Tuesday, July 31, 2012

குழந்தை வளர்ப்பும் சில நம்பிக்கைகளும்...

'ங்கா'

 - பூமிப் பந்தில் காலடி எடுத்துவைக்கும் பிஞ்சு மழலையின் முதல் மொழி - உலகம் முழுமைக்குமான ஒரே மொழி!

அழுகை, சிரிப்பு, கோபம், வலி, வேதனை எனச் சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தையின் ஒவ்வோர் உணர்வுகளையும் அர்த்தப்படுத்துகிற வார்த்தை இது!

''குழந்தையின் சின்னஞ்சிறு அசைவுகளிலேயே அதன் தேவையை உணர்ந்து பூர்த்திசெய்யும் திறன் படைத்தவள் தாய். ஆனாலும், 'என் அம்மா நான்கு குழந்தைகள் பெற்றவள், பாட்டி 13 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தவள்... அவர்களுக்குத் தெரியாதா குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று' எனச் சொல்லிச் சொல்லியே குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தவறான விஷயங்களைச் செய்கிறார்கள் சில பெற்றோர்கள்'' என்கிற அதிர்ச்சித் தகவலோடு பேச ஆரம்பிக்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வேல்முருகன்.

பழக்கவழக்கம் என்ற பெயரில், குழந்தையின் நலனுக்கு எதிராக செய்துவரும் செயல்கள்குறித்து ஆதங்கப்பட்டவர், அதற்கானத் தீர்வுகள்குறித்தும் அக்கறையோடு பேச ஆரம்பிக்கிறார்.

தாய்ப்பால் சில சந்தேகங்கள்...

பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் சீம்பால் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த தாய்ப்பாலைத்தான் புகட்ட வேண்டும். ஆனால், 'சீம்பால் கெட்டுப்போன பால்; குழந்தைக்கு நல்லது அல்ல' என்ற நம்பிக்கையின் பெயரில் சிலர் அதனைப் பீய்ச்சி வீணடித்துவிடுகிறார்கள். கிராமப்புறங்களிலோ, பிறந்த குழந்தைக்குச் சிலர் கழுதைப்பாலைப் புகட்டுகிறார்கள். இவை இரண்டுமே தவறு. இதனால், குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுவதோடு, பாலில் கலந்திருக்கும் கிருமிகளால் குழந்தையின் உடல் நலனும் பாதிக்கப்படும்.

வேலைக்குச் செல்லும் சில தாய்மார்கள், சாயங்காலம்கூட குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது இல்லை. காலையில், வேலைக்குச் செல்லும்போது சுரந்த தாய்ப்பால் கெட்டுப்போயிருக்கும் என்ற நம்பிக்கையில் அதனைப் பீய்ச்சி எடுத்துவிடுகிறார்கள். இதுவும் தவறான நம்பிக்கையே. கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பால்போல தாய்ப்பால் ஒரு நாளும் கெட்டுப்போகாது. விரைந்து ஓடினால், உடல் எங்கும் சுரக்கும் வியர்வைபோல், குழந்தை குடிக்கக் குடிக்கத்தான் தாய்ப்பாலும் சுரக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையிலும் கட்டாயம் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகும் சிலர், திட உணவு கொடுக்காமல் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவருவதும் தவறானதே. இரண்டரை வயது வரையிலும் தாய்ப்பாலோடு அரிசி சாதம், வேகவைத்த பருப்பு - முட்டையின் மஞ்சள் கரு எனத் திட உணவு வகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்டு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் தாய்மார்களும் மார்பகத்தில் புண் உள்ளவர்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் பாலாடையைக் குழந்தைக்கு உண்ணக் கொடுக்கலாம்  அல்லது பசும்பாலை ஸ்பூன் மூலமாக குழந்தைக்குப் புகட்டலாம். பால் புட்டியில் பயன்படுத்தப்படும் பாட்டில் ரப்பர்களை சுடுதண்ணீரில் கழுவினாலும்கூட கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுமானவரை அதைத் தவிர்த்துவிடுங்கள்.

எப்படிக் குளிப்பாட்ட வேண்டும்?

குளிப்பாட்டும்போது குழந்தையின் மூக்கு, வாய் வழியாகத் தண்ணீர் சென்றுவிடாமல் கவனமாகக் குளிப்பாட்ட வேண்டும். ஆனால், சிலர் குழந்தையின் தலை, உடம்பு முழுக்க எண்ணெய் தடவி குளிப்பாட்டுவார்கள். குழந்தையின் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் எண்ணெய் செல்லும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, நெஞ்சில் சளிக்கட்டுதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தையைக் குளிப்பாட்டும்போது தலை, மூக்குப் பகுதிகளை நன்றாக அழுத்திப் பிடித்துவிட்டால்தான் குழந்தைக்கு நல்ல முக அமைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது. பெற்றோர்களின் மரபு வழியைப் பொருத்தே குழந்தையின் உடல் அமைப்பு இருக்கும். இதனை நாமாகப் பயிற்சிகள் செய்து மாற்ற முடியும் என்று நம்புவது ஆதாரமற்றது.

இன்னும் சிலர், குழந்தையின் நலனில் அதிகக் கவனம் செலுத்துகிறோம் என்ற பெயரில், பச்சிளம்குழந்தைகளைக் குளிப்பாட்ட பிரத்யேகமாக ஆட்களை நியமித்திருப்பார்கள். அவர்களோ, 'குழந்தைக்குச் சளி எடுக்கிறேன்' எனச் சொல்லி பச்சிளம் குழந்தையின் வாயினுள் பலமாக ஊதுவார்கள். அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து சிறிது சளியும் வெளிப்படும். இது மிகவும் ஆபத்தான செயல்முறை. எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பாகவே சிறிதளவு இருமல், தும்மல், மூக்குச் சளி இருக்கத்தான் செய்யும்; இதனால் குழந்தையின் உடலுக்கு எந்தவிதக் கேடும் இல்லை. ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகச் சளியை வெளியேத் தள்ளுவது தவறு. மேலும், பெரியவர்களது வாயினுள் இருக்கும் லட்சக்கணக்கான கிருமிகளும் நேரடியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும் அபாயமும்  இருக்கிறது. சாதாரண 'பாத் டப்'களில் குழந்தையை அமரவைத்துக் குளிப்பாட்டுவதே பாதுகாப்பான முறைதான்.

கொழு கொழு குழந்தை....

குழந்தைகள் நன்றாகக் கொழு கொழுவென்று புஷ்டியோடு இருப்பது பார்ப்பதற்கு அழகுதான். ஆனால், ஆரோக்கியத்துக்கு அழகா? இது பெற்றோர்கள் கட்டாயம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. குழந்தையின் சதை வளர்ச்சியைத் தூண்டும் சில ஸ்டீராய்டு கொழுப்பு வகை மருந்துகளை மருத்துவரது ஆலோசனை இன்றி சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுத்துவருகிறார்கள். இது ஆபத்தானது. இயல்பான உடல் வளர்ச்சியோடு சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளே ஆரோக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!