Sunday, December 12, 2010

முட்டாள்களின் கூடாரம்‏

முட்டாள்களின் கூடாரம்‏

 

 

அறிமுகமில்லாத, முகவரி தெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" என்பதாகத் தான் இருக்கும். அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தாம் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!



ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது.


அனைத்து ஊர்களிலும் எங்கு காண்கிலும்  பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிகை அடித்து விளம்பரப்படுத்துவது, இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது (எவருடைய பெயரையோ சொல்லி). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவையாகவும், சில (இரத்ததானம், கண்தானம்) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்றவை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.



இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும். தம் பெற்றோரின் பிறந்த நாள் (அ) திருமண நாள் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்காது.உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்....



உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? உங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பி வந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தைகளிடம் நட்பாக நடந்து கொண்டதுண்டா? உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம் தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா... நிரந்தரமாக எண்ணிப் பார்க்கும் அளவுக்கு!
 இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களோ அவர்களுக்காக மண்சோறு சாப்பிடுகின்றீர்கள். என்னவென்று சொல்வது உங்களைப் பற்றி?



உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமையின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா? அவர்கள் மீது இரக்கப்பட்டதாவதுண்டா?


யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.



விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? அத்தனை உயர்ந்த தலைவர்களை மறந்துவிட்டு சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது. மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர்.


திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான். இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறி பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.



அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இத்தகைய சூழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது.  நண்பர்களே! கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். "2020-ல் இந்தியா ஒரு வல்லரசாகத் திகழும்" என்ற நம் குடியரசுத் தலைவரின் கனவு, இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. என் இனிய தோழர்களே! உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.



திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதீர்கள். அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள். உங்களுக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டு, இந்நாட்டிற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்காக உழையுங்கள். இந்தியாவை வல்லரசாக்குங்கள்.



என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிகைகள் தான். பத்திரிகைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுய விளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.


இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல்த் தொழில்நுட்ப ஊடகம் பத்திரிகைகள் தான். அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.



ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிகைகள் தான். அவர்கள் நினைத்தால், செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பத்திரிகைகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளைத் தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதீர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதீர்கள்.


எதனையுமே உடனடியாக நம்பி விடும் இந்த மக்கள், பத்திரிகைகளால் (உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்றமடைந்துள்ளனர். இனியும் தொடர வேண்டாம் இந்த இழிநிலை. இந்தியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்கினை, கடமையினை உணர்ந்து செயல்படுங்கள். இந்தியாவை வல்லரசாக்குவதில் உதவிடுங்கள்.