Thursday, July 2, 2015

ஆயிரம்தான் கஷ்டம், வலினு பிரசவத்துல இருந் தாலும்,...

எ னக்கு ஊசி, மாத்திரைன்னாலே பயம்தான். கையில் காயம்பட்டு ஒரு துளி ரத்தம் வந்தால் மயக்கமே வந்துடும். இவ்வளவு ஏன், ஆஸ்பத்திரி வழியா போகக்கூட பயம்! இந்த லட்சணத்தில் எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஓடிடுச்சு.

''வயித்துல புழு, பூச்சி ஏதுமில்லையா?''னு யாராவது கேட்டால், ''நான் சுத்த சைவம். அதெல்லாம் சாப்பிடுறதில்ல!''னு சொல்லிச் சிரிப்பேன். உள்ளுக்குள்ள குழந்தை ஆசை இருந்தாலும், வலியைப் பொறுத்துக்கிட்டு எப்படி குழந்தை பெத்துக்கறதுனு பயந்து, ஆசையை ஒதுக்கி வைத்தேன்.

இந்த நிலையில ஒருநாள், ''கங்கிராட்ஸ், நீ அம்மாவாகப் போற...''னு சொன்னாங்க டாக்டரம்மா. மத்தவங்களா இருந்திருந்தா, அந்த நிமிஷம் வயித்துல ஒரு கோடி பட்டாம் பூச்சி பறந்த மாதிரி சிலிர்த்திருப்பாங்க. ஆனா, நான்? ''ஐயோ... எனக்கு எப்படி டெலிவரியாகப் போகுதோ''னு கத்தினேன். ஷாக் ஆன டாக்டர், ''ஏய்... இன்னும் எட்டு மாசமிருக்கு. அதுவரை சும்மா இரு...''னு அரட்டிட்டு, இன்னொரு டாக்டரை அறிமுகப்படுத்திட்டு நழுவிட்டார்.

புது டாக்டரோட ஆலோசனைப்படி, வீட்டுல என்னை கண்ணுல வெச்சு தாங்குனாங்க. ஒவ்வொரு முறை ஆஸ்பத்திரி போறதுக்கு முன்னாடியும் ஒத்திகை நடக்கும். 'டாக்டர் என்ன கேள்வி கேட்பார், எப்படி செக் - அப் செய்வார்'னு ஒவ்வொருத்தரையும் கேள்வியால துளைச்செடுப்பேன்.

ஐந்து மாதங்கள் ஒண்ணுமில்லை. ஆறாம் மாதம் செக்-அப் போனப்ப, ''தடுப்பூசி போடணும்''னு சொன்னார் டாக்டர். அவர் தொட வந்தப்பவே நான் ஆர்ப்பாட்டம் பண்ண, ''நீங்க வேற டாக்டர் பாருங்க''னு சொல்லிட்டார் இவரும்.

மூணாவதா நான் பார்த்த டாக்டர், மனசும் புரிஞ்சவர். முன்னாடியே அம்மா அவர்கிட்ட என்னைப் பத்தின விபரங்களை சொல்லிட்டார். அதனால டாக்டர் என் பிக்கல் பிடுங்கல்களை பொறுத்துக்கிட்டார், டெலிவரி வரை.

டெலிவரிக்கு சில நாட்களுக்கு முன்னாடியே எனக்கு வலி வர, என்னை ஒருத்தரும் லட்சியம் பண்ணலை. நான்தான் எடுத்ததுக்கெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் பண்றேனே... அதனால, ஒருவழியா ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போனாங்க.

டாக்டர் என்னை பரிசோதனை பண்ணிட்டு, ''இன்னிக்கே டெலிவரி ஆகிடும். உடனே அட்மிட் பண்ணுங்க''னு சொன்னார். எப்போ நான் ரகளை ஆரம்பிக்கப் போறேனோனு எல்லோரும் என்னைப் பார்க்க... திடீர்னு அம்மாகிட்ட இருந்து அழுகை வெடிச்சது. ''ஐயோ, ஒன்பது மாசமா அவ படுற பாடு எனக்குத்தான் தெரியும். அவ எப்படி வலிய தாங்குவாளோ''னு புலம்பவும், எனக்கு பயமாயிடுச்சு... அம்மாவை நினைச்சுதான்.

வலி அதிகரிக்க அதிகரிக்க, நர்ஸ்கள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வந்து ஒரே அட்வைஸ்! ''முழு வலி வந்து டெலிவரி ஆக எனர்ஜி வேணும். அதனால கட்டில் கம்பிய பிடிச்சிட்டு பல்லை கடிச்சிட்டு வலிய பொறுத்துக்கோ''னு சொன்னாங்க.

அப்புறம், நர்ஸ்கள் அந்த இடத்தை கிளீன் பண்ண, ப்ளீடிங் செக்கப் செய்ய, வலி வர்றதைப் பார்க்க... நான் இவ்வளவு நாள் சேர்த்து வெச்சிருந்த அச்சம், மடம், நாணம் எல்லாம் பறிபோக, 'டெலிவரியானா போதும்'னு ஆகிடுச்சு.

ஒரு கட்டத்துல நான் ரொம்ப அழ ஆரம்பிக் கவும், என்னை ஒருவழியாக டெலிவரி வார்டுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. ''ஒரு சென்டிமீட்டர்தான் ஓப்பன் ஆகியிருக்கு. எப்படியும் டெலிவரி ஆக இரண்டு மணியாகும்''னு ஒரு நர்ஸ் கூற, ''இல்லை. மூன்று மணியாகும்''னு இன்னொருத்தர் கூற, ஆளாளுக்கு பந்தயம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு வழியா ராத்திரி 7.30 மணிக்கு உள்ளே வந்த டாக்டரம்மா என்னை பரிசோதிச்சுட்டு, ''இவளுக்கு டெலிவரியாக இன்னும் டைம் இருக்கே. 'விக்ரமாதித்தன்' பார்த்துட்டு (சன் டி.வி. தொடர்தாங்க) வந்துடறேன்''னு, மாடில இருந்த அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க.

போன மகராசி வரவேயில்லை. ''ஐயோ... ப்ளீஸ் டாக்டரைக் கூப்பிடுங்க''னு நான் பினாத்தவும் திரும்பவும் 8.30 மணிக்கு வந்தார். அப்பவும், ''அடடா.. இன்னும் உனக்கு டைம் இருக்கும்மா.. இரு 'ஜாக்பாட்' (ஜெயா டி.வி-லதான்) முடிச்சிட்டு வந்துடறேன்''னு போயிட்டாங்க. கடைசியா, பெரிய மனசு பண்ணி இரவு சாப்பாட்டை முடிச்சிட்டு வந்தவங்க, ''எல்லாம் ரெடியா? பேபிக்கு சோப், பவுடர் ரெடியா''னு செக் பண்ணிட்டு இருக்க, திடீர்னு ஒரு அலறல். இப்பவும் நான் இல்லீங்க. நம்ம டாக்டரம்மாதான்! அவங்களுக்கு கரப்பான்பூச்சின்னா பயமாம். கை கழுவுறப்ப வாஷ் பேசின்லேர்ந்து ஒரு பூச்சி எட்டிப் பார்த்திருக்கு.

ஒரு வழியாக டெலிவரியாக, அங்கு தையல் போடுறேன் பேர்வழினு ஒரு எம்பிராய்டரியே போட்டுவிட்டார் டாக்டர். இடையிடையே மெகா சீரியல் கதை வேறு ஓடிக்கிட்டு இருந்தது. அப்பாடா, எல்லாம் முடிச்சு, ராத்திரி 10.30 மணிக்கு என் அறைக்கு என்னை கொண்டுவந்து சேர்த்தாங்க பாருங்க... அந்த நிமிஷம் நான் அடைஞ்ச நிம்மதி இருக்கே... வார்த்தைகளால் எழுத முடியாது.

ஆயிரம்தான் கஷ்டம், வலினு பிரசவத்துல இருந் தாலும், நம்ம குழந்தைய கொஞ்சும்போது எல்லாமே பறந்து போய், புதுசா ஒரு இன்பம் பாயும் பாருங்க... அது தனி அனுபவம்! அதனால, புதுசா குழந்தைப் பெத்துக்கப் போறவங்க, என்னைப் போல பிரசவத்துக்கு பயப்படாம, ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணுங்க டெலிவரியை!