Wednesday, February 20, 2013

திருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்!



அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. கல்யாண ஹாலில் எல்லோரும் சந்தோஷமாக திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, திடீரென மணப்பெண்ணின் பத்து பவுன் தங்க செயின் காணவில்லை. தங்க செயினை யார் எடுத்திருப்பார்கள் என மணப்பெண் வீட்டார் விசாரிக்க ஆரம்பிக்க, மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் வந்தது. அவரை பெண் வீட்டார் கேள்வி கேட்க, இது மணமகன் வீட்டாருக்குத் தெரிந்தவுடன் அவர்கள் தாம்தூமென்று குதிக்க, கடைசியில் திருமணமே நின்றுபோகும் அளவுக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக, அந்தத் தங்கச் செயின் எப்படியோ திரும்பவும் கிடைத்துவிட, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. 

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திருமணக் காப்பீடு. நகை திருட்டுக்கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;  திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்  அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பு களுக்கோ இந்த பாலிசி கைகொடுக்கும்.

இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்.

''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவதில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே எந்த அசம்பாவிதமும் நடந்துவிடப் போவதில்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.  

திருமண இன்ஷூரன்ஸ் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குக் கிடைக்கும். திருமண அழைப்பிதழை அடிப்படையாக வைத்து இன்ஷூரன்ஸ் பெறலாம். திருமணத்திற்கு எவ்வளவு நகை, பணம் எவ்வளவு புழங்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார், திருமணத்திற்கு விருந்தினராக வருகிறவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம்.  திருமணத்திற்கு முதல்நாள்கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

பணம், நகை திருடுபோனால், விபத்து ஏற்பட்டால், நெருங்கிய உறவுகள் இறந்து அதனால் திருமணம் தடைபட்டால், திருமண மண்டபத்தில் ஏற்படும் சொத்து சேதம் ஆகியவற்றிற்கு கவரேஜ் கிடைக்கும்.  திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே இழப்பீடு பெறமுடியும். வெள்ளம், கனமழை, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் திருமணம் நின்றாலும் க்ளைம் கிடைக்கும். அதேபோல ஊரடங்கு உத்தரவு, அவசர காலநிலை, தீவிரவாதத் தாக்குதல் போன்றவை 25 கி.மீட்டருக்குள் நடந்து, அதனால் திருமணம் தடைபட்டால்  க்ளைம் கிடைக்கும்.

எதற்கெல்லாம் கிடைக்காது?

வரதட்சணை பிரச்னை, காதல் விவகாரங்கள் போன்றவற்றால் திருமணம் தடைபட்டால் க்ளைம் பெறமுடியாது. இந்து கோயில்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கிறிஸ்தவ ஆலயத்தில் நடக்கும் திருமணத்திற்கு க்ளைம் கிடைக்க வாய்ப்புள்ளது.

க்ளைம்-ல் கழிவு!

தீ, இயற்கை சீற்றத்தினால் திருமணம் தடைபட்டால் க்ளைம் தொகையில் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், திருமண மண்டபத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால் 5 சதவிகிதம் அல்லது 10,000 ரூபாய், பணம் தொலைந்துவிட்டால் 10 சதவிகிதம் அல்லது 5,000 ரூபாய், நகை தொலைந்துவிட்டால் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், பொதுமக்கள் சேதத்திற்கு 5 சதவிகிதம் அல்லது 25,000 ரூபாய். இதில் எது அதிகமோ அதை க்ளைம் தொகையில் கழித்துவிட்டு மீதித் தொகை மட்டும்தான் கிடைக்கும்.

பிரீமியம்!

திருமணம் நிறுத்தப்பட்டால், திருமண மண்டபத்திற்கு சேதம் ஏற்பட்டால், விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், நகை, பணம் திருடு போனால் ஆகியவற்றிற்கு தனித்தனியாக தலா 2 லட்ச ரூபாயும், பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 11 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் சுமார் 3,000 ரூபாய்க்குள்தான்'' என்றார்.

இனி என்ன, திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸுக்கும் ஒதுக்கிடலாமே!


(Nanayam Vikatan, Feb 17, 2013)