Saturday, December 18, 2010

‘‘ஜீஸஸ் ஒன்லி நெவர் ஃபெயில்ஸ்மா!’’

''ஜீஸஸ் ஒன்லி நெவர் ஃபெயில்ஸ்மா!''

என் மகன் சிவஸ்ரீராம் ஒரு கான்வென்ட் ஸ்கூலில் யூ.கே.ஜி. படித்தபோது, அன்று அவனுடைய புராகிரஸ் ரிப்போர்ட் கார்டை அப்பாவிடம் காண்பித்துக் கொண்டிருந்தான். இடையில் புகுந்த நான், கார்டைப் பார்த்துவிட்டு, ''ஏண்டா தமிழ்ல ஃபெயில்..?'' என்றேன் கோபத்துடன். உடனே அவன், ''அம்மா... என் ஃபிரண்ட் நிவேதாகூட தமிழ்ல ஃபெயில், என் பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற வெங்கடேஷ§ம் ரெண்டு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆயிட்டான்மா...'' என்று சமாளித்தான்.

 ''உங்க கிளாஸ்ல ஃபெயில் ஆனவங்க பத்தியே சொல்றியே... ஒருத்தர் கூடவா எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ் பண்ணல..?'' என்றேன், இன்னும் கோபமாக.

உடனே, முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, ''ஜீஸஸ் ஒன்லி நெவர் ஃபெயில்ஸ்மா!'' என்று சொல்ல, கோபம் மறைந்து சட்டென புன்னகை பரவிவிட்டது என் முகத்தில். என் கணவரின் சிரிப்பலை ஓய்வதற்கு சற்று நேரமானது!


 '' 'கேரட்'டுக்கு தமிழ் தெரியுமா?''

எங்களுடைய மகள் வழி பேத்தி சிதம்பரத்தில் இருக்கிறாள். என் மகன்கள் இருவரும் சென்னையில் வேலை பார்க்கிறார்கள். அந்த ஐந்து வயது வாண்டுவிடம், ''உன் ரெண்டு மாமாவும் எங்க வேலை பார்க்கிறாங்க?'' என்று கேட்டால், ''பெரிய மாமா சென்னையில, சின்ன மாமா மெட்ராஸ்ல'' என்பாள்! அவளுக்குப் புரிய வைக்க, ''சென்னை, மெட்ராஸ் ரெண்டும் ஒண்ணுதான்'' என்றான் என் மகன். ''அது எப்படி மாமா?'' என்று அவள் நம்பாமல் கேட்க, ''கத்திரிக்காய்ங்கிறது தமிழ் வார்த்தை. ஆனா, இங்கிலீஷ்ல அதை எப்படிச் சொல்றோம்..?'' எனக் கேட்டான். ''பிரிஞ்சால்!'' என்றாள் தாமதிக்காமல். ''அது மாதிரிதான்... சென்னைனா தமிழ், மெட்ராஸ்னா இங்கிலீஷ்!'' என்று பொறுமையாக விளக்கினான். சட்டென, ''அப்ப கேரட்டை எப்படி மாமா சொல்வீங்க?'' என்று அவள் எதிர்க்கேள்வி கேட்க, பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென விழித்தான் என் மகன் அந்த துறுதுறு செல்லத்திடம்!
 


''கூலா இருங்க ஆச்சி!''

ஒரு விசேஷத்துக்கு செல்வதற்காக பட்டுப் புடவையையும், அதற்கு மேட்சிங் பிளவுஸையும் கட்டிலில் எடுத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து பார்த்தால்... பிளவுஸைக் காணவில்லை. வீடு முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. எதேச்சையாக ஃப்ரிட்ஜைத் திறந்த என் மருமகள் சர்ப்ரைஸாகி, ''அத்தை... இங்க இருக்கு...'' என்று அதற்குள்ளிருந்த பிளவுஸை என்னிடம் எடுத்துக் கொடுத்தாள். ''ஃப்ரிட்ஜிக்குள்ள அதை யாரு வெச்சிருப்பாங்க..?'' என நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த நான்கரை வயதுப் பேரன், எங்களிடம் ஓடிவந்து, ''ஆச்சி, நீங்கதான சொன்னீங்க... அந்த சட்டையைப் போட்டா வேர்த்துக் கொட்டுதுனு. அதான் ஜில்லுனு இருக்கறதுக்காக நான்தான் ஃப்ரிட்ஜிக்குள்ள வெச்சேன்'' என்றான், தன் சின்னக் கண்கள் மின்ன! அவன் பாசத்தை நினைத்து மனம் மகிழ்ந்து அவனைக் கட்டிக் கொண்டேன்!