Sunday, July 1, 2012

ஒரு திருமணம்... பல ஆச்சர்யங்கள் !

'இது என் ஒரே பையனோட கல்யாணம்... பெரிய மண்டபமா  பாருங்க. என் உறவுகள் எந்தக் குறையும் சொல்லிடக்கூடாது'

'நகை நட்டு, பட்டு எல்லாம் உங்க பெண்ணுக்கு நீங்களே நல்லா செஞ்சுடுவீங்க... நாங்க தலையிடமாட்டோம். ஆனா, எதுலயும் குறை வேண்டாம்'

'பிள்ளையோட ஃபாரின் ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க... ஏர்போர்ட்ல பிக் - அப் பண்ண ரெண்டு, மூணு ஏ.சி கார் வேணும்'

- இவையெல்லாம், நவீன கால திருமணங்களில், பிள்ளை வீட்டாரின் ஆல் டைம் ரிசர்வ்டு டயலாக்குகளில் சில!

ஆனால், சமீபத்தில் நான் கலந்து கொண்ட என் தம்பி பெண் ரம்யாவின் திருமண நிகழ்வில், ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யங்களை அள்ளிக் கொடுத்த பிள்ளை வீட்டாரின் மீது... திருமணத்துக்கு வந் திருந்த அனைவருமே மரியாதையைக் கூட்டிக் கொண்டார்கள்!

சென்னை, மேற்கு மாம்பலம், மெட்ராஸ் காசி மடத்தில் நடந்த அந்த திருமணத்தில், கல்யாணப் பிள்ளை கார்த்திக் பி.இ, எம்.எஸ் பட்டதாரி. வேலை... அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில். கல்யாணப் பெண் பி.இ பட்டதாரி. வேலை பெங்களூருவில். பெற்றோர் நிச்சயித்த திருமணம். இரண்டு குடும்பங்களும் நடுத்தர வர்க்கம். திருமணத்தை மிக எளிமையாக நடத்த பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டதில் இருந்தே ஆரம்பித்துவிட்டது ஆச்சர்யம்.

எவ்வளவு பவுன், என்ன நகை, கல்யாண மண்டபம் எது, பட்டு எங்கு வாங்க வேண்டும் என எதைப்பற்றியும் அவர்கள் பேசவில்லை. திருமணம் முடிந்ததும் சாப்பாடு, கவனிப்பு, தங்கும் இடம் என பலப்பல குறைகள் இருந்தும்... சம்பந்தியும், அவர்களின் உறவுகளும் அத்தனை அசௌகரியங்களையும் இன்முகத்தோடு கடந்தது, சிம்ப்ளி கிரேட்!

ஆடம்பரம், அலட்டல், ஆங்கிலத்தில் மட்டுமேயான உரையாடல் என சம்பந்திகளிடம் எந்தப் பகட்டும் இல்லவே இல்லை. திருமணம் முடிந்ததும், பெண்ணைப் பெற்ற என் தம்பிக்கு, பிள்ளை வீட்டார் எதிர் சீராக கொடுத்தது... ஒன்றரை லட்சத்துக்கான செக்!

'என்ன? எதிர் சீர் ஒன்றரை லட்சமா?' என்று நாங்கள் வியக்க, அதற்கு அவர்கள் தந்த விளக்கம்... அற்புதம். 'ஏன், பெண் என்றால் சும்மாவா? நீங்களும் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, உங்கள் வீட்டு மகாலஷ்மியை எங்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளீர்கள். இனி நாம் அனைவரும் ஒரே குடும்பம்தான். ஏதோ எங்களால் ஆன அன்பளிப்பைத் தருகிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று வேண்டுகோள்போல சம்பந்தி கூறியதும், நெகிழ்ச்சியில் அழுதேவிட்டான் என் தம்பி.

'சம்பந்திகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்போல!' என எங்களுக்கோ மகிழ்ச்சி.

'உங்கள் அன்பு வருகை  மட்டும் போதும். தயவு செய்து அன்பளிப்பு எதுவும் வேண் டாம்!' எனப் பிள்ளை வீட்டார் திருமணப் பத்திரிகையிலேயே குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும், பலரும் 'கவர்களில் பணமாக பரிசு கொடுக்க, மொத்தத்தையும் ஆதம்பாக்கத்தில் உள்ள 'உதவும் உள்ளம்' அநாதை இல்லத்துக்கு பிள்ளையின் அப்பா அப்படியே கொடுத்தது, மனதைப் புல்லரிக்கச் செய்தது. திருமணத்துக்கு வந்திருந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும்... குட்டி துளசிச் செடி மற்றும் 'அக்னி, அம்மி, அருந்ததி' என்கிற புத்தகத்தைப் பரிசாக அளித்தனர் பிள்ளை வீட்டார்.

ஆச்சர்யம் விலகாமலே பிள்ளையின் அப்பா ஜெயராமனிடம் நான் பேச்சுக் கொடுத்தபோது, ''மற்றவர்களுக்கு உதவ வேண்டும், யார் மனதும் நோவதுபோல பேசக்கூடாது, நல்ல எண்ணம், உதவும் மனப்பான்மை, பக்தி, படிப்பு என தனக்குத் தர வேண்டி ஆண்டவனிடம் பிரார்த் தனை செய்; அவசியமானவற்றுக்குகூட அளவோடு ஆசைப்படு; பெரியவர்களை மதி, அன்போடு பேசு, நடத்து; பாரம்பரியத்தை முடிந்தவரை செயல்படுத்து போன்ற அறிவுரை களை சிறுவயதிலிருந்தே எனக்கும் என்னுடன் பிறந்தவர்களுக்கும் அடிக்கடி கூறுவார் என் அம்மா. மனதில் ஆழப்பதிந்த இந்த அறிவுரைப்படி நானும் நடந்து, என் பிள்ளைகளையும் அப்படியே வளர்த்துள்ளேன். எல்லாவற்றிலும் என்னுடன் நிற்கும் என் மனைவியும், அதற்கு முக்கியக் காரணம்!'' என்றார் அமைதியாக.

பெண்ணின் தந்தை ராஜசேகரனுக்கோ, பேச்சில் பெருமகிழ்ச்சி. ''எங்கள் மாப்பிள்ளை, 'மீமீரீணீவீ.ஷீக்ஷீரீ' என்ற பெயரில் தொடங்கியுள்ள வெப் சைட் மூலமாக, வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைத்து, அவர்கள் அனைவரும் கொடுக் கும் நிதியை ஏழைப் பெண்களின் திருமணத்துக்குச் செலவிடுவது, ஏழைப் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு உதவுவது, காஞ்சி மடத்துக்கு நிதி உதவி செய்வது என ஈகையோடு செயல்படுகிறார். இது, எங்களை பாக்கியசாலியாக உணர வைக் கிறது!'' என்றார் பெருமையுடன்!

இப்படி ஒரு பிள்ளை வீட்டார் எல்லோர்க்கும் கிடைத்தால்... பெண்ணைப் பெற்றவர்கள் வயிற்றில் பால்தான்!