Wednesday, July 25, 2012

அற்புதம் நிகழ்த்தும் ‘ஆடி-18’

ருடத்தில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், அவற்றில் தனித்துத் தெரிவதும், மிகுந்த பரவசம் கொள்ளச் செய்வதுமான விழா... ஆடிப்பெருக்கு வைபவம்தான். பெரியவர்கள் துவங்கி குழந்தைகள் வரை அனைவரும் கொண்டாடிக் குதூகலிக்கிற அற்புதமான விழா இது!

வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை உத்தராயன காலம் என்றும், தட்சிணாயன காலம் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள் சான்றோர்கள். ஆடி மாதத்தைக் கடக மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன காலம் துவங்குகிறது.

ஆடி மாதத்தில் துவங்கி மார்கழி மாதம் வரையிலான காலம், தட்சிணாயனம். தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலம், உத்தராயனம். இது சூரியனின் பாவனா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன சாஸ்திரங்களும் ஞான நூல்களும்.

தட்சிணாயனம் துவங்குகிற ஆடி மாதத்தில், சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் என்பர். எனவே வேத பாராயணம், மந்திர ஜபங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு உகந்த காலம் இது எனப் போற்றப்படுகிறது. தவிர, நம் சுவாசத்துக்குத் தேவையான பிராணவாயு அதிகம் கிடைப்பதும் இந்த மாதத்தில்தான்.

அற்புதமான இந்த ஆடி மாதத்தின் இன்னொரு முக்கியச் சிறப்பு... சக்தி வழிபாட்டுக்கு உரிய மாதம் இது. அதாவது, பெண் தெய்வங்களைக் கொண்டாடி திருவிழாக்கள் எடுத்து, வணங்கி ஆராதிக்கிற அருமையான மாதம். ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் என பெண் தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு, வேப்பிலை சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, கூழ் வார்த்து நைவேத்தியம் செய்து, பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவார்கள், பக்தர்கள்.

ஆடி மாதம் முழுவதும் வழிபட்டு, வணங்குவதற்கு உரிய மாதம் என்றாலும், ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் ரொம்பவே விசேஷம்! குறிப்பாக, ஆடி மாதம் 18-ஆம் நாள், ஆடிப்பெருக்கு என சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

'நீரின்றி அமையாது உலகு' என்றார்கள் முன்னோர்கள். அதேபோல் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என, ஆடி மாதத்தில் விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்கள். விளைச்சலுக்கும் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு என்பதால், தண்ணீரைப் போற்றி வழிபடுகிற வைபவமாகக் கொண்டாடப்படுகிறது ஆடிப்பெருக்கு.

இந்த நாளில், நதியோரங்களில் குடும்பம் குடும்பமாக வந்திருந்து, விளக்கேற்றி, நதிப் பெண்டிரை வணங்கித் தொழுதால், விவசாயம் தழைப்பதுபோல் வம்சமும் விருத்தியாகும் என்பது ஐதீகம். இந்த நாளில், நதிப்பெண்டிரைத் தொழுதுவிட்டுச் செய்கிற எந்தக் காரியமும் வெற்றியைத் தரும் என்கின்றனர் ஆன்றோர்கள்.

பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார் கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர, பெண்ணை மற்றும் பொருநை எனப்படும் தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையில் எம்பெருமாள் எழுந்தருள்வார். அம்மா மண்டபப் படித்துறையில் காவிரியை வணங்கிவிட்டு, எம்பெருமாளையும் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அன்று மாலையில் புடவை, திருமாங்கல்யம், பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவற்றை காவிரிக்குச் சமர்ப்பித்து பூஜைகள் நடைபெறும். இந்தக் காட்சியைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்கவேண்டும் எனில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களுக்கு இணையானதும், தட்சிண கங்கை எனப் போற்றப்படுவதுமான காவிரியில் நீராடினால், சகல பாபங்களும் நீங்கும் என ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் அறிவுரை சொல்ல... அதன்படி ஒரு ஆடி 18-ஆம் நாளில் காவிரியில் நீராடி, பாபம் நீங்கப் பெற்றார் ஸ்ரீராமர் என்றும் சொல்வார்கள்.

தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும், தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் எனப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் ஆடிப்பெருக்கு சிறப்புறக் கொண்டாடப்படும். கூடுதுறை அருகில் உள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில் நடை, அன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெறும். அம்பிகைக்கு தேங்காய், பழம், பூ, கருமணி ஆகியவற்றைப் படைத்து ஆராதிப்பார்கள். அப்போது பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடை எடுத்து பெண்கள் தங்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கொள்வார்கள். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.  

தாமிரபரணியிலும் இதேபோல் வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், இலையில் சூடமேற்றி, அதனை நதியில் மிதக்க விடுவது வழக்கம்! அதேபோல், வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தும் ஆற்றில் விடுகின்றனர். அன்றைய நாளில், கரையில் பூஜைகளைச் செய்துவிட்டு, சித்ரான் னங்களைக் குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுச் செல்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் மாக்கோலமிட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து, அம்பிகையை வழிபடுபவர்களும் உண்டு.

குறிப்பாக, புதுமணத் தம்பதிகள் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, திருமணத்தின்போது தாங்கள் அணிந்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புதுத் தாலிச்சரடு கட்டுகிற சடங்கை அங்கே செய்வார்கள். திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடு, கருகமணி மற்றும் காப்பரிசி வைத்து வணங்குவார்கள்.

சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ம‌க்க‌ள் ஒகேன‌க்க‌ல், மே‌‌ட்டூ‌ருக்கு வந்து ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்போது, மேட்டுரில் உள்ள அணைக்கட்டு முனுசாமி ஆண்டவருக்கு ஆடு- கோழிகளை பலியிட்டுப் பிரார்த்திக்கின்றனர். திருச்சி கல்லணைப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் வந்து புனித நீராடி, தாலிச்சரடு மாற்றிக் கட்டிக் கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கு விழாவை நதிக்கரையில் கொண்டாடுவோம்; நதி தேவதையை வணங்கித் தொழுவோம். வாழ்வில் சந்தோஷம், அமைதி, உயர்வு ஆகியன பல்கிப் பெருகுவது உறுதி!