Sunday, July 26, 2015

காயங்களை ஆற்றும் நியாயங்கள்!

'மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்; முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர் எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்; என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' - இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக விளக்கம் தருவர்.

கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க முடியாது என்பது உண்மையே!
இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள் உள்ளன.

முதலாவது: 'அவர்கள் சொல்லத் தான் செய்வர்...' என, சொல் தாக்குதல்களை தாங்கும்படியான மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள், சிறு குழந்தைகளாக இருந்த போது, நம் மடியில், சிறுநீர், மலம் கழித்து நம்மை சிறிதளவு சோதித்தனர். இன்று, அவர்கள் வளர்ந்து விட்டதால், இடுப்பிற்கு கீழே கழியாமல், வாய் வழியே கழிகின்றனர்.

பெற்ற கடமைக்கு, நம் பிள்ளைகள் தானே என்று பாச உணர்வோடு பொறுத்தும், சகித்தும் போக வேண்டியது தான், வேறு வழி!

பதிலுக்கு நாமும் குரலை உயர்த்தினால், அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போவரே தவிர, அடங்க மாட்டார்கள். காரணம், இன்றைய ஒலி மற்றும் காட்சி ஊடகங்கள் இவர்களுக்கு சொல்லி தருவதே, 'அடங்கிப் போகாதே... உன் உரிமையை நிலைநாட்டு; உன் கருத்தை வலியுறுத்து; கிழங்கள் கத்தினால் கத்திவிட்டு போகட்டும்...' என்று அடங்காப் போக்கை நியாயப்படுத்துகின்றன. அத்துடன், 'மேலைநாட்டு பிள்ளைகள் எப்படி தெரியுமா...' என்று, நம் பண்பாட்டிற்கு சரிப்பட்டு வராத விஷயங்களை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நியாயப்படுத்தவும் பார்க்கின்றன.

தங்களுக்காக மட்டுமே வாழ்கிற மேலைநாட்டு சுயநல பெற்றோர் எங்கே, தமக்கென வாழாமல் பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்கிற நம்மவர்கள் எங்கே!

கை நீட்டி காசு வாங்குகிறோம்; சொல் மட்டும் கூடாது என்றால் எப்படி! ஒரு உணவகத்தில் சிறு தொகை தந்து, இரு இட்லிகளை சாப்பிடுவோர் கூட உணவிலே குறை கண்டால், 'கூப்பிடுய்யா மானேஜரை... என்னய்யா ஓட்டல் நடத்துறீங்க...' என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது, மாதா மாதம் படியளக்கிறவர் வாய் திறக்கக் கூடாது என்றால் எப்படி?

இரண்டாவது: 'அவர்கள் தரம் அப்படி, என்ன செய்வது...' என்ற பெருந்தன்மை.
நாய் என்றால் குரைக்கத்தான் செய்யும்; குயிலோ, அழகுறக் கூவும். எனவே, நம்மை பார்த்து கத்துபவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தி, தரங்களை காண்பிக்கின்றனரே தவிர, இதற்காக வருந்தத் தேவையில்லை. 'நாய் எப்படி குரைக்கப் போயிற்று' என்றா கேள்வி கேட்பது?

மூன்றாவது: 'சொல்லும்படி நாம் இடம் தந்திருக்கக் கூடாது...' என்ற சுயகட்டுபாடு. 
ஒரு கையால் ஓசையை உருவாக்க முடியாது; இரண்டாவது கையும் சேரும் போது தான், அது ஓசையாகிறது.

வாழ்வில் நம்மை சுற்றியுள்ளோர் நம்மீது எழுப்பும் புகார் ஓசையும் இத்தகையது தான். 'நாம் செய்வதெல்லாம் சரி, நாம் பேசுவதெல்லாம் நியாயம்...' என்று நம்மை நாமே வேண்டுமானால், பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், எதிராளிகளின் பார்வையில், இவை மிகவும் குறைபாடுகளையே கொண்டிருக்கின்றன.

'என்னை எவரும் ஒன்றும் சொல்லக் கூடாது...' என்று, எதிர்பார்ப்போர், எதுவும் சொல்லும்படி வைத்துக் கொள்ளலாமா... விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகளா நாம்!

'தனக்கு தோன்றியதை செய்வோரும்,, தாம் நினைத்தது நடக்க வேண்டும்...' என்று எண்ணுவோரும், பிறரிடம், எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி?

கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர். ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில் நம் செயல்களோ வேறு!

காயங்களை ஆற்றும் நியாயங்களை, உங்கள் முன்னெடுத்து வைத்து விட்டேன். ஆறுங்கள்; மனம் தேறுங்கள்!
- லேனா தமிழ்வாணன்