Sunday, September 6, 2015

முன்னேற வேண்டும் என கனவு காணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம்

வெற்றி தரும் கனவுகள்!

புத்தகத்தின் பெயர்: யுவர் ட்ரீம்ஸ் ஆர் டூ ஸ்மால் (Your Dreams Are Too Small)
ஆசிரியர்: ஜோ டை (Joe Tye)
பதிப்பாளர்: Values Coach Inc.
 
ஜோ டை எழுதிய 'யுவர் ட்ரீம்ஸ் ஆர் டூ ஸ்மால்' எனும் புத்தகம். உங்களுடைய கேரியர் வெற்றி மற்றும் பணம் சம்பாதிக்கும் திறன் குறித்த எல்லைகளை அதீத தன்னம்பிக்கையுடன் உயரிய அளவில் நிர்ணயிக்கச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
 

இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தின் தலைப்பே உலகத்தை அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்க முயலுங்கள். அதை விட்டுவிட்டு அது எப்படி இருந்தது என்ற எண்ணத்திலோ, அது எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் நினைத்தீர்களோ அல்லது அது எப்படி இருக்குமோ என என்று நீங்கள் பயந்தீர்களோ, அந்த ரூபத்தில் பார்க்க முயலாதீர்கள் என்பதுதான். சார்லி என்னும் நபரின் கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறது முதல் அத்தியாயம்.
 
கூடப் படித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் எம்பிஏ படிக்கப் போக, சார்லி மட்டும் ஒரு நிறுவனத்தில் அனலிஸ்ட் வேலைக்குப் போனார். வேலைக்குச் சேரும்போது, நீங்கள் உங்கள் திறமையைக் காட்டுங்கள். நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்கிறோம் என்றது நிர்வாகம். உங்களுக்குக் கூடுதல் திறமை யிருந்தால் நாற்பது வயதுக்குள் எங்கள் நிறுவனத்தின் வழக்கப்படி பார்ட்னராகி விடலாம்' என்று ஆசையும் காட்டியது நிர்வாகம்.
 
கை நிறையச் சம்பளம், திறமைக்கேற்ற கூடுதல் இன்சென்ட்டிவ் என வாழ்க்கை நன்றாகவே போனது. ஆனால், பார்ட்னராவது என்ற நிலை மட்டும் வரவேயில்லை. பதினான்கு வருடம் கழித்து ஒரு அப்ரைசலில் அமர்ந்திருக்கும்போது நிறுவனத்தின் பார்ட்னர் ஒருவர், `தம்பி, நீ நல்லா மாங்கு மாங்கு என்று கம்ப்யூட்டருக்குப் பின்னால் உட்கார்ந்து உழைக்கிறாய். ஆனால், புது பிசினஸ் எதுவும் எப்போதுமே கொண்டுவரவில்லை. ஏன் இருக்கிற பிசினஸை தக்கவைக்கக் கூட நீ முயலவில்லை. உன்னைத் தேடி வேலை வந்தால் மாங்கு மாங்கென்று உழைத்துக் கொட்டுகிறாய். ஆனால், புதிய வேலையைக் கொண்டுவர இம்மியளவும் முயலவில்லை. அதனால்தான் பார்ட்னராக முடியவில்லை. கொஞ்சம் பிசினஸ் கொண்டுவரவும் முயற்சி பண்ணுங்க சார்' என்றார்.

வேலைக்குச் சேர்ந்து 14 வருடத்தில் ஒரு ஆபீஸ் பையனிடம்கூட அதிர்ந்து பேசாத சார்லி, `எப்ப சார், நான் புது பிசினஸ் கொண்டுவர முயற்சிப்பது? நைட் ஷிஃப்ட் வாட்ச்மேன் காலையில் டூட்டி முடிந்துபோவதற்கு முன்னால் வேலைக்கு வருகிறேன். ஊரில் இருக்கும் கடைகள் எல்லாம் மூடியபின்னால் 11 மணியளவில் வேலையை விட்டு வீட்டுக்குப் போகிறேன். இதில் பிசினஸ் டெவலப்மென்ட்டை எப்போது செய்வது? நைட் பன்னிரண்டு மணி முதல் காலை ஐந்து மணிவரையா?' எனச் சீறுகின்றார்.மாடு மாதிரி உழைத்துக் கொண்டு இருக்கிறேன் சார். என் பிள்ளையைக்கூட வெளிச்சத்தில் பார்த்ததில்லை எனக் கோபப்படுகிறான்.
 
ஆனால் பார்ட்னரோ, ``மிஸ்டர் சார்லி, இப்படி உழைப்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்களே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்துவிட்டு, இப்போது புலம்புவதில் அர்த்தம் இல்லை. உங்களுக்குக் கீழே ஆள் வேண்டுமென்று கேட்டால் தந்திருப்போம். நீங்கள் கேட்கவில்லை. அதனால்தான் நாங்கள் தரவில்லை. எல்லா வற்றுக்கும் நீங்கள்தான் காரணம்'' என்றார்.
சார்லி அவமானத்துடன் தன் சீட்டுக்குப் போகிறான். கொஞ்சநாள் கழித்து பார்ட்னர் அவனை அழைத்து, `சார்லி மிகவும் வருத்தத்துடன் நான் சொல்வது என்னவென்றால் நம் நிறுவனத்தில் ஆட்குறைப்புச் செய்ய முடிவு செய்திருக்கிறோம். முதலில் புதிய பிசினஸ் எதுவும் கொண்டுவராதவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். நீங்கள் என் ரூமை விட்டு வெளியேறியதும் என்னுடைய பிஏ உங்கள் செட்டில்மென்ட் செக்கை தருவார்' என்கிறார்.
 
நிறுவனத்தின் பாலிசிபடி, கணிசமான தொகை கிடைக்கிறது. அதிர்ந்த சார்லி செட்டில்மென்ட் செக்கை வாங்கிக்கொண்டு தன் நண்பியைப் பார்க்கப் போகிறார். நண்பிக்கும் அன்றுதான் வேலை போயுள்ளது. அவளுடைய நிறுவனமோ பெரிய தொகையைத் தருவதில்லை. ஆனாலும் அவள் ஜாலியாய்தான் இருக்கிறாள். என்ன இப்படி ஜாலியாய் இருக்கிறாயே எனக் கேட்க, `அடப் போப்பா, நான் இனி வேலைக்கே போவதில்லை. ஜாப் (JOB) என்பதின் அர்த்தம் என்ன தெரியுமா. J - Jilt (ஆசை காட்டி மோசம் செய்து), O- Obsolete (புறக்கணிக்கப்பட்டு), B - Broke (பணியிலிருந்து விலக்கப்படுவது) என்பதன் குறுகிய வடிவம் தானே ஜாப்' என்கிறாள் கேஷுவலாய்.

அடுத்து என்ன செய்யப் போவதாக உத்தேசம்? என்று கேட்கிறாள் நண்பி. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் சந்தோஷப்படுவேன்' என்கிறான். நண்பியோ, 'என்னது, மீண்டும் வேலைக்குப் போகிறாயா? மறுபடியும் சொல்கிறேன், எவ்வளவு பெரிய பதவியானாலும் சரி, வேலை என்பது பாதுகாப்பு இல்லை. நீ ஏன் உன் வேலையை இழந்தாய் தெரியுமா? அதைப் பணம் தரும் விஷயமாய் மட்டுமே நீ பார்த்ததால்தான்' என்று போட்டு உடைக்கிறாள்.
 
`வேலையோ, பணமோ பாதுகாப்பு அல்ல. ஒரு விஷயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடே உனக்கு அளவற்ற பாதுகாப்பைத் தரும். வேலையை பணமாய்ப் பார்த்தால் / பணத்துக்காகப் பார்த்தால் அது போய்விடுமோ என்ற பயம் வரும். பயம்தான் மனிதனின் எல்லா எமோஷன் களிலும் மிகமிக மோசமான ஒன்று. உங்கள் பயம் ஒரு சிறைச்சாலையைவிடக் கொடூரமாய் உங்களைக் கட்டிப் போட்டுவிடும்' என்கிறார் ஆசிரியர்.
 
இரண்டாவது அத்தியாயத் தில், `நீங்கள் யார்?, என்னவாக ஆக வேண்டும் என்று நினைக் கிறீர்கள்? எப்படி நீங்கள் நினைக்கும் அந்த நிலையை அடையப் போகிறீர்கள் என்ற வழிவகைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதே தலை சிறந்த வழியாகும்' என்கிறார் ஆசிரியர்.

`மன உறுதிக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் நாளடைவில் மட்டுமே தெரியும் என்று சொல்லும் ஆசிரியர், மன உறுதி என்பதெல்லாம் வெறும் கனவு. உன்னாலெல்லாம் முடியாது என்று ஊரே சொல்லும் போது தளராது உழைப்பது' என்கிறார்.
`வெறும் ஆசையினால் தோன்றும் ஆர்வம் என்பது ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பை மட்டுமே வளர்ப்பதாய் இருக்கும். ஆனால், பாசிட்டிவ் எண்ணங்களோ நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து, அதை நோக்கி நகருவதற்கான முயற்சிகளைச் செய்வதாகும்' என நச்செனச் சொல்கிறார்.
 
`பெரிய அளவிலான கனவை காணுங்கள். எதிர்காலம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அப்படி இருப்பதற்குத் தேவை யான அற்புதங்கள் தானாகவே நடக்கும்' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் ஆசிரியர்.
 
`உங்களால் நிர்ணயிக்கப்படும் சரியானதொரு பெரிய கனவு என்பது ஒரு காந்தம்; ஒரு திசையறிய உதவும் காம்பஸ்; ஒரு பூதக்கண்ணாடி போன்று உங்களுக்கு நிச்சயம் உதவும். பெரிய கனவை தொடர்ந்து கண்டுகொண்டிருந்தால் மட்டுமே முன்னேற்றம் என்பது தொடரும். கனவு காண்பதை நிறுத்திவிட்டால் மீண்டும் நீங்கள் பின்னோக்கி ஓட ஆரம்பித்து விடுவீர்கள்' என எச்சரிக்கிறார் ஆசிரியர்.
 
கவலையை ஒட்டுமொத்தமாக விட்டொழியுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், `கவலைப்பட நீங்கள் செலவழிக் கும் மூளையின் எனர்ஜி மிக மிக அதிகம். அதனாலேயே கவலைப் படும்போது கண்ணெதிரே இருக்கும் வாய்ப்புகள்கூட நமக்குத் தென்படாமல் போய்விடுகிறது' என்கிறார். அதனாலேயே பிரச்னைகள் குறித்துக் கவலைப்படாமல் அதற்குண்டான தீர்வுகளைக் குறித்துச் சிந்திப்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.
 
சின்னச்சின்ன கவலைகள் எல்லாம் சுலபத்தில் ஒன்றாய்ச் சேர்ந்து பெரிய கவலையாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் சின்னதோ/பெரியதோ கவலையை விட்டொழியுங்கள் என்கிறார் ஆசிரியர்.
` வேலை எனும் ஜாப் மேலே சொன்ன அர்த்தமுள்ள வேலைகளை (J-O-B) சூப்பராய் செய்யும் வல்லமை பொருந்தியது. அதனாலேயே உங்கள் வாழ்க்கையை நீங்களே முடிவு செய்யும் வண்ணம் நீங்கள் வாழ ஆரம்பியுங்கள்' என்கிறார் ஆசிரியர்.
 
பயமே ஜெயம் என்று சொல்லும் ஆசிரியர் பயமில்லா மல் இருப்பது என்பது தைரியம் என்ற ஒன்று இல்லாமல் இருப்பதற்கு ஒப்பாகும். பயமே இல்லாமல் இருக்கும் மனிதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாத வாழ்க்கையே வாழ முனைவான். பயமில்லை என்றால் தைரியமில்லை. நிறையப் பயம் இருந்தால் மட்டுமே நிறையத் தைரியமும் தோன்றுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்கிறார் ஆசிரியர்.
 
``தைரியமும் சக்தியும் ஒன்றுக் கொன்று மதிப்பை கூட்டவல்லது. சக்தியில்லாத தைரியம் என்பது வெறும் நல்லெண்ணம் மட்டுமே. அதேபோல், தைரியம் இல்லாத சக்தி என்பது எந்தப் போட்டி யிலும் எடுபடாமல் போய்விடும்'' என்று எச்சரிக்கிறார்.
 
`` மனம் மட்டுமில்லை. உங்கள் உடம்பையும் நீங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் உடல் வலுவாக இருந்தால் மட்டுமே உங்கள் சொல்லுக்கு அது கட்டுப் படும்'' என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.
 
முன்னேற வேண்டும் என கனவு காணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது.
 
இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Flipkart - http://bit.ly/1JSpOSd
Amazon - http://amzn.to/1fYG509