும் உண்டு என்று விளக்குவர். அண்டத்தில் இருக்கும் பரிமாணமும் அதன் இயக்கத்துக்கு துணையான சக்தியும் பரமாணுவில் இருந்து பரவியது என்றால் மிகையாகாது. காரணத்தில் இருக்கும் சக்தி காரியத்தில் தென்படும். நெருப்பில் தென்படும் சூடு, நெருப்பால் உருவான பொருளிலும் இருக்கும். மண்ணில் இருந்து தோன்றிய குடத்தில், மண்ணின் இயல்பு இருக்கும். மண் காரணம் எனில், குடம் காரியம்.

ந்யாயம், வைசேஷிகம், ஸம்க்யம், யோகம் எனும் நான்கு தர்சனங்கள், அவற்றை இயற்றிய கணாதர், கௌதமர், கபிலர், பதஞ்ஜலி ஆகிய நால்வரும் அணுவின் தரத்தை ஆராய்ந்தவர்கள். ஜைன, பௌத்த மத சித்தாந்தங்களும் அணுவை ஆழமாக ஆராய்ந்திருக்கின்றன. வைசேஷிக தர்சனத்தை இயற்றிய கணாதர், அணுவை உலகுக்கு அறிமுகம் செய்தவர். கணாதன் என்ற சொல்லுக்கு அணுவை உண்டு களித்தவர்; அணுவின் தரத்தை உணர்ந்து அனுபவித்தவர் என்று பொருள் உண்டு. கணம்-அணு,

அதன், அதபக்ஷணெ... அதை உட்கொண்டவன் என்று இலக்கணம் சொல்லும். இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் அணுவின் பயன்பாட்டைக் கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் முன்பு தோன்றியவர் கணாதர்.

தென்படும் பொருட்கள் அத்தனையும் அணுகம். அவற்றின் தோற்றத்தை உண்டுபண்ணும் மூலப்பகுதி அணு. அணு எந்த நிலையிலும் மாறுதலை அடையாது; தனது இயல்போடு அத்தனைப் பொருட்களிலும் ஊடுருவிப் பரந்திருக்கும். அதன் தனிப்பட்ட குணம்- விலகியிருக்கும் தன்மை (ப்ருதக்த்வம்). அதன் உருவம் கோள வடிவம் கண்ணுக்குப் புலப்படும்படியான ஒரு பொருளின் தோற்றத்துக்கு அணுவே காரணம். பல அணுக்கள் ஒன்றுசேர்ந்தால் புலப்படும் பொருள் ஏற்படும். அணுக்கள் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும். 60 பரமாணுக்கள் சேர்ந்தது ஓர் அணு.

ஓட்டு வீட்டில் வெளிச்சத்துக்காக கண்ணாடி ஓடு இருக்கும். அதன் வழியாக சூரிய வெளிச்சம் அறையில் (கூடத்தில்) பாயும். அந்த பாய்ச்சலில் சின்ன துகள்கள் தென்படும். அதன் ஆறில் ஒரு பங்கு பரமாணுவின் அளவு என்ற விளக்கம் 'ந்யாய சாஸ்திரத்தில்' உண்டு (ஜால சூர்யமரீசிஸ்தம்யத் ஸ¨ஷ்மம் த்ருச்யதெரஜ: தஸ்ய ஷஷ்டஸ்துயோபாசு:பரமாணு: ஸெளச்யதெ).

சில தருணங்களில் ஒரே பொருளின் இரண்டு அணுக்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.  ஆனால்,  வேறுபட்ட இரண்டு பொருட்களின் மாறுபட்ட இரண்டு அணுக்கள் ஒன்றாக இணைவது அரிது. பூமியின் அணுக்களும், ஜலத்தின் அணுக்களும் ஒன்று சேராது என்று பொருள் கொள்ளலாம்.

இரண்டு அணுக்கள் சேர்ந்தது 'த்வ்யணுகம்' என்று பெயர் பெறும். இது கண்ணுக்குப் புலப்படாது. மூன்று த்வ்யணுகம் ஒன்றாக இணைந்தால், அது கண்ணுக்குப் புலப்படும் அளவுக்குப் பரிமாணம் பெறும். அதை, 'த்ரயணுகம்' என்பார்கள். மூன்று த்வ்யணுகங்கள் சேர்ந்தால் மட்டுமே, அளவில் சிறிய பொருள்-தென்படும் அளவுக்கு இருக்கும்.  மூன்றுக்கும் மேல் த்வ்யணுகங்கள் சேர்ந்தால்

புலப்படும் வஸ்து உருவாகும். அதை, சதுராணுகம் எனலாம்.

அணுக்கள் த்வயணுகத்தை உண்டு பண்ணும். த்வ்யணுகத்துக்கு அணு காரணம். த்வ்யணுகத்தைத் தோற்றுவிப்பதுடன் அணுவின் வேலை முடிந்துவிட்டது. அதற்குமேல் அதன் செயல்பாடு இருக்காது. மூலமான அணுக்கள் எதற்காக ஒன்றுசேர்ந்து த்வ்யணுகமாகவும்... த்வ்யணுகம் மூன்று சேர்ந்து த்ரயணுகமாகவும் உருவாயிற்று? இதற்கு என்ன காரணம்? இந்த நிகழ்வு எதனால் வந்தது என்பதற்கு, கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். விசித்திரமான உலகம், அதில் நிகழும் மாறுபட்ட காட்சிகள், பல அண்டங்களில் தோன்றும் பிராணிகள், வெள்வெளியில் நிகழும் அதிசயங்கள் அத்தனையும் த்ரயணுகத்திலிருந்து உருவானது என்ற சித்தாந்தத்தை ஏற்பவரும் உண்டு.

இந்த அணு வாதத்தை விஸ்தாரமாக அலசி ஆராய்ந்தவர்கள் ஏராளம். குறிப்பாக ப்ரசஸ்தபாதர், உத்யோதகரர், வாசஸ்பதி மிச்ரர், ஸ்ரீதரர், ஜயந்த பட்டர், சங்கரமிச்ரர், ரகுநாதசிரோன்மணி, மிமாம்சா சாஸ்திர நிபுணர் ப்ரபாகரர் ஆகியோர் அணுவைப் பற்றிய புதுக் கண்ணோட்டத்தை அளித்தவர்கள். பரமாணுக்கள் அதனிடம் இருக்கும் இயல்பில் மற்ற அணுக்களோடு இணைகிறது என்று ஜைனர்கள சொல்வர்.

பகவதி சூத்ரம் அணுவைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. படைப்புத் தொழிலில் முதல் படைப்பு நீர். அதில் வீர்யம் விதைக்கப்பட்டது. அதிலிருந்து ஆயிரம் சூரியனுக்கு ஒப்பான ஒளிமயமான அண்டம் உருவானது. நீரில் வீர்யத்தின் சந்திப்பில் வெடிப்பு ஏற்பட்டு, அதில் சிதறிய பரமாணுக்கள் (துகள்கள்)

பல அண்டங்கள் உருவாகக் காரணமாயிற்று என்ற விளக்கம் புராணத்தில் உண்டு (அபஏவஸஸர் ஜாதௌதாஸீ வீர்யம் அபாஸ்ருஜத்-ததண்டம் அபவத்ஹைமம் ஸஹஸ்ராம் சுஸம்ப்ரபம்). நீரில் (சரவணப் பொய்கையில்), வீர்யமான நெருப்பின் தாக்கத்தில் (நெற்றிக்கண் நெருப்பு), வெடிப்பு (கொந்தளிப்பு) ஏற்பட்டு ஆறு வடிவங்கள் தோன்றின என்கிறது புராணம்.

பரமாணுவில் உறைந்திருக்கும் (கண்ணுக்குப் புலப்படாத துகளில்) அளவிட முடியாத சக்தி, தோற்றமளிக்கும் அத்தனைக்கும் காரணமாகிறது. இந்த கணிப்பு... 'பரமாணுவில் உறைந்திருக்கும் இறையம்சம் (கணிக்க முடியாத செயல்பாட்டை உடையவன் கடவுள்) த்ரயணுகம் வரை தனது அழியா நிலையைத் தக்கவைத்துக்கொண்டு, த்ரயணுகத்துக்கு பிறகு, விரிவான பிரபஞ்சத்தை அழியும் பொருளாக ஏற்க வைக்கும் திறமை கொண்ட கடவுள் ஒன்றே என்கிற வாதத்தை மெய்ப்பிக்கிறது.

இப்படி ஆஸ்திகனும் நாஸ்திகனும் சேரும் இடம் ஒன்றாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது அணு வாதம்!