Friday, December 3, 2010

கோழியா... முட்டையா?

கோழியா... முட்டையா?

கதை: அன்றைய அலுவல்கள் முடிந்து அரசவை கலையும் வேளையில் வந்தார் அந்தப் பண்டிதர். அறிவார்ந்த மனிதர் என்பதால், அவரைத் தவிர்க்க முடியாமல் வணங்கினார் அக்பர். ''உமது அமைச்சர்களுக்கு ஒரு சவால் விடுக்க விரும்புகிறேன். நான் கேட்கும் ஒரே ஒரு கஷ்டமான கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும். அல்லது நூறு எளிமையான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். உமது அமைச்சர்கள் தயாரா?'' என்று எகத்தாளமாகக் கேட்டார் பண்டிதர். அக்பர் பீர்பாலை நோக்க... அவர் பண்டிதர் முன் வணங்கி நின்றார். ''உங்களது அந்த ஒரே ஒரு கஷ்டமான கேள்விக்குப் பதில் அளிக்க நான் சித்தமாக இருக்கிறேன்!'' என்றார் பீர்பால்.

பீர்பாலின் தீர்வு: உதடு பிரியாமல் புன்னகைத்த பண்டிதர், ''கோழி முதலில் வந்ததா... முட்டை முதலில் வந்ததா?'' என்று கேட்டார். ஒரு கணம் கூட யோசிக்காமல், ''கோழிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை!'' என்று பதில் அளித்தார் பீர்பால். அந்த மின்னல் வேகப் பதிலில் திகைத்த பண்டிதர், ''அது எப்படி? முட்டை ஏன் முதலில் வந்திருக்கக் கூடாது?'' என்று கேட்டார். ''இந்த இரண்டாவது, மூன்றாவது கேள்விகள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன. பண்டிதரின் ஒரே ஒரு கடினமான கேள்விக்கு நான் பதில் அளித்து விட்டேன் என்பதை நான் நினைவூட்டத் தேவை இல்லை!'' என்றார் பீர்பால் அடக்கமாக!

மெசேஜ்: நீங்கள் ஒருவருக்குப் பொறிவைக்க நினைத்தால், அவர் தப்பிப்பதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிடுங்கள்!