Thursday, July 23, 2015

சுயதர்மமே பிரதானம் - தத்துவ விசாரம்

முதலில் சில்லென்ற உணர்ச்சி. மறு கணம்தான் அது என்னவென்று புரிந்தது. தலையில் ஏதோ ஒரு திரவம் விழுந்திருக்கிறது. அது வழிந்து முகத்துக்கு வருகிறது. தியானத்தில் அமர்ந்திருந்த கௌசிகனின் கவனம் கலைந்தது. மனம் ஒருமுகப்படுவதற்குள் இப்படி ஒரு தொந்தரவு. கௌசிகன் கோபம் தலைக்கேறியது. சீற்றத்துடன் மேலே பார்த்தான். அவன் கோபம் மொத்தமும் கண்களில் அனலாய்த் தேங்கியிருந்தது. மேலே மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கின் மேல் அந்த அனல் பட்டது. கொக்கு சுருண்டு தரையில் வீழ்ந்தது.

கௌசிகன் திடுக்கிட்டான். என்ன நடந்தது என்பது ஒருவாறாகப் புரிந்தது. தன் தவ வலிமை தன் கோபத்தின் வழியே வெளிப்பட்டு அந்தக் கொக்கை எரித்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டான். கொக்கு இறந்ததற்காக வருத்தப்பட்டாலும் தன் தவ வலிமை குறித்த சிறு பெருமிதமும் அவனுக்கு உண்டாயிற்று.

மீண்டும் குளித்தான், பூஜை, தியானம் ஆகியவற்றை முடித்தான். நல்ல பசி. பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடி ஊருக்குள் சென்றான் கௌசிகன். கண்ணில் பட்ட முதல் வீட்டின் முன் நின்றான். "பிச்சை பெற வந்திருக்கிறேன்" என்று குரல் கொடுத்தான்.

உள்ளே மனித நடமாட்டத்துக்கான ஓசைகள் கேட்டன. ஆனால், யாரும் வெளியே வரவில்லை. "பிச்சை இடுங்கள் தாயே" என்று மீண்டும் குரல் கொடுத்தான். இந்த முறை சற்று உரக்க. யாரும் வரவில்லை. கௌசிகனின் பொறுமை கட்டவிழத் தொடங்கியது. "பசிக்கிறது. சீக்கிரம் சாப்பிட ஏதாவது கொடுங்கள்" என்றான் சத்தமாக.

வீட்டினுள் இருந்து ஒரு அம்மையார் எட்டிப் பார்த்தார். "கொஞ்சம் பொறுங்கள்" என்றார். "பசிக்கிறது" என்று கௌசிகன் பொறுமை இழந்து சொன்னான். குரலில் தவிப்பும் கோபமும் கலந்திருந்தன. பசியின் தவிப்பு. பிச்சை கேட்டு வீட்டு வாசலுக்கு முன்பு நிற்கும் சன்னியாசியைக் காக்கவைப்பது தர்மம் அல்ல என்பதால் கோபம். அவன் குரலில் அந்தக் கோபமே மேலோங்கியிருந்தது. அந்த அம்மையார் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு உள்ளே போனார். கௌசிகனின் கோபம் உச்சத்தை அடைந்தது.

நான் கொக்கு அல்ல

சிறிது நேரம் பொறுத்து அந்த அம்மையார் வெளியில் வந்தார். கையில் உணவுப் பாத்திரம். முகத்தில் புன்னகை. சன்னியாசியின் பிச்சைப் பாத்திரத்தில் உணவை இட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தார். கௌசிகனின் கண்களில் சீற்றம் பொங்கியது. அந்த அம்மையார் மீண்டும் புன்னகைத்தார்.

"நான் கொக்கு அல்ல" என்றார்.

கௌசிகன் அதிர்ந்து போனான். உடல் முழுவதும் மயிர்க் கால்கள் சிலிர்த்து எழுந்தன. உணவுப் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டுக் கை கூப்பினான்.

"தாயே, என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான்.

"இதில் மன்னிக்க என்ன இருக்கிறது?" என்றார் அந்தப் பெண்மணி. "பசியின் வேகத்தில் உங்களுக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களுக்குப் பசி என்பது எனக்கும் தெரியும். அதிதியை, அதுவும் சன்னியாசியைக் காக்க வைப்பது தர்மம் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நான் என் கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அவருக்கு உடல்நலம் சரியாக இல்லை. இந்த நேரத்தில் அவரைக் கவனிப்பதுதான் என்னுடைய பிரதான தர்மம். அதைச் செய்துகொண்டிருந்த என்னை உங்கள் கோபம் ஒன்றும் செய்யாது" என்றார்.

கௌசிகன் அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான். "கொக்கு விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான்.

அந்த அம்மாவின் முகத்தில் மீண்டும் புன்னகை.

"ஐயா, நீங்கள் இளையவர். தர்மத்தின் சூட்சுமம் உங்களுக்கு இன்னமும் தெரியவில்லை. நீங்கள் மிதிலை நகருக்குப் போய் அங்கே தருமவியாதன் என்பவரைப் பாருங்கள். அவரிடமிருந்து உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

கௌசிகன் அவரை வணங்கி விட்டு உடனே புறப்பட்டான்.

"சாப்பிட்டுவிட்டுக் கிளம்புங் கள்" என்றார் அம்மையார்.

தருமவியாதரைச் சந்தித்த கௌசிகன்

மிதிலையில் தரும வியாதரைப் பற்றி விசாரித்தான். தருமவியாதன் என்னும் ரிஷியைத் தேடி அலைந்தான். அப்படி எந்த ரிஷியும் இங்கே இல்லை என்றார்கள். இந்த ஊரில் உள்ள ஒரே தருமவியாதன் இவர்தான் என்று ஒரு கடையைச் சுட்டிக்காட்டினார்கள். கௌசிகன் வேகமாக அந்தக் கடைக்குச் சென்றான். கடையை நெருங்கியதும் ஸ்தம்பித்து நின்றான்.

அது ஒரு கசாப்புக் கடை. கடைக்காரர் மாமிசத்தை வெட்டி, எடை போட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். வேலைக்கு நடுவில் கௌசிகனைப் பார்த்துவிட்டார். "வாருங்கள்" என்று முகம் மலர வரவேற்றவர், "அந்த அம்மா அனுப்பினார்களா?" என்றான்.

கௌசிகனின் உடல் மீண்டும் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. தரும வியாதன் வியாபாரத்தை மும்முரமாகக் கவனித்துக்கொண்டிருந்தார். வருபவர்கள் அனைவரையும் இன்சொல் கூறி வரவேற்று அவர்களுக்கு வேண்டியதை விரைவாகச் செய்துதந்தார். யாருக்கும் துளி அதிருப்திகூட இல்லை. வந்தவர்களில் அவருக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனக் கலவையாக இருந்ததையும் அனைவரையும் தரும வியாதன் ஒன்றுபோல நடத்தியதையும் கௌசிகன் கவனித்தான்.

வியாபார மும்முரம் சற்றுக் குறைந்த பிறகு கடைக்காரர் கௌசிகனைத் திரும்பிப் பார்த்தார். கடையில் இருந்த தன் உதவியாளரைக் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். "கொஞ்சம் பொறுங்கள்" என்று கௌசிகனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். வெட்டப்பட்ட விலங்குகளின் மத்தியில் மிகுந்த அவஸ்தையுடன் கௌசிகன் உட்கார்ந்திருந்தான். கடை முழுவதும் பரவியிருந்த வாசனையையும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைப் பார்த்ததும் தரும வியாதன் கேட்ட கேள்வி தந்த வியப்பினால் பொறுமையுடன் காத்திருந்தான்.

சுயதர்மமே பிரதானம்

கௌசிகன் அரை மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த பிறகே தரும வியாதன் திரும்பி வந்தார். கௌசிகன் எழுந்து நின்றான். அவரை உட்காரச் சொல்லிவிட்டு, "உள்ளே என் பெற்றோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடம்பு முடியவில்லை. அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தேன்" என்றார். கௌசிகன் ஒன்றும் பேசவில்லை. தரும வியாதனே தொடர்ந்து பேசினார்.

"தர்மம் என்பது மிகவும் சூட்சுமமானது. பொதுவான தர்மம் என்று சில விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொருவரும் தனக்கான தர்மத்தைக் கடைப்பிடிப்பதையே தன் பிரதான கடமையாகக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன" என்றார்.

கௌசிகன் முகத்தில் அமைதி. காட்சிகளும் மணமும் தந்த ஒவ்வாமை அவனிடத்திலிருந்து மெல்ல விலக ஆரம்பித்தது. தரும் வியாதன் சொல்வதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

"தர்மம் செய்வதால் வரும் வலிமை நமக்கு விசேஷ ஆற்றலைக் கொடுக்கும். நாம் கொடுக்கும் வரமும் சாபமும் பலிக்கும். நமது கோபம் கொக்கையோ மனிதனையோகூடக் கொன்றுவிடும். அதேபோலத் தன் ஸ்வதருமத்தைக் கர்ம சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர்களுக்கும் கடும் தவத்துக்கு இணையான பலன் கிடைக்கும்.

அந்த அம்மையார் தன் கணவனுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். இல்லத்தரசி என்னும் முறையில் தன் பிரதானக் கடமையை, தன் ஸ்வதர்மத்தை அவர் செய்துகொண்டிருந்தார். நான் எனக்கென அமைந்த கடமையைச் சிரத்தையுடன் செய்கிறேன். என் தொழிலில் நேர்மையாக இருக்கிறேன். என் பெற்றோரையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறேன். இதுவும் தவத்துக்கு ஒப்பானதுதான்..."

தரும வியாதன் பேசப்பேசக் கௌசிகனின் மனதில் இருந்த புகை மூட்டம் விலகியது.