Tuesday, July 14, 2015

அழகு ஆரோக்கியம் ஆயுர்வேதம்! - காய், கனி, மூலிகை தெரப்பிகள்

மாறிவரும் வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் மாசு, வேலைப் பளு போன்றவற்றால் உடல் சோர்வு, மனச் சோர்வு என ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. விளைவு... கண்களைச் சுற்றி கருவளையம், முடி உதிர்தல், முகம் பொலிவு இழத்தல் போன்ற அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் எழுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

அழகாக, பொலிவாக இருக்க வேண்டும். மாசு மருவற்ற சருமம் வேண்டும் என ஏதேதோ கிரீம்கள் பயன்படுத்தியும் பலன் மட்டும் கிடைப்பது இல்லை. நம்முடைய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில், சரும ஆரோக்கியத்துக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவற்றைச் செய்வதன் மூலம் பிரச்னைகளைச் சரிசெய்து, நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். புத்துணர்வும், ஓய்வும், மன அமைதியும் பெற முடியும்.

`சஞ்சீவனம்' ஆயுர்வேத தெரப்பி மையத்தின் அழகுக்கலை மற்றும் உடல் ஆரோக்கிய நிபுணர் அஞ்சலி ரவி சொல்லும் தெரப்பிகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் யாழினி தரும் டிப்ஸ்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியம் காக்கும் அசத்தல் வழிமுறைகள்!


சிகிச்சைக்கு முன்பு கவனிக்க வேண்டியவை

நாம் அனைவருமே உடல் நலம், மன நலம் மற்றும் தோற்றத்தைச் சீராகப் பராமரித்துக்கொள்வது முக்கியம். ஆண், பெண் இருவருமே தங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம், உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். சிகிச்சை பெறுவதற்கு முன்பு, சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பிரச்னைகளுக்கு தெரப்பி எடுத்தால் மட்டும் போதாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம்தான் பிரச்னையில் இருந்து விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய முடியும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் பிரச்னைகளைப் பொறுத்து, சிகிச்சைகள் மாறுபடும்.

அவரவர்களுக்கான சிகிச்சை காலமும் மூலிகைகளும் வேறுபடும்.

மசாஜ் மற்றும் தெரப்பிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளாக இருக்க வேண்டும்.

மூலிகை, எண்ணெய், கிரீம் போன்றவற்றை முறையான பக்குவத்துடன் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.


கருவளையம் போக்கும் தெரப்பி

ண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல், ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கேரட் ஜூஸ் என, அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யப்படும்.

இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையைவைத்து, அரை மணி நேரம் அதன் சாறு சருமத்தில் இறங்கும் வகையில் விடப்படும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம் செய்யப்படும். சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம் தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம் முற்றிலுமாக மறையும்.


பருக்களைப் போக்கும் ஃபேஷியல்

ண்ணெய் பசை சருமத்தினருக்குப் பருக்கள் வருவது இயல்பு. அவை, அதிக அளவில் ஏற்படும்போது, முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். பருக்களில் சீழ் கோத்துக்கொள்வது, ரத்தம் வருவது, ஊசி குத்துவது போல் வலிப்பது போன்ற பிரச்னைகள் சிலருக்கு இருக்கும். அவர்களுக்கு மசாஜ் மட்டும் செய்யப்படுவது இல்லை. ஏனெனில், பருக்கள் உடைந்து, முகம் முழுவதும் பரவத் தொடங்கிவிடும்.

பருக்கள் ஏற்படுவதற்கு, சருமத்தின் தன்மை, உணவுப் பழக்கம், ஹார்மோன் என, நிறையக் காரணங்கள் உள்ளன. எதனால் பருக்கள் வருகின்றன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

ஓரிரண்டு பருக்கள் இருந்தால், அவர்களுக்கு ஃபேஷியல் செய்யலாம். இதன் மூலம் பருக்கள் மேலும் வராமல் தடுக்க முடியும். இவர்களுக்கு, முதலில் க்ளென்சிங் செய்யப்படும். ஏலாதி எண்ணெய் அல்லது சஞ்சீவனம் ஸ்பெஷல் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யப்படும். அழுக்கு, எண்ணெய் பசை போன்றவை, ஸ்கரப் செய்வதன் மூலமாக நீங்கிவிடும்.

பிறகு, குங்குமப்பூ, துளசி, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவையால் தயாரிக்கப்பட்ட கிரீம் கொண்டு முகத்தில்  ஃபேஸ்பேக் போடப்படும்.  இந்த சிகிச்சைக்கான காலம் ஒரு மணி நேரம். (பேஸ் பேக் போட 15 நிமிடங்கள் உட்பட) இதை மாதத்துக்கு இருமுறை என மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தால், முகப்பருப் பிரச்னை முற்றிலுமாக நீங்கும். எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, முழுமையான சிகிச்சையில் ஈடுபட்டால், வெகு சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.


பளிச் சரும தெரப்பி

ரு, கருவளையம், மங்கு, உலர் சருமம் போன்ற எந்தப் பிரச்னையாக  இருந்தாலும், இந்த ஸ்பெஷல் தெரப்பியைச் செய்துகொள்ளலாம்.

முதலில், க்ளென்ஸிங் செய்யப்படும். பழச்சாறுகள் அல்லது அவற்றால் தயாரிக்கப்பட்ட கிரீம்கள், `நால்பாமரம்' எனப்படும் ஆல், அரசு, அத்தி, இத்தி எனும் நான்கு  மரங்களின் பட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய், தேன் மற்றும் எலுமிச்சை கொண்டு சருமத்துக்கு இதமான மசாஜ் அளிக்கப்படும்.

பாதாம், முந்திரி போன்றவற்றை விழுதாக்கி, அவற்றை முகம் முழுவதும் பூசி ஸ்கரப் செய்யப்படும். பிறகு, மூலிகைகளால் ஆன பேக் போடப்படும். ஒரு மணி நேரம் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை, மாதம் ஒருமுறை செய்துகொண்டால் சருமம் பளபளப்பாகும். முகம் பிரகாசம் அடையும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமம் புத்துணர்ச்சி பெற்று, புதுப் பொலிவு பெறும்.


பொலிவு தரும் மூலிகை சிகிச்சை

சூரியக் கதிர்வீச்சு, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. தவிர, நாம் பயன்படுத்தும் பல்வேறு சரும கிரீம்கள் காரணமாக, சருமத்தின் சுவாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, முகத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சருமத்துக்குப் பொலிவு தரும் இந்த சிகிச்சையை அனைவரும் செய்துகொள்ளலாம்.

முதலில், முகம் க்ளென்ஸிங் செய்யப்படும். பிறகு, மூலிகை எண்ணெய்களைக்கொண்டு மசாஜ் செய்து, ஸ்க்ரப் செய்யப்படும். ஆயூர்வேதப் பொடிகள், நால்பாமரம், புதினா, கொத்தமல்லி, ஆப்பிள், கேரட் போன்றவற்றின் மூலம் ஃபேஸ்பேக் போடப்படும். ஒரு மணி நேரம் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை, மாதம் இருமுறை செய்துகொள்ள, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

உலர் சருமம், முகச் சுருக்கம் உள்ளிட்ட அனைத்து விதமான சருமத்தினருக்கும் இந்த மூலிகை சிகிச்சையால் தீர்வு உண்டு.


தலைமுடியை உறுதியாக்கும் புரோட்டீன் பேக்

னைத்து வயதினருக்கும் முடி உதிர்தல் பிரச்னை இருக்கிறது. உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றங்கள் போன்றவையால் முதலில் பாதிக்கப்படுவது கூந்தல்தான். வழுக்கை விழுந்து, அடர்த்தியே இல்லாத தோற்றத்தைத் தந்து, மனவாட்டத்தை ஏற்படுத்தும். இதற்குச் சிறந்த தீர்வாக புரோட்டீன் பேக் உள்ளது.

இந்த சிகிச்சையில், மூலிகை எண்ணெய்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்யப்படும். பிறகு, ஸ்டீம் செய்யும்போது, மசாஜ் மூலம் தலையில் இருக்கும் எண்ணெய்கள் துவாரங்களின் வழியே உள்ளே சென்று, கூந்தலை வலுவாக்கும். பிறகு, பிரிங்கராஜா, வெந்தயம், ஸ்பைரூலினா (சுருள்பாசி), செம்பருத்தி, தயிர், முட்டை, எலுமிச்சை உள்ளிட்ட 16 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'புரொட்டீன் பேக்' தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி பூசப்படும். ஒரு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசிக்கொள்ளலாம். தீவிரமான முடி கொட்டுதல் பிரச்னை உள்ளவர்கள், வாரம் ஒருமுறை செய்துகொள்ளலாம். மற்றவர்கள், மாதம் ஒருமுறை செய்துகொண்டாலே கூந்தல் உதிர்வது நின்று, அழகும் ஆரோக்கியமும் கூடும்.


கருகரு கூந்தலுக்கு ஹென்னா தெரப்பி

ப்போது, இளநரை சகஜமாகிவிட்டது. ரசாயனங்களால் ஆன ஹேர் டை பயன்படுத்தும்போது, அது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. மருதாணி மட்டும் பூசினாலும், முடியின் நிறம் பெரிதாக மாறுவது இல்லை. வெள்ளை முடியை மறைக்க, மீண்டும் வராமல் தடுக்க என்ன செய்வது என்று, புலம்புபவர்களுக்கான தெரப்பி இது.

கூந்தலில் உள்ள நரைகளை மறைத்து, கருகருவெனக் கூந்தல் அழகுபெறும். ஆயுர்வேத மருந்துகள், நெல்லி, முட்டை, மருதாணி போன்றவைகொண்டு, கூந்தல் முழுவதும் 'ஹென்னா பேக்' போடப்படும். இதனால், உடல் வெப்பம் குறையும். முடி உதிர்வது தடுக்கப்படும்.

முடிக்கு எந்தவித சேதங்களும் இல்லாத இயற்கையான வண்ணத்தை அளிப்பதால், நரை முடிகள் முற்றிலுமாக மறைந்து, அடர் பிரவுன் நிறமாக மாறிவிடும். இயல்பான நிறத்தில் உள்ள முடி, இன்னும் கருமையாகத் தெரியும். ஒரு மணி நேரம் இந்த பேக்கை போட்டுக்கொண்டு, பிறகு அலசிவிடலாம். மாதம் ஒருமுறை ஹென்னா பேக் போட்டால், கருகரு கூந்தலுடன் இருக்கலாம்.


சருமப் பொலிவு தரும் ஸ்பா

டல் முழுதும் செய்யக்கூடிய சிகிச்சை இது. உடலில் வலிகள், பிடிப்புகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கும் அழகான சருமத்தைப் பெறுவதற்கும் இந்த ஸ்பா செய்யப்படுகிறது. முதலில், பால் மற்றும் குங்குமப்பூவைக்கொண்டு உடல் முழுதும் க்ளென்சிங் செய்யப்படும்.

அடுத்து தேன், எலுமிச்சைச் சாற்றினால் மசாஜ் செய்யப்படும். பிறகு, பாதாம், முந்திரி விழுதைக்கொண்டு, உடல் முழுதும் ஸ்கரப் செய்யப்படும். நால்பாமரம் எண்ணெயால் மீண்டும் ஒரு முறை மசாஜ் செய்யப்பபடும். இதனால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். சரும செல்கள் புத்துயிர் பெறும். தூக்கமின்மை, வலி, மனஉளைச்சல் போன்ற பிரச்னைகளிலிருந்துத் தீர்வு பெறலாம். இந்த சிகிச்சையை, திருமணம் செய்ய உள்ள தம்பதிகள் மணமக்கள் பேக்காக (Bride Groom Pack) செய்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


கால் வலியைப் போக்கும் ரிலாக்சேஷன் தெரப்பி

நின்றுகொண்டே வேலை செய்பவர்கள், அதிகமான உடலுழைப்பு செய்பவர்கள், அசைவுகளே இல்லாமல் வேலை செய்பவர்கள் ஆகியோருக்குக் கால் வலி, பாதத்தில் வலி, எரிச்சல், கணுக்கால் பிடிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும். பாதத்தை அழுத்தி, சில மென்மையான புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்தாலே பாதிப் பிரச்னை குறைந்துவிடும். மூலிகை எண்ணெய்களும், தைலங்களும் பூசி ரிலாக்ஸ் தெரப்பி செய்வதன் மூலம், வலியை விரட்டலாம். 

இந்த சிகிச்சையின்போது, முதலில் கால்கள் நன்றாகக் கழுவி, சுத்தம் செய்யப்படும். பிறகு, கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை ஊற்றி, மசாஜ் செய்யப்படும். குறைந்தது அரை மணி நேரம் இந்த மசாஜ் செய்யப்படும். மசாஜ் செய்யும்போதே வலிகள் அனைத்தும் பறந்துவிடும். கால்கள் வலுப்பெறும்.

அனைவரும், மாதம் ஒருமுறை ரிலாக்சேஷன் தெரப்பியை செய்துகொள்ளலாம்.


முதுகு மற்றும் கழுத்துக்கான தெரப்பி

ணினி முன் வேலை செய்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் போன்றோருக்கு, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் வலி அதிகமாக இருக்கும். நீண்ட நேரம் பயணிப்பவர்களுக்கும் உடல் அசதி வெகுவாக இருக்கும். இவர்களுக்கான தெரப்பி இது.

கழுத்து மற்றும் பின்பக்க முதுகுப் பகுதி சுத்தம் செய்யப்படும். பிரத்யேகமாகத் தயாரித்த சஞ்சீவனம் ஸ்பெஷல் எண்ணெயைக் கலந்து மசாஜ் செய்யப்படும். தோள்பட்டை வலிகள் நீங்கும் அளவுக்கு மென்மையாக ரிலாக்சேஷன் மசாஜ்கள் தரப்படும். மாதம் ஒருமுறை இந்த தெரப்பி செய்துகொண்டாலே போதும். உடலும் மனமும் லேசாகிவிடும். இந்த தெரப்பி செய்துகொள்வதற்கான நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.


மன அழுத்தத்தைக் குறைக்கும் தெரப்பி

ன்று குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை, மனஅழுத்தப் பிரச்னை இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனஅழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கான சிறந்த தெரப்பி இது.

அரோமா எண்ணெயின் வாசம் நம் மூக்கில் நுழைந்து, மூளையின் அதீதச் செயல்பாட்டைக் குறைக்கும். எண்ண ஓட்டங்களைக் குறைத்து, மன அமைதி அடையச் செய்யும். மென்மையான அழுத்தங்களும் வாசமும் தூக்கத்தை வரவழைத்து, உடலை ஓய்வுபெறச் செய்யும். இதனுடன், முகத்தில் அரோமா ஃபேஷியலும் செய்யப்பட்டு, முகமும் பிரகாசமாகும். சிகிச்சையின் நேரம் 120 நிமிடங்கள். மனம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தையும் விரட்டி அடிக்கும் இந்த தெரப்பியை மாதம் ஒருமுறை செய்யலாம்.


உதட்டு சிகிச்சை

தட்டின் நிறமும் உதட்டின் மேல் இருக்கும் வெடிப்புகளுமே நம் ஆரோக்கியத்தைப் பறைசாற்றும். சிகரெட் பழக்கம், அதிகமான எண்ணெய் பொருட்களை உண்பது போன்றவற்றால்,உதடு கருமையாக இருக்கும். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்ள வேண்டிய தேவையே இல்லை. க்ளென்சிங் செய்வதன் மூலமாக, உதட்டைச் சுத்தம் செய்யலாம். 

பழச்சாறுகளைக்கொண்டு உதட்டுக்கு மென்மையான அழுத்தம் தரப்படும். ஸ்கரப் செய்த பிறகு, உதட்டுக்கு மூலிகை பேக் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் அலசப்படும். இதனால், கருமை நிறம் குறைந்துவிடும். வாரம் ஒருமுறை இந்த சிகிச்சையை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் அழகான உதட்டைப் பெறலாம். சிகிச்சையின் நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.


கால்களுக்கான பேக்

முகம், கை, கழுத்து ஆகியவற்றுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிப்போம்.  கால்களைக் கவனிக்கவே மாட்டோம். கறுப்பாக, அழுக்குப் படிந்து, நகங்கள் உடைந்து, ஆரோக்கியமில்லாமல் காட்சியளிக்கும். இவற்றைச் சரிசெய்ய கால்களுக்குப் போடும் பேக் மூலம் தீர்வு கிடைக்கும்.

முதலில், கால்கள் நன்றாக சுத்தம் செய்யப்படும்.  மூலிகை எண்ணெயை ஊற்றி, கால்களுக்கு அழுத்த சிகிச்சை தரப்படும். பிறகு, ஸ்கரப் செய்த பின், கால்கள் பொலிவுடன்  இருக்கும்.  பாதம் முழுவதும் ஒவ்வொரு புள்ளியாக அழுத்திவிட்ட பிறகு, கால்களுக்குப் போடப்படும் பிரத்யேக மூலிகைகள் கலந்த எண்ணெயைப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவப்படும்.

மாதம் ஒருமுறை செய்து கொண்டாலே அதிகப் பலன்களைப் பெறலாம்.  சிகிச்சைக்கான நேரமும் 30 நிமிடங்கள்தான்.

பெடிக்கியூர்: நீர் நிறைந்த டப்பில், கால்களை மூழ்கவைத்து செய்யும் சிகிச்சை. க்ளென்சிங், ஸ்கரப், மசாஜ், பேக் என தொடர்ச்சியாகச் செய்யப்படும்.  அரை மணி நேர சிகிச்சையால் கால்களின் பொலிவுகூடும். இறந்த செல்கள் அனைத்தும் உதிர்ந்து, சுத்தமான கால்களாக மாறும்.


கைகளுக்கான சிகிச்சை

ம்ப்யூட்டர் கீ போர்டில் வேலை செய்வதால், விரல்கள் மற்றும் விரல் நுனிகள், அதிகமாக வலிக்கும். நாற்காலியில் சரியான நிலையில் உட்காராமல், கைகளைத் தொங்கப்போட்டு உட்கார்ந்தாலும், கைகள் வலிக்கத்தான் செய்யும். கைகளைச் சரியான இடத்தில்வைத்து, வேலை செய்தால் மட்டுமே ஒரளவுக்கு வலிகள் குறையலாம்.

கைகள் வலி நீங்கவும் கைகளை அழகாக, சுத்தமாகப் பராமரிப்பதற்கும் செய்யப்படும் சிகிச்சை இது. மூலிகை எண்ணெய்களை ஊற்றி, கைகளை மென்மையாகப் பிடித்து, அழுத்தம் தரும் சிகிச்சை செய்யப்படும். பிறகு, ஸ்கரப் மூலமாக சீரான ரத்த ஓட்டம் செல்வதற்கான மசாஜ் செய்யப்படும். அக்குபிரஷர் புள்ளிகளை அழுத்தி, ஓய்வு பெறுவதற்கான சிகிச்சை தரப்படும். 

மாதம் ஒருமுறை கைகளுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால், வலிகள் பறந்துவிடும். சிகிச்சைக்கான நேரம் 30 நிமிடங்கள்.

மெனிக்கியூர்: நீர் நிறைந்த டப்பில், கைகளை மூழ்கவைத்து செய்யப்படும் சிகிச்சை. க்ளென்சிங், ஸ்கரப், மசாஜ், பேக் என தொடர்ச்சியாகச் செய்யப்படும்.  அரை மணி நேர சிகிச்சையால் கைகள் அழகாகும்.


மூலிகைக்கிழி ஒத்தட சிகிச்சை

வெப்ப காலத்தில் அனைவரும் செய்துகொள்ள வேண்டிய சிகிச்சை இது. இழந்த முகப் பொலிவை மீட்கும் சக்தி மூலிகைக்கிழி ஒத்தடத்துக்கு உண்டு. சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை அழகாக்கும்.

முதலில், க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, மசாஜ் செய்துவிட்டு, பால், குங்குமப்பூவைக்கொண்டு, முகத்தில் மாஸ்க் போடப்படும். தேனும் எலுமிச்சையும் கலந்த கலவையை முகத்தில் பூசி, முகம் கழுவப்படும். பிறகு, மீண்டும் பழச்சாறுகள் பூசப்படும்.

மூலிகை எண்ணெய்களில் கிழியை முக்கி எடுத்து, முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கப்படும். இதனால், சருமம் நன்கு மேம்படுத்தப்படும். உடல் சூடு குறையும். ஆயுர்வேத மூலிகைப் பொடிகளைக் கலந்து, முகத்தில் பேக் போடப்பட்டு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவப்படும்.

சிகிச்சைக்கான நேரம் 90 நிமிடங்கள். மாதம் ஒருமுறை செய்துகொள்ளலாம். வெயில் காலத்தில் மாதம் இருமுறை செய்துகொண்டால், பிரகாசமான முகத்தைப் பெறலாம். இந்த சிகிச்சையால், சருமத்தின் உள்வரை சத்துக்கள் ஊடுருவிச் சென்று, முழுப் பலனையும் அளிக்கும்.


சருமம் சுவாசிக்கும் சிகிச்சை

ருமம் சுவாசிக்க, துவாரங்கள் அடைப்பின்றி இருப்பது மிக முக்கியம். சருமத் துவாரங்களைத் திறந்து, மீண்டும் மூடிவைக்கும் சிகிச்சைகளை முறையாகச் செய்தாலே, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

சருமத்தின் தளர்வுத்தன்மை நீங்கி, டைட்டனிங் தோற்றத்தைக் கொடுத்து, இளமையாகக் காண்பிக்கவும் இந்த சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். தக்காளிச்சாறுகொண்டு சுத்தம் செய்த பிறகு, தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து, ஃபேஷியல் செய்யப்படும். பிறகு, ஐஸ்கட்டிகளால், முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கப்படும். ஆயுர்வேத மூலிகைகளைக்கொண்டு பேக் போடப்படும். 
 
மாதம் ஒருமுறை செய்யலாம். ஒரு மணி நேரம் இந்த சிகிச்சைக்குத் தேவைப்படும். மன அழுத்தம், அலைச்சல், கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட முகம் இந்த சிகிச்சையால் சரியாகிவிடும்.


டிப்ஸ்...டிப்ஸ்...

எண்ணெய் உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் போன்றவை உடல்நலத்தையும் அழகையும் கெடுக்கும்.

கேரட், மீன், தக்காளி, திராட்சை, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால், சீரான சருமம் கிடைக்கும்.

சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கரைத்து, கை, கால்களில் ஸ்கரப் செய்தால், கை, கால்கள் சுத்தமாகும்.

ரசாயனங்கள் கலந்த கிரீம்கள், எண்ணெய், ஷாம்பு போன்றவற்றைத் தவிர்த்து, எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் முகம் கழுவுவது, மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, காய்கறிகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் உடல் அழகு பெறும்.

அழகு நிலையங்களில் செய்யப்படும் ரசாயன ஃபேஷியல்களைத் தவிர்க்கலாம். தக்காளி, எலுமிச்சைச் சாறு, தயிர், தேன், கேரட் போன்றவற்றால் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.

சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்தில் (சன் டேன்), புளித்த தயிரைத் தடவினால், கருமை நீங்கிவிடும்.

கை, கால்களைச் சுத்தப்படுத்த, இளஞ்சூடான நீரில், எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பைப் போட்டு, அதில் கை, கால்களை மூழ்கவைத்தால் கை, கால்கள் அழகாக இருக்கும்.

இளஞ்சூடான நீரில் முகம் கழுவினால், சருமத் துவாரங்கள் திறந்துகொள்ளும். அதற்குப் பின், சாதாரண நீரில் முகம் கழுவ, சருமத் துவாரங்கள் மீண்டும் மூடிக்கொள்ளும்.

உலர் சருமம், தோல் உரிதல் போன்ற எந்த சருமப் பிரச்னையாக இருந்தாலும், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும்  இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை நீர் அருந்துவது நல்லது.

வைட்டமின் ஏ, சி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், சருமம் பிரகாசிக்கும். பப்பாளி, எலுமிச்சை, கிவி, கேரட், கீரைகள், முட்டை, ஆரஞ்சு, சிவப்பு கொய்யா, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர், அன்னாசி, மாம்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

எலுமிச்சைச் சாற்றை வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

சிலருக்கு உடலில் பித்தம் அதிகமாகி இருக்கலாம். அடிக்கடி, தலைவலி போன்ற பிரச்னைகளும் இருக்கும். இவர்கள், உணவில் புளியை அதிகம் சேர்க்கக் கூடாது. ரத்தத்தைச் சுத்தகரிக்கும், `மஞ்சட்டி' என்ற மாத்திரையை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட்டுவர, பித்தம் குறைந்து ரத்தம் சீராகும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால், அதன் அறிகுறியாக நமது சருமம் ஆரோக்கியமாகி, அழகாக இருக்கும்.

தினமும் நமது சமையலில், ஏலக்காயில் உள்ள மூன்று விதைகளையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவைச் சாப்பிட்டால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சருமம் சீராகும்.

மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாதாரண நீரால் முகத்தைக் கழுவிக்கொள்வது நல்லது. இதனால், தூசு, அழுக்கு, புகை, சூரியக் கதிர்களின் தாக்கம் போன்ற பாதிப்புகள் குறையும்.

அக்ரூட், உலர் திராட்சை, பேரீச்சை ஆகியவை தலா இரண்டு, பாதாம் நான்கு எடுத்து, இரவில் சிறிது தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுத்த நாள், இவற்றை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலில் ரத்த உற்பத்தி சீராக இருக்கும். சருமம் பளபளப்பாகும். முடி உதிர்தல் பிரச்னை சரியாகும். உடல் ஆரோக்கியமாகும்.

ஏலாதி தேங்காய் எண்ணெய், நால்பாமராதி எண்ணெய் போன்ற எந்த எண்ணெய் நம் சருமத்துக்குப் பொருந்துகிறதோ, அதை மருத்துவரின் ஆலோசனையுடன் முகம், சருமம் முழுவதும் பூசிக்கொண்டு பிறகு கழுவலாம். குளிக்கும் முன், எண்ணெய் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், சருமம் புத்துயிர் பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, புரத உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். முட்டை, முளைகட்டிய பயறு வகைகள், பாதாம், வால்நட், பருப்பு, பால், மோர் ஆகியவற்றைச் சாப்பிட்டால், கூந்தல் உதிர்தல் பிரச்னை நிற்கும். மாலத்யாதி, செம்பருத்தியாதி போன்ற எண்ணெய்களை மருத்துவரின் ஆலோசனையுடன் தடவிவந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.

சீரற்ற ஹார்மோன் செயல்பாடுகள், மெனோபாஸ், மனஅழுத்தம், பொடுகு, ஊட்டச்சத்துக் குறைபாடு, மாசற்ற சூழல், ஏ.சிக்குக் கீழ் உட்காருதல் போன்றவையால் முடி உதிரும். இதில், எந்தக் காரணத்தால் பிரச்னை எனக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகள், உணவு, எண்ணெய் போன்றவற்றைப் பின்பற்றிவந்தால், பிரச்னை சரியாகும்.

கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கீழாநெல்லி போன்றவற்றைச் சம அளவில் எடுத்து, கூந்தலில் ஹேர் பேக்போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அலசினால் இளநரை கறுப்பாகும். கூந்தலின் வளர்ச்சி சீராக இருக்கும். கருகருவென அழகாகும்.

காலையில் ஃப்ரெஷ்ஷான காற்றில் 15 நிமிடங்கள் பிராணயாமா செய்வதால், ஆக்சிஜன் சீராக உடலில் பாய்ந்து, ஒவ்வொரு செல்லுக்கும் சென்று, செல்களைத் தூண்டிவிடும். இறந்த செல்களையும் நீக்கிவிடும். தினமும் தவறாமல் நாடிசுத்தி, பிராணயாமா செய்பவர்களின் முகம் பொலிவுடன் காணப்படும்.