Sunday, July 22, 2012

வெள்ளிப் பொருட்களை வாங்குவது வீந்தானோ..?

ங்கத்திற்கு அடுத்தபடியாக முதலீடாகவும், ஆபரணங்களாகவும் அதிகமாகப் பயன்படுவது வெள்ளிதான். கல்யாணத்திற்கான சீர்வரிசை பாத்திரங்களில் ஆரம்பித்து, இப்போது ஃபேஷன் ஜுவல்லரி வரை வெள்ளிப் பொருட்கள் கலக்க, இதன் விலையும் சர்ரென உயர்ந்திருக்கிறது.

ஆனால், கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைத் தந்து நாம் வாங்கும் வெள்ளிப் பொருட்களை விற்க நினைத்தால், 30 - 50% சேதாரமாகப் போய்விடுவது கொடுமை! இதை ஒப்புக்கொண்டு விற்றாலும் கடைக்காரர்கள் பணத்தைத் தராமல் மீண்டும் வெள்ளிப் பாத்திரத்தையே தருவது இன்னும் கொடுமை என்கிறார்கள் வெள்ளிப் பாத்திரங்களை விற்ற அனுபவசாலிகள்.

ஏன் வெள்ளிக்கு மட்டும் இத்தனை சேதாரக் கழிவு? பழைய வெள்ளி வாங்கும்போது கடைக்காரர்கள் இவ்வளவு கெடுபிடி செய்வது ஏன்? இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது? என வெள்ளி நகைக் கடை உரிமையாளர் நிதினிடம் கேட்டோம்.  

''வெள்ளியில்தான் அதிகமான பூஜை பொருட்கள், பாத்திரங்கள், நகைகள் என அத்தனையும் கிடைக்கின்றன. தங்கத்தில் இது குறைவு. தங்கம் விலை அதிகமாக இருக்கும்போது மக்கள் அதை வாங்குவதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், வெள்ளி அப்படியில்லை. விலை உயரும்போதும் மக்கள் அதிகம் வாங்குகிறார்கள்.    

பழைய வெள்ளி பொருட்களை விற்கும்போது 7.5 முதல் 15 சதவிகிதம் வரை மட்டுமே சேதாரம் கழிக்க வேண்டும். அதற்குமேல் கழித்தால், அதற்கான காரணத்தைக் கடைக்காரரிடம் நீங்கள் தாராளமாகக் கேட்கலாம். நாம் விற்கும் வெள்ளியில் 92.5 சதவிகிதம் மட்டுமே வெள்ளி. மீதமுள்ள 7.5 சதவிகிதம் காப்பர். பழைய வெள்ளியை கடைக்காரர்கள் உருக்கி, புதிய பொருட்களாகச் செய்து விற்பார்கள். அப்படி உருக்கி, புதிய பொருட்களைச் செய்யும்போது மேலும் சேதாரம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான் பழைய வெள்ளிக்கு 15 சதவிகிதம் சேதாரக் கழிவு போடுகிறார்கள்.

பழைய வெள்ளி பொருட்களை விற்கும்போது கடைக்காரர்கள் அதன் சுத்தமான தன்மையைச் சோதிக்க அதிலிருந்து சிறிய துண்டை வெட்டி எடுப்பார்கள். நீங்கள் அதற்கு அனுமதி தராமல், ஆசிட் டெஸ்ட் மட்டும் செய்யச் சொல்லுங்கள். இதற்கு மிகச் சிறிய துகள்கள் மட்டும்தான் சோதனைக்கு எடுப்பார்கள் என்பதால் பொருளின் எடை குறையாது. பொருளுக்கு எந்த பாதிப்பும் வராது.

வெள்ளிப் பொருட்களை பொறுத்தவரை, அதை வாங்கிய கடையில் விற்பது நல்லது. காரணம், வெள்ளியில் ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. வெறும் 60 சதவிகித வெள்ளியை வைத்து பொருட்களைச் செய்து விற்றுவிடுகிறார்கள்.

தவிர, வெள்ளியின் தூய்மையைக் கண்டறிவது கடினம். வெள்ளிப் பொருட்கள் கேரட் மீட்டரில் நுழைவதே கடினம். முழுவதும் வெள்ளியை பயன்படுத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களை மெல்டிங் பியூரிட்டி என்றும், வெள்ளி முலாம் பூசி செய்யப்படும் பொருட்களுக்கு ஸ்கின் பியூரிட்டி என்றும் சொல்வார்கள். எனவே, நம்பிக்கையான கடைகளில் வாங்குவது மட்டுமே நல்லது'' என்றார்.

பழைய வெள்ளியை விற்கும்போது பணம் தராமல் மீண்டும் வெள்ளிப் பாத்திரங்களையே வாங்கிக்கொள்ளும்படி சில கடைகளில் சொல்கிறார்களே! இது சரியா என சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டோம்.  ''வெள்ளிப் பொருட்களை திரும்ப வாங்கிக் கொள்ளும்போது எல்லா கடைகளும் பணம் தருவதில்லை என்று சொல்ல முடியாது. சில சிறிய கடைகள் வேண்டுமானால் அப்படி செய்யலாம். தரமான, கலப்படமில்லாத வெள்ளியாக இருக்கும்பட்சத்தில் பெரிய கடைகள் அனைத்துமே உடனடியாக பணத்தைத் தந்துவிடுகின்றன'' என்றார்.

வெள்ளிப் பொருட்களைத் திரும்ப விற்கும்போது சேதாரம் என நிறைய இழப்பு ஏற்படுகிறதே! இதனைத் தவிர்ப்பது எப்படி என நிதி ஆலோசகர் ஒருவரிடம் கேட்டோம். அவர் இப்படிச் சொன்னார்.

''நம் வீட்டுக்குத் தேவையான வெள்ளிப் பொருட்களை வாங்கிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஒரு முதலீட்டு நோக்கில் வாங்குகிறீர்கள் எனில், வெள்ளியை கட்டிகளாக வாங்குவதே நல்லது. வெள்ளி பார்கள் 50 கிராம் முதல் பல அளவுகளில் கிடைக்கிறது. இதனை வாங்கி வைத்துக்கொண்டால், அது கருத்துவிடுமோ என்கிற கவலை இல்லை. நமக்கு தேவைப்படும்போது அதை விற்று, பொருளை வாங்கிக் கொள்ளலாம். அல்லது பணமாக மாற்றிக்கொள்ளலாம். வெள்ளி கட்டிகள் வாங்கும்போது 2 சதவிகித சேதாரமும், விற்கும்போது 5 சதவிகித சேதாரமும் ஏற்படும். வாங்குவதற்கும் விற்பதற்கும் வித்தியாசம் காண்பிப்பதற்காக கடைக்காரர்கள் இந்த சேதாரத்தைக் கணக்கிடுவதாக கூறுகிறார்கள். எனவே, பாராக வாங்கினாலும் சிறிய அளவிலே இழப்பு உண்டு.

வெள்ளி பாரை வைத்து பாதுகாக்க விருப்பமில்லாதவர்கள் இ-சில்வராக வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதில் சேதாரம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், டீமேட் கட்டணமாக ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையைத் தந்தாக வேண்டும்'' என்றார்.

ஆக, வெள்ளியை எதற்காக வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான முதலீட்டு முறையை தேர்வு செய்துகொள்ளுங்கள்.