Saturday, September 26, 2015

ஆலயங்களையாவது காப்பாற்றுவோம்

ஆலயங்களில் நடைபெறும் கதாகாலட்சேபம் மூலம், இறைவனுடைய மகிமைகளையும், இறையருளை அடைவதற்கான வழி வகைகளையும் சொல்வர். சில நூற்றாண்டுகளுக்கு முன், திருமடம் ஒன்றில், கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. சிவபுராணம் சொல்லிக் கொண்டிருந்தார் உபந்யாசகர்.
அதை, ஏராளமான அடியார்கள், மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, சிவபெருமான் உண்ட கட்டத்தை உணர்ச்சிப் பெருக்கோடு விவரித்தார் உபந்யாசகர். அப்போது, பசுபதி என்னும் பக்தர் ஒருவர், 'சுவாமி... போதும் நிறுத்துங்கள். ஆதியும், அந்தமும் இல்லாத சிவபெருமான், மிகவும் கொடிய ஆலகால விஷத்தை அருந்தினார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...' என்று கூறினார்.
சபை ஸ்தம்பித்தது; உபந்யாசகரோ, 'அப்பா... இது நானாகச் சொன்னது இல்லை; புராணத்தில் உள்ளது. அதை மாற்றிச் சொல்ல என்னால் ஆகாது; அமைதியாக உட்கார்...' என்றார்.

பசுபதியோ, 'என் சிவபெருமான் விஷத்தை உண்டாரென்றால், அதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்... சிவபெருமான் விஷம் உண்டது, உங்களுக்கெல்லாம் கதையாக இருக்கிறதா...' என்றவர், 'இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் எத்தனை கொடியவர்கள்... எம்பெருமானை விஷம் உண்ண வைத்து விட்டனரே... சிவபெருமான் உண்ட விஷம், அவர் தொண்டையிலேயே நின்று விட்டதாகச் சொல்கின்றனரே... ஐயோ... ஒருவேளை அது, சிவபெருமானின் வயிற்றுக்குள் சென்று விட்டால், என் சிவனுக்கு என்ன ஆகும்... நான் இறந்து, கைலாயம் சென்றாவது, இதற்கு ஒரு முடிவு கட்டுவேன்...' என்று கத்தியபடியே உயிரை மாய்த்துக் கொள்வதற்காக, கடலை நோக்கி ஓடினார்.

அப்போது, அவர் முன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான், 'பசுபதி... உன் பக்தியை மெச்சினேன்; உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...' என்றார்.
'சிவனே... தங்கள் கழுத்தில் உள்ள விஷத்தை வெளியே உமிழ்ந்து விடுங்கள்; வேறு வரங்கள் எதுவும் தேவையில்லை...' என்றார் பசுபதி.

'பசுபதி... கவலை வேண்டாம்; நான் தோற்றமும், அழிவும் இல்லாதவன்; நித்தியமானவன்...' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் சிவபெருமான். அவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ளாத பசுபதி, 'சிவனே... நீங்கள் என்ன தான் சமாதானம் கூறினாலும், என்னால் ஏற்க இயலவில்லை; அடியேன் உங்கள் மடியில் அமர்ந்தவாறு, அந்த விஷம் உங்கள் கழுத்திற்குக் கீழே இறங்காதபடி, கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்; அதற்கு அருள் புரியுங்கள்...' என வேண்டினார்.

அவருடைய அப்பழுக்கற்ற சுயநலமில்லாத பக்தியில் நெகிழ்ந்து, 'பசுபதி... நீ கோரியபடியே என் மடி மீது அமர்ந்து, விஷம் என் கழுத்தை விட்டுக் கீழே இறங்காமல் பார்த்துக் கொண்டே இரு...' என்று கூறி, அருள் புரிந்தார் சிவபெருமான்.

நாம் அனைவருமே இறைவனிடம், 'என்னை காப்பாற்று...' என்று தான் முறையிடுவோம். ஆனால், பசுபதியோ அந்த இறைவனையே காக்க நினைத்தார். அதன் காரணமாக, சிவபெருமானின் மடியிலேயே அமர்ந்திருக்கும் பாக்கியத்தையும் பெற்றார். அவரைப் போல, ஆண்டவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும், பக்தியும் நமக்கு ஏற்படா விட்டாலும் பரவாயில்லை; ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களையாவது காப்பாற்றுவோம்.
இதன் மூலம் அடுத்த தலைமுறை வாழும்; நம்மையும் வாழ்த்தும்!