Monday, December 13, 2010

நியாயமா... நாணயமா?

 

நியாயமா... நாணயமா?


 
கதை: அக்பர் ஒருநாள், ''பீர்பால் உங்களுக்கு நியாயம் வேண்டுமா அல்லது தங்க நாணயம் வேண்டுமா என்று கேட்டால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?'' என்று கேட்டார், . (இந்த அக்பருக்கு வேறு வேலை வெட்டியே இல்லைபோலும்!) ''இதில் என்ன சந்தேகம். தங்க நாணயம் தான் பேரரசே!'' என்றார் பீர்பால் சட்டென.
 

 

பீர்பாலிடம் அந்தப் பதிலை எதிர்பார்க்காத அவையோர் அதிர்ச்சியில் சிலையாக, அக்பருக்கோ இதயமே ஒரு நொடி நின்று துடித்தது. ''கடைக்கோடி சேவகன் இந்தப் பதிலைச் சொல்லி இருந்தால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன். புத்திமான், நேர்மையாளன் என்று நான் முழுமுதல் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் இப்படிப் பதில் சொல்வீர்கள்  என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!'' என்று அங்கலாய்த்தார் அக்பர். 


பீர்பாலின் தீர்வு: ''ஒருவரிடம் எது இல்லையோ, அதைக் கேட்டுப் பெறுவது மனித இயல்பு பேரரசே!'' என்று அமைதியாகப் பதிலளித்த பீர்பால் மேலும் தொடர்ந்தார், ''உங்கள் ஆட்சியில் நமது தேசம் முழுக்க, அமைதி, நீதி, நியாயம் ஆகியவை நிலைகுலையாமல் சீரும் சிறப்புமாகச் செழித்து இருக்கிறது. ஏற்கெனவே போதுமான நீதி, நியாயம் நிலவும் சூழலில், என்னிடம் இல்லாத தங்க நாணயத்தைக் கேட்டுப் பெறுவதுதானே இயல்பான மனிதனின் செயலாக இருக்கும்!''



ஒரே நொடியில் அங்கலாய்ப்புச் சுழலில் இருந்து விட்டு விடுதலையாகி, பூரிப்புக் கடலில் திளைத்த அக்பர் அகமகிழ்ந்து, பீர்பாலுக்கு ஆயிரம் தங்க நாணயங்களைப் பரிசளித்தார்.



மெசேஜ்-1: மேலதிகாரியையோ, வீட்டுப் பெரியவர்களையோ நியாயமாக 'நைஸ்' செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தவறவிடவே கூடாது. உள்ளபடியே உங்கள் சீனியரிடம் பளிச்சிடும் திறமைகளை நீங்கள் பாராட்டினால், நீங்களே எதிர்பாராத சமயம் ஒன்றில் அது உங்களுக்குத் துணை நிற்கும்.


மெசேஜ்-2: எவரையும் கடிந்துகொள்வதற்கு முன், அவரது செயலின் நோக்கத்தைக் கணிக்கப் பாருங்கள். ஒருவேளை, நீங்கள் அறியாத ஏதேனும் ஒரு காரணத்துக்காக அவர் அப்படி நடந்துகொண்டு இருக்கலாம்.