Friday, August 26, 2016

அம்மாவிற்கும், மகனுக்கும் நடந்த சம்பாஷனை.

அம்மாவிற்கும், மகனுக்கும் நடந்த சம்பாஷனை. 


ராசு,  உங்கிட்ட கொஞ்சம் பேசணும், பேசலாமாடா? 


என்னம்மா, சொல்லு, என  மடங்கி முன் அமர்ந்தான்.  


சற்றே சிணுங்களுடன் தலையை கொய்தவாறு,  "நீ பிறக்கும் போது மரணத்தோட போராடினேன்.  நீ அழும்போது, உனக்கு காய்ச்சலின் போது,  மொத்தத்துல வளர்க்குறப்போ தூக்கத்த நிறைய நாள் தொலச்சிருக்கேன்.  நீ சாப்ட பிறகு தான் நான் சாப்பிடுவேன்".  


அவனது கைகளை இறுக பற்றிகொண்டு,  எவ்ளோ வலி, 

ம்ச்ச்,  உன்ன ஒரு நல்ல படிக்க வச்சுட்டேன்,  நல்ல நிலைக்கு வந்துடுவ,  சரி,  நீ எனக்கு என்ன பண்ணுவ,  கருப்பும்,  சிறு சிறு வெள்ளையான புருவங்களை உயர்த்தி,  பதிலுக்கு பரிதவிப்புடன்,  


" ம்ம்மா,  சற்று உடைந்த குரலில்,  நான் வேலைக்கு போயி, நிறைய சம்பாதிச்சு,  உன்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போயி சந்தோசமா வச்சுகுவேன்".  


எதிர்பார்த்த பதில் வரவில்லை.  இளைய புன்னகையுடன்,  " போடா,  லூசு பயல,  இதெல்லாம் உங்கப்பா எனக்கு செஞ்சுட்டாறு,  இதெல்லாம் வேணாம்,  நீ சம்பாதித்து கூப்பிடறப்போ நான் வயசாயிடுவேன்,  அப்போ அனுபவிக்க மனசு இருக்காது". சலிப்புடன். 


அவன்,  ஆர்வமா,  சற்று உயர்ந்த குரலில்,  " ம்மா,  ஒரு தேவதய கல்யாணம் பண்ணிகிட்டு உனக்கு விதம் விதமா சாப்பாடு போட சொல்றேன்,  அவள  உன்னை அன்பா  கவனிக்க சொல்லுவேன்.  சரியா? ",  அம்மா திருப்தியடைவாள் என்ற நம்பிக்கையில் அவளது கண்களை உற்று நோக்கினான்.  


அவள்,  சற்று விரக்தியில்,  " லூசாடா,  உனக்கு?  எனக்கு சாப்பாடு போடவும்,  கவனிக்கவுமா,  அவள கட்ட போற,  அதாட அவளுக்கு வேலை? நானும் எதிர்பார்க்கல,  எதிர்பாக்கவும் மாட்டேன். உனக்காக மட்டும் தான் அவள கல்யாணம்    பண்ணணும்,  ஆமா,  உன்ன தான் அவா கவனிக்கணும்,  நல்ல துணையா இருக்கணும், மண்டு மாதிரி பேசாத "


போம்மா,  எது சொன்னாலும் தப்பா,  உனக்கு என்ன வேணும்னு சொல்லு என என மேலும் அவள் அருகே வந்தான். 


கண்ணீர் அம்மாவின் கண்ணில் எட்டி பார்த்து நொடி நேரத்தில் உருள ஆரம்பித்தது. 

" ஏய்,  நீ எங்க இருந்தாலும் என்ன பார்க்க அடிக்கடி வரணும்,  குரல் குன்றியது.  அடிக்கடி கூப்டு பேசணும்,  கூப்பிடுவியா?  என சொல்லி விட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தாள்,  "நான் செத்து போயிட்டா,  உன் மடில தான் இருக்கணும்,  நீ தான் என்னை சுடுகாட்டுக்கு கொண்டு போவணும்,  உன்னோட ஒவ்வொரு பிரார்த்தனையிலும்  நான் இருக்கணும்,  கண்ணீர் அவளது வார்த்தைகளை விட வேகமாக உருண்டு ஓடுகிறது.  என்னோட அந்த தூக்கமில்லா இரவுகள் உனக்காக மட்டுமல்ல,  என்னை படைச்ச இறைவனுக்கும் சேர்த்து தான். ஏன்னா,  உன்ன எனக்கு கொடுத்தது அவன் தான். அவன் கொடுத்த பொக்கிஷம் நீ.  என அவனது கண்களை பார்த்து செய்வியா? என கண்ணீரை துடைத்து கொண்டே கேட்டாள். 


பதில் சொல்ல முடியாமல்,  அவளது மடியில் முகம் புதைத்து நனைத்தான்.  


மௌனம்,  மௌனம்,  மௌனம்.  


இது தான் நமக்கும்.