Wednesday, July 25, 2012

நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?


'அடச்சே... எனக்கு இப்படி ஆயிடுச்சே!' என்று, நோய் ஏதும் வந்தால் அதுகுறித்துப் புலம்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? 'இந்த நோய்க்கு அந்த மருத்துவர்தான் ஸ்பெஷலிஸ்ட்! அவரிடம் போனால், ஆபரேஷனே தேவையில்லை. மருந்திலேயே குணப்படுத்திவிடுவார்! நல்ல கைராசிக்காரர்!' என்று யாரேனும் சொன்னால், உடனே அவரிடம் ஓடுவோம். 'எங்க சித்தி பையனுக்கு இப்படித்தான் கடந்த நாலஞ்சு மாசமா மூட்டு வலி. அந்த டாக்டர்கிட்ட காமிச்ச ரெண்டாவது வாரம், வலி மொத்தமும் காணாமப் போச்சு! நீங்க முதல்ல அந்த டாக்டரைப் போய்ப் பாருங்க' என்று எவரேனும் சொல்லிவிட்டால், அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு மகிழ்பவர்கள்தானே நாம்!

அதுமட்டுமா... அந்தச் சேதியை காதில் வாங்கி, புத்திக்குள் பதித்துக் கொள்கிற தருணத்திலேயே, உடலில் உள்ள வியாதியானது முற்றிலும் குணமாகிவிட்டதாக ஓர் உள்ளுணர்வு சொல்லும். அந்த உணர்வு பூரிப்பில், மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கும். இந்த மாதம் சம்பளம் வந்ததும், முதல்வேலையாக அந்த மருத்துவரிடம் செல்லவேண்டும் என மனசு பரபரக்கும்!

நோய் வந்துவிட்டால், முதலில் முக்கியமான ஒன்றைப் புரிந்து செயல்படவேண்டும். நாம் எந்த மருத்துவரிடம் செல்கிறோமோ அந்த மருத்துவர் மீதும், அவர் தருகிற மருந்துகள் மீதும் நாம் பூரண நம்பிக்கை வைக்கவேண்டும். என்னைத் தேடி அறிவுத் திருக்கோயிலுக்கு வருகிற அன்பர்களுக்கு நான் தொடர்ந்து இதைத்தான் வலியுறுத்தி வருகிறேன்.

சென்னையில் மிகப் பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அன்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் பேசும்போது, ''என் அப்பாவுக்கு பிரஷர், ஷ§கர் இருக்கு. தூக்கமாத்திரை இல்லாமல் தூங்கமாட்டார். ஒருநாள்... தூக்கமாத்திரைக்குப் பதிலாக ஒரு விட்டமின் மாத்திரையை எடுத்துக் கொடுத்தேன். என்ன ஆச்சரியம்..! அந்த மாத்திரையைப் போட்டுக்கொண்ட பத்தாவது நிமிடம் தூங்கிப் போனார் அப்பா. நான் செய்தது சரியா, தப்பா ஸ்வாமி?'' என்று என்னிடம் கேட்டார்.

உளவியல் சார்ந்து சிந்தித்து, அவர் செயல்பட்ட விதம் பிடித்திருந்தது எனக்கு.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு விஷயம்... நோயைத் தீர்த்துக் கொள்வதற்கு மேலான சிறந்ததொரு சிகிச்சை முறை என்ன தெரியுமா? நோய் வராமல் தடுத்துக்கொள்ளக் கூடிய சிகிச்சைதான்! ஆம்... நோய்த் தடுப்பு குறித்த விழிப்பு உணர்வு நமக்கு அவசியம் இருக்கவேண்டும்.

மனவளக் கலை எனும் பெயரில் பொதிந்துள்ள ஒவ்வொரு பயிற்சியும் வந்த நோயை விரட்டுவதோடு மட்டுமின்றி, நோய்களை வராமல் தடுக்கவும் பேருதவி புரிகின்றன. அதனால்தான் இங்கு வரும் அன்பர்களுக்கு மனவளக்கலைப் பயிற்சிகள் குறித்த விழிப்பு உணர்வு கருத்தரங்குகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.

சரி... நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?

முதலில், நம் உடல் குறித்த கட்டமைப்பு பற்றிய விவரங்களை அறியவேண்டும். உடலில் ஐந்து அடுக்குகள் இருக்கின்றன. சிற்றறைகள் அடுக்கப்பட்ட பரு உடல்; அதற்கு ஊடே ஓடிக்கொண்டிருக்கிற நீர்; அதாவது ரத்த ஓட்டம். அடுத்து, நரம்புகளின் மூலமாக நம் உடலின் மின்சார சக்தி வெப்பமாகி, அந்த வெப்பம் உடல் முழுவதும் பரவியுள்ளது அல்லவா... அந்தச் சீரான வெப்பநிலை, உடலுக்குத் தேவை. அப்போதுதான் ரசாயனக் கலவை சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்; இயங்கும்!

அதையடுத்து காற்று. இயங்கிக்கொண்டிருக்கிற உடலில் இருந்து உருவாகிற கரியமில வாயுவை, வெளியேற்றவும் பிராணவாயுவைக் கொண்டு சேர்க்கவுமான வேலைகளைச் செவ்வனே செய்கிறது. அதன் பிறகு விண். அதாவது, இதை உயிர் என்றும் சூட்சும உடல் என்றும் சொல்கிறோம்.

இப்படியாக ஐந்து அடுக்குகள் கொண்ட மாளிகையே நம் உடல். ஒவ்வொரு அடுக்கும் செவ்வனே இயங்கினால்தான், உடல் எனும் வண்டி எந்தச் சிக்கலும் தடங்கலும் இல்லாமல் ஓடும். அப்படித் தடையின்றி வண்டி ஓடுவதற்கும், வண்டிக்குப் பலம் சேர்ப்பதற்குமான விஷயம்தான்... மனவளக் கலைப் பயிற்சி!

உடலுக்கும் உயிருக்குமான ஓர் அற்புதமான உறவை அன்பொழுகச் செய்வதே இந்தப் பயிற்சியின் நோக்கம். 'நீ பெருசா, நான் பெருசா...' என்கிற முட்டிக்கொள்ளுதல் இல்லாமல், கருத்து ஒற்றுமையுடன் கைகோத்து உடலும் உயிரும் இயங்கினால்தான் நிம்மதியாக வாழ முடியும். உடல் மாமியார் எனில், உயிர் மருமகள். இரண்டும் கருத்து ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் அல்லவா! அப்படி இணைந்திருந்தால்தானே இல்லறமும் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

மனவளக் கலைப் பயிற்சியில் அடுத்த நிலை என்ன என்று பார்ப்போம்.

உடலைத் தளர்த்துதல். அதாவது, நம் உடலுக்கு ஓய்வு தருதல்.

'என்ன சுவாமி... தினமும் எட்டுப் பத்து மணி நேரம் கடுமையா உழைச்சுட்டு, வீட்டுக்கு வந்து நல்லாச் சாப்பிட்டுட்டு, கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துட்டு அக்கடான்னு படுத்துத் தூங்கறதே உடம்பைத் தளர்த்தறதுதானே! தனியா வேற உடம்பை ரிலாக்ஸ் பண்ணிக்கணுமா?' என்று ஒருமுறை அன்பர் ஒருவர் கேட்டதற்கு, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உண்மையில் இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் கேட்டது நியாயமான கேள்வி.

ஒரு வகையில்... உடலைத் தளர்த்துதலுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்றாலும், நான் சொல்லப்போகிற இந்தத் தளர்த்துதலிலும் உடலுக்குத் தருகிற ஓய்விலும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. காலையில் டிபன் சாப்பிடுகிறீர்கள்; கோயில் பிரசாதத்தையும் உட்கொள்கிறீர்கள். ஆனால், இரண்டுக்கும் சின்ன வித்தியாசம் இருக்கிறதில்லையா? அதுபோல்தான் இதுவும்!

உடலைத் தளர்த்துகிற, அதாவது உடலுக்கு ஓய்வு தருகிற இந்தப் பயிற்சி, கிட்டத் தட்ட கோயில் பிரசாதத்துக்கு இணையானதுதான்!


(Source: Sakthi Vikatan, August 2012)