Tuesday, July 17, 2012

இக்கணம் தேவை சிக்கனம்!

மேசை மீது வைத்த பத்து ரூபாய் நோட்டு காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுகிறோம். ஆனால், எவ்வளவோ பணத்தை நம் அக்கறையின்மையாலும், அலட்சியத்தாலும் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். அவற்றைப் பற்றி நாம் துளியும் சிந்திப்பதில்லை.

இன்று பெரும்பான்மையானவர்களுடைய வருமானம் அதிகரித்திருக்கிறது. பணப்புழக்கம் கூடியிருக்கிறது. சம்பாதிக்கிற பணத்திலேயே சிக்கனமாகவே வாழ்ந்தால் நேர்மையுடனும், கம்பீரத்துடனும் வாழமுடியும். பற்றாக்குறை பாட்டுப் பாடாமல் இருக்க முடியும்.

மரியாதை ராமன் கதையன்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இரண்டு பெண்கள்; ஒருத்திக்கு இருபது மாடுகள், இன்னொருத்திக்கு இரண்டு மாடுகள். இருபது மாடுகள் வைத்திருப்பவள் இரண்டு மாடுகள் வைத்திருப்பவளிடம் கடன் வாங்கியதாகவும், திருப்பித் தராததாகவும் பிராது.

வழக்கு மரியாதை ராமனிடம் வருகிறது.

இருபது மாட்டுக்காரி, ''என்னிடம் இவ்வளவு வசதியிருக்கும்போது, நான் இவளிடம் போய் ஏன் கடன் வாங்க வேண்டும்?'' என்றாள். வழக்கை மறுநாள் விசாரணைக்கு ஒத்திவைத்தார்.   மறுநாள் நீதிமன்ற வளாகம் முன்பு சேறு போன்ற வழியை உருவாக்குகிறார். இரண்டு பெண்களும் வருகிறார்கள். அவர்கள் சேற்றை மிதித்துத்தான் உள்ளே வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம். காலை அலம்பிக்கொண்டுதான் நீதிமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற நிபந்தனை.  

இருவரும் காலைக் கழுவுகிறார்கள். இருபது மாடுகள் வைத்திருந்தவள் இரண்டு அண்டாவைக் காலி செய்கிறாள். இரண்டு மாடுகள் வைத்திருந்தவள் ஒரே குவளையில் சிக்கனமாகவும், லாவகமாகவும் அலம்பி காலை சுத்தம் செய்கிறாள்.

ராமன், ''இரண்டு மாடு வைத்திருப்பவளிடம் இருபது மாடுகள் வைத்திருப்பவள் கடன் வாங்கியிருக்கக் கூடும்' என்பதை ஊர்ஜிதம் செய்து தீர்ப்பு வழங்குகிறார். வருமானத்தில் இல்லை, செலவில்தான் சேமிப்பின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது என்பதை இதைவிட நேர்த்தியாக விளக்க முடியாது.

மரியாதை ராமன் கதைபோல சிக்கனம் நீரிலிருந்து தொடங்குகிறது. ஒரு குவளை செலவழிக்க வேண்டிய இடத்தில் ஒரு வாளி செலவழிப்பவன் அறிவாளியல்ல. கச்சிதமாக செலவழித்தால் மின்சாரக் கட்டணம், நீர் பற்றாக்குறை செலவு போன்றவற்றை கணிசமாகக் குறைக்கலாம்.

தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடுவது, மின்விசிறிகளை ஓடவிடுவது போன்றவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும். படிக்கும்போது, இல்லத்தினர் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து மின்சார செலவைக் குறைக்கலாம். சூரிய வெந்நீர் வசதியமைத்து மின்சார செலவைக் குறைக்க வழி செய்யலாம்.

மளிகைச் சாமான்களைப் பட்டியலிட்டு மாதத் தேவையை ஒன்றாக வாங்கி வைக்கலாம். துண்டுத் துண்டாக வாங்கும்போது செலவு கட்டுக்கடங்காமலும், வகைதொகையில்லாமலும் இருக்கும். நெறிபடுத்த முடியாமல் போகும். எந்தப் பருவத்தில் எந்த காய்கறி, பழங்கள் விலை குறைவாகக் கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்தலாம். புளி, வற்றல், மிளகாய் போன்றவற்றை ஆண்டுத் தேவைக்கு ஒன்றாக வாங்கலாம்.

வாகனத்தில் செல்லும்போது வாங்கவேண்டிய பொருட்களையும், பார்க்க வேண்டிய பணிகளை யும் கவனமாகக் குறித்து வைத்து ஒரேமூச்சில் முடிப்பது எரிபொருள் செலவையும், நேர விரயத்தையும் குறைக்க உதவும். தொலைபேசி என்பது தகவல் பரிமாற்றத்திற்காகத்தான்; கலந்துரையாடலுக்காக அல்ல என்பதைப் புரிந்துகொண்டாலே, கட்டணம் பாதிக்கும்கீழே குறைந்துவிடும்.

மருத்துவத்திற்காக பல வீடுகளில் எக்கச்சக்க செலவு. வாழும் முறையை செம்மைப்படுத்தினால், உடல்குறைபாடுகள் பலவற்றைத் தவிர்க்கலாம். சர்க்கரை, கொழுப்பு போன்றவை நம்முடைய பழக்கங்களை செப்பனிட்டாலே ஒழுங்குக்கு வரும். நம்முடைய உடலை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே, எண்ணற்ற தேவையற்ற உபாதைகளை உதறித்தள்ள முடியும்.  

ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டும் உண்டியலில் போட்டு சேமித்த ஒருவர், சில ஆண்டுகளில் திடீரென ஏற்பட்ட பெருஞ்செலவை அதைக் கொண்டு சமாளித்ததாகக் குறிப்பிட்டார். உருப்படியான ஒரு முதலீட்டில் பணத்தைப் போட்டால், மாதந்தோறும் கட்டாயம் குறிப்பிட்ட தொகை சேமித்துத்தான் தீரவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் உருவாகும். வங்கிக் கடனை செலுத்தும் கட்டாயத்தில் பெரிய முதலீடு தானாகக் கைகூடும். ஆயுள் காப்பீடு, பொது வைப்பு நிதி போன்றவையும் இவ்வகையில் அடங்கும்.

எந்தப் பொருளையும் வீணாக்காமல் மறுசுழற்சி செய்யலாம். ஒருவர் புது படுக்கை விரிப்பு வாங்கினார். பழைய படுக்கை விரிப்பை தரைக்கு விரித்தார். பழைய தரை விரிப்பை ஜன்னல் திரைச்சீலையாக்கினார். பழைய திரைச் சீலையை சின்னத் துண்டுகளாக்கித் தரையை சுத்தம் செய்யப் பயன்படுத்தினார்.

வாழ்க்கையில் விழிப்புஉணர்வும், பொறுப்பு உணர்வும் உள்ளவர்கள் வருமானத்திற்குட்பட்டு வாழ்பவர்கள். அவர்கள் நேர்மை பிசகாமல், வயிற்றைக் கட்டாமல், நியாயமாகவும், நிம்மதியாகவும் அடுத்தவர்களிடம் கையேந்தாமலும் இருப்பார்கள். வாழ்வின் வசதி வருமானத்தில் இல்லை; சேமிப்பதில் உள்ளது என அவர்கள் அறிவார்கள்