Friday, December 3, 2010

முட்டாள்களின் பட்டியல்!

முட்டாள்களின் பட்டியல்!

கதை: ஒரு முறை அக்பரின் அரண்மனைக்குச் சில உயர் ரக அரபுக் குதிரைகளோடு வந்தான் வியாபாரி ஒருவன். குதிரைகளின் கம்பீரத்தில் மயங்கிய அக்பர், அத்தனை குதிரைகளையும் வாங்கிக்கொண்டார். அதோடு, சில லட்ச ரூபாய்களை முன்பணமாகக் கொடுத்து, மேலும் பல குதிரைகளைக் கொண்டுவருமாறு பணித்தார். 'அப்படியே ஆகட்டும் பேரரசே!' என்று பணத்தோடு அவன் கிளம்பிச் சென்றான். சில நாட்கள் கழித்து, அக்பர் பீர்பாலிடம் நாட்டில் உள்ள முட்டாள்களின் பட்டியலைத் தயாரிக்கச் சொன்னார். (அவ்வப் போது பீர்பாலிடம் இப்படிக் கோக்குமாக்கு சவால்கள்விடுவது அக்பர் வழக்கம்!) பீர்பால் ஒரு பட்டியலைத் தயாரித்து நீட்டினார். அதில் முதல்  பெயர் - அக்பர்! 'நாட்டின்பேரரசனை முதல் முட்டாளாகக் குறிப்பிடுவதுதான் உன் மதியூகமா?' என்று சினத்தில் சிடுசிடுத்தார் அக்பர்.

பீர்பாலின் தீர்வு: பொறுமையாகப் பதில் அளித்தார் பீர்பால். ''எந்த உத்தரவாதமும் இல்லாமல், முன் பின் தெரியாதவனிடம் சில லட்ச ரூபாய்களைத் தூக்கிக் கொடுத்த செய்கைதான் உங்களுக்கு அந்த அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது!''

''ஒருவேளை அந்த வியாபாரி குதிரைகளோடு திரும்பி வந்துவிட்டால்?'' என்று கேட்டார் அக்பர். ''அப்போது உங்கள் பெயரை நீக்கிவிட்டு, அவன் பெயரை அங்கு சேர்ப்பேன்!'' என்றார் பீர்பால். ஒரு கணம் யோசித்த அக்பர், தனது தவற்றை உணர்ந்து அமைதியாகிவிட்டார்.

மெசேஜ்-1: எவருடைய முக தாட்சண்யத்துக்காகவும் அதீத சலுகை வழங்காதீர்கள். பிறகு, வருந்துவது நீங்களாகத்தான் இருக்கும். எவர் மீது எப்போது நம்பிக்கை வைப்பது என்பது சூழ்நிலையைப் பொறுத்தது என்றாலும், அந்தச் சூழல் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மெசேஜ்-2: உங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் உங்கள் தவற்றைச் சுட்டிக்காட்டினாலும், கோபப்படாமல் அந்த தவறில் இருந்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய பாடத்தை உணருங்கள்!