Tuesday, July 21, 2015

ஏ.டி.எம்., இயந்திரமா பெற்றோர்?

இக்கால பிள்ளைகளின் வாழ்க்கை முறைக்கும் நாம் கடந்து வந்த பிள்ளைத்தன்மைக்கும் தான் எத்தனை வேறுபாடு. சுமையின்றி அரிசி உமியைப் பரப்பி ஆதி எழுத்தான 'அ' வை கையைப் பிடித்து எழுதச் சொல்லித் தரும்போது தென்பட்ட அன்னையின், ஆசிரியரின் அன்பான விரல் அழுத்தத்தை இக்கால படிப்பு முறைகள் உணர வைப்பதில்லை.பள்ளியில் 'டிசிப்பிளின்' ரொம்ப முக்கியம் என்று வகுப்பில் முதல் நாளில் தோன்றும் உடைகளின் இறுக்கமும், கால் விளம்பில் அச்சாய் பதியும் சாக்ஸ்குகளின் வடுவும், முதுகில் அழுத்தும் புத்தகப்பைகளும் அன்றைய பள்ளிக் குழந்தைகள் இழந்திருந்ததே வரம்தான்.

யாருக்கும் நேரமில்லை

---'ஸ்கூல்ல கேண்டீன் இருக்கு. போகும் போதே ரூவா கொடுத்துடறேன். பிடித்ததை வாங்கித் தின்னட்டும்'. இப்படி பெருமை பேசும் நிகழ்கால அம்மாக்களின் குரல்கள் எங்கும் ஒலிக்கிறது.

பிள்ளைகளின் 'ஸ்நேக்ஸ் பாக்ஸ்' ஒவ்வொன்றிலும் குர்குரேவும், லேய்சும்தான் நிறைந்திருக்கிறது. 'ஏன் அதில் இரண்டு பழங்களின் துண்டை போட்டு உண்ண பிள்ளைகளுக்கு பழக்கவில்லை' என வருத்தப்படும் ஒரு ஆசிரியையின் குரலை 'வாட்ஸ் அப்பில்' கேட்க நேர்ந்தது;

எல்லாவற்றிலும் ஒரு சோம்பேறித்தனம்.விடுமுறை தொடங்கிய போது ஒரு தோழி என்னிடம் வந்து கேட்டார். ''உங்கள் பிள்ளைகளை நீங்க எங்கே 'கோச்சிங் கிளாஸ்' சேர்த்து விடுகிறீர்களோ அங்கேயே என் பிள்ளைகளையும் சேர்த்து விடுங்கள். காலையில் 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை எத்தனை 'கிளாஸ்' இருக்கோ அத்தனையிலும் சேர்த்து விடுங்க. நான் 'பீஸ்' கட்டிவிடுகிறேன். என்னாலே 'லீவுடைம்மில்' அவர்களை கவனிக்க முடியவில்லை'' என்றார்.

இந்த கேள்வி சற்றே கவலைக்கு உள்ளாக்கியது. இத்தனைக்கும் அந்தத் தோழியாவது அலுவலகம் செல்கிறவர். ஆனால் வீட்டில் சீரியல்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட 'கோச்சிங் கிளாஸ்களை' தேடிஓடுவது, பிள்ளைகளின் கற்பனை அறிவை வளர்ப்பதை விடவும், அவர்களை அருகில் சேர்த்தால் தங்கள் வேலைகளை சரிவர செய்ய முடியாது என்பதாகவே இருக்கிறது.

கிளிப்பிள்ளை வளர்ப்பு

சின்ன வயசிலேயே மற்றவரின் பாராட்டுக்காகவே நாம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அல்ல அல்ல வதைக்கிறோம். விழா ஒன்றிற்கு வந்திருந்த ஒரு உறவுப் பெண்மணி, தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்தார் துறுதுறுவென்று இருக்கவேண்டிய பையன் மிகவும் சோர்வாய் இருந்தான். ஆனால் அவனின் அம்மா அவனிடம் கேட்ட சில பொது அறிவுக் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லியபடி வந்தான். விழாவில் அனைவருக்கும் பெருமிதம் பையனை எப்படி வளர்த்திருக்கா பாரு! நமக்கும் இருக்கே! எந்நேரமும் சினிமா பாட்டு பாடிகிட்டு என்று கணவர்மார்களின் வசவு வேறு.
திடுமென்று என்ன நடந்ததோ அம்மாவின் கேள்விக்கு மகன் தவறான பதிலைச் சொல்லிவிட்டான்.''இதற்கு இது பதில் இல்லையடா'' என்று அன்னை குரல் உயர்த்தவும், மகனோ, ''நான் சரியாகத்தான் பதில் சொன்னேன். நீதாம்மா தப்பா வரிசை மாற்றிக் கேள்வி கேட்டுட்டே'' என்று சொன்னானே பார்க்கலாம்.
இப்படி குழந்தைகளை சொல்வதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகளாக  மாற்றி வைப்பதால்தான் படிப்புக்கு பின், தன் திறன் என்ன என்றும் உணராமல் போய்விடுகிறார்கள். மனப்பாடம் செய்வதாலும், பெற்றோரின் திணிப்புகளுக்கு ஆளாவதாலும் தான் பிள்ளைகள், தங்கள் சுயத்தை இழக்கிறார்கள்.
 
இழக்கும் அரவணைப்புகள்
 
பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் இருவருக்குமே அவரவர் துறை சார்ந்த மனச்சோர்வு இருக்கும். மணிக்கணக்கில் முகப்புத்தகத்திலும், சீரியலிலும், வாட்ஸ்அப்பிலும் மூழ்கிகிடக்கும் நாம், பிள்ளைகளின் பேச்சை காதுகொடுத்து கேட்பதில்லை; அப்படியே மீறி பிள்ளைகள் பேச வந்தால் ஒன்று தொலைக்காட்சியை ஆன் செய்து விடுவது அல்லது ஏதாவது கேம்ஸ் விளையாடச் சொல்வது. எப்போதோ வரப்போகும் தேர்விற்கு படிக்கச்சொல்லுவது, இதுதான் நம்மில் பலர் அதிகமாய் உபயோகிக்கும் வார்த்தைகளாக இருக்கும்.

அப்போதைக்கு நம் அதட்டலிலோ, கொஞ்சலிலோ அவர்கள் சமாதானம் அடைந்தாலும், மனதிற்குள் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்ற அந்த நினைப்பு மறந்து போகும் நாளடைவில் ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தலைதுாக்கும். இப்படித்தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகி, தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட மாயையான ஒரு உலகை இன்றைய வியாபார நிறுவனங்கள் அழகாக அவர்களுக்கு ஏற்படுத்தித் தருகின்றன. அவர்களுக்கென்று நிறைய சவால்கள் இருக்கிறது. பொழுது போக்க வீடியோ கேம்ஸ், இன்டர்நெட், அலைபேசி என எத்தனையோ தடங்கல்கள்.

இவை அனைத்தையும் கடந்த பிறகுதான் அவன் முன்னுக்கு வர முயல வேண்டும்.நீங்கள் யாராக இருக்கிறீர்கள் நமது பொருளாதார நிலையை, செலவு செய்யும் பாங்கை பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டும். வீட்டு செலவுக்கு பட்ஜெட் போடும் போதும், குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லும் போதும் பிள்ளைகளை அருகில் வைத்துக் கொள்ளவேண்டும். தந்தை எத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் என அவர்கள் அறிய வேண்டும். இவையெல்லாம் உணர்த்தப்படும்

குழந்தைகள் தன் பொறுப்புணர்ந்து படிப்பார்கள். குடும்பத்தின் மீது ஒரு ஒட்டுதல் வரும். அதைவிடுத்து குடும்பக் கஷ்டம் குழந்தைக்கு தெரியாமல் வளர்த்து அவன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் நீங்கள் வாங்கித் தரும் பொருள் மேல் உள்ள ஒட்டுதல் சில நாளிலோ சில வருடங்களிலோ முடிவடைவது போல் உங்கள் மேல் உள்ள அன்பும் அவசியமற்றதாய் போய்விடும்,

அவன் கண்ணுக்கு தான் விரும்பும் எதையும் வாங்கித்தரும் ஒரு ஏ.டி.எம்., மெஷினாகத்தான் நீங்கள் தெரிவீர்கள்.நம்முடன் யாராவது சண்டையிட்டாலோ திட்டினாலோ அவர்களிடம் நாம் பேசமாட்டோம். நம் கோபத்தை ஏதாவது ஒரு வகையில் காண்பிப்போம். ஆனால் கோபத்தில் விரட்டினாலும், அடித்தாலும் பத்துநிமிடம் கழித்து அம்மா என்று அழைக்கும் குணம் நம் பிள்ளைகளிடம் உள்ளது. தவறை மறக்க கற்று உறவை வளர்க்கும் உன்னதமே பிள்ளைகள் தான். எனவே நாம் நல்ல வழியில் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டும்.