Monday, April 15, 2013

கல்யாணத்தடை நீக்கும் கந்தன் வழிபாடு


ப்போதும் இளமையானவனான அழகன் முருகன், பக்தர்களுக்கு அருள்வதில் மிகப் பெரியவன். அந்த ஏரகச் செல்வன் நம்மை ஏறெடுத்துப் பார்த்தால், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். கந்தவேளை வழிபட, அவனைப் போலவே அழகான ஆண் மகவு, பொற்சிலையாய்ப் பிறக்கும்.

திருவடியும் தண்டையும் சிலம்பும் பூடுருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம் புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக்குதி கொண்டனவே

என்று கந்தரலங்காரப் பாடலில், முருக வழிபாட்டுப் பெருமையைப் போற்றிப் பரவுகிறார் அருணகிரிநாதர்.  

இந்த இதழில், செந்தமிழ்க் கடவுளின் திருவருளால் அங்காரக தோஷம் நீக்கும் அற்புதமான ஒரு வழிபாட்டை அறிவோம்.

ஒரு வளர்பிறைச் செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையைச் செய்தல் வேண்டும்.

அதிகாலையில் குளித்து மடியுடுத்திக்கொண்டு, வீட்டு பூஜை அறையில் சுத்தமான மணைப் பலகையில் பச்சரிசி மாவினால் சடாட்சர கோலம் போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வைக்கவேண்டும். கோலத்தில் எழுதப்பட்டுள்ள, 'ஓம் சரவணபவ' என்ற எழுத்துக்கள் மேல் செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அந்த மணைப் பலகைக்கு இருபுறமும் குத்து விளக்குகளும், முன்பக்கத்தில் கல்யாண கோல முருகன் படமும் வைக்கவேண்டும்.

அன்றைய திதி- வாரம், நட்சத்திரம், யோகம் உள்ளடக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு 'மம, அங்காரக தோஷ நிவர்த்தியர்த்தம் சடாட்சர பூஜாம் கிருத்வா' என்று சொல்லவேண்டும். அடுத்து,

'ஓம் கார்த்திகேயாய வித்மஹே குக்குட த்வஜாய தீமஹி
தந்தோ சண்முக பிரசோதயாத்'

என்ற சண்முக காயத்ரியை இரண்டு முறையும்,

'ஓம் சக்தி அஸ்தம் விரூபாட்சம் சிகி வாகம் ஷடானனம்
தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடத்வஜம்'

என்ற முருகனின் தியானச் சுலோகத்தை மூன்று முறையும் சொல்லவேண்டும். தொடர்ந்து செவ்வரளி, முல்லை மலர்களைக் கலந்து வைத்துக்கொண்டு, கீழ்க்காணும் போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் வேலனே போற்றி
ஓம் வரமருள் தேவா போற்றி
ஓம் சக்தி மைந்தனே போற்றி
ஓம் சரவணனே போற்றி
ஓம் தோஷம் அகற்றுவாய் போற்றி
ஓம் மங்களனே போற்றி
ஓம் சிவனார் மகவே போற்றி
ஓம் வள்ளி மனதோய் போற்றி
ஓம் அங்காரக் கடிவே போற்றி
ஓம் குரு குணனே போற்றி
ஓம் மயில்வாகனா போற்றி
ஓம் சேவற்கொடி செவ்வேளே
              போற்றி, போற்றி!

இப்படி மும்முறை கூறி, 'சரவணபவ' எனும் அட்சரங்களில் ஒவ்வொரு மலராகப் போட வேண்டும்.

 

பிறகு, வெல்லம் கலந்த தினைமாவு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் படைத்து, முல்லைமலர், செவ்வரளி (அரளி கிடைக்காவிடில் செம்பருத்தி) மலர் கலந்து கைகளில் வைத்துக் கூப்பியபடி...

நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

என்று முருகனின் துதி கூறி, சடாட்சர கோலத்தில் மலரிட்டுக் கற்பூர ஆரத்தி செய்து, விபூதி குங்குமம் எடுத்துக்கொண்டு ஆறு முறை திருச்சுற்றுதலும் மூன்று முறை ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றிவரல்) செய்ய வேண்டும். முல்லை மலர் குருபகவானுக்கு உரிய மலர். குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும், செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும். வீட்டில் விரைவில் கெட்டிமேளம் கொட்டும்.                                                                                                                               கே.குமார சிவாச்சார்யர்