Wednesday, April 10, 2013

கல்யாணமும் கலகல களேபரமும்



ல்யாணம்... க...க...க...கல்யாணம்... கல்யாணம்!' என்று உற்சாகமாகக் கொண்டாடினாலும் தமிழகத்தில் ஒவ்வொரு கல்யாணமும் கலகல களேபரமாகத்தான் அரங்கேறும்! ஆயுளுக்கும் நினைத்து நினைத்துச் சிரிக்கும், சிலாகிக்கும் நினைவுகளை விட்டுச் செல்பவை ஒவ்வொரு கல்யாணமும். அப்படி 'கள் தோன்றி பீர் தோன்றா காலத்தே முன் தோன்றிய' கல்யாணக் காமெடிகள் சிலவற்றை இங்கே பந்திவைக்கிறோம்...

காலை 11 மணி முகூர்தத்துக்குப் பொண்ணு மாப்பிள்ளைகூட எந்திரிச்சிருக்க மாட்டாங்க. ஆனா, அவதிஅவதியா நடுஜாமத்துல எந்திரிச்சு ஒழுங்கா பல்லுகூட வெளக்காம ஜில் தண்ணியில காக்கா குளியலைப் போட்டு, தும்பைப் பூ வேட்டி - சட்டை உடுத்தி, அழுத்தந்திருத்தமா சந்தனம், ஜவ்வாதுலாம் பூசி 'ஓட்டவாய் நாராயணா'போல மண்ட பத்து காலி சேர்ல மங்களகரமா உட்கார்ந்திருப்பாங்க சில உறவுமுறைகள். முந்தின நாள் ராத்திரி மாங்குமாங்குனு வேலை பார்த்த அசதியில கொஞ்சம் தாமசமா எந்திருச்சு வர்றவங்களை, 'விசேஷ வீட்டுக்காரங்களே இப்படி இருந்தா என்னத்துக்கு ஆகும்?'னு நறுக்குனு குத்தி, குற்ற உணர்ச்சியில ஆழ்த்திட்டுக் கூச்சமே இல்லாம, 'குடிக்க ஒரு வாய் காப்பித் தண்ணி எடுத்துட்டு வாங்க'னு ஆர்டர் போடுவாங்க. அந்த ஒரு வாய் காப்பித் தண்ணிக்காகத்தான் அம்புட்டுச் சீக்கிரமா எந்திரிச்சீங்களா அப்பாடக்கர்ஸ்!

''மாப்ள... உன் கல்யாணத்துல நீ ஒரு வேலை பார்க்கக் கூடாது... தாலியக் கட்டு... தங்கச்சியைச் சந்தோஷமா பார்த்துக்க. மத்தபடி கல்யாண வேலை மொத்தத்தையும் ஒத்த ஆளா நான் பாழ்ப்பேண்டா!'' என்று முந்தின இரவு பேச்சிலர் பார்ட்டியில் சலம்பிக் கொந்தளித்து முகூர்த்த நாள் காலை யில் பேச்சு மூச்சில்லாமல் பேஸ்தடித்துக் கிடக்கும் மாப்பிள்ளைத் தோழர் களை என்னங்க பண்ணலாம்? பேச்சிலர் ட்ரீட் கேட்கிறீங்க... ரைட்டு! ஆனா, அதுக்காக நாளைக்கே உலகம் அழிஞ்சி போற மாதிரியா குடிப்பீங்க? பீர், ரம், விஸ்கி, பிராந்தினு வகைதொகை இல்லாம அடிச்சுட்டு, விடியக்காலைல ஆஃபாயில் போட்டு அதை மறைக்க பெட்ஷீட்டைப் போட்டுனு ஏரியா வுக்கே பினாயில் போடவைக்கிற பினாமி பசங்களா... உங்களை எல்லாம் சுனாமி ஏன் இன்னும் தூக்கல?  

பார்க்குறதுக்கு ரொம்ப சுமாரா இருந்தாலும் ஒரு டொக்கு ஃபிகர் கல்யாண மண்டபத்தையே சுத்தி வருமே... கவனிச்சிருக்கீங்களா? வேற ஆப்ஷனே இல்லாம அந்த ஃபிகரையும் நூல் விடத் துடிப்பாங்க சில வெறிகொண்ட வேங்கைஸ். அந்தப் பசங்களுக்காகவே சும்மானாச்சும் தலை முடியை ஒதுக்கிவிடுறது, மேடையில அடிக்கடி ஏறி இறங்குறது, பேலன்ஸ் இல்லாத மொபைலை எடுத்து அடிக்கடி செக் பண்றது, கூட்டத்தைப் பார்க்கிற மாதிரி 180 டிகிரியில் எல்லாரையும் சரிசமமா லுக் விடுறது, தேவையே இல்லாம வெண்கலப் படியை எடுத்துட்டுப் போய் அப்பாத்தா மடியில போடுறது, கூடவே ஒரு குட்டிப் பாப்பாவைக் கூட்டிக்கிட்டு 'காதலுக்கு மரியாதை' ஷாலினி ஃபீலிங்ல அலையுறதுனு... ரொம்பக் கடுப்பேத்துறியே தாயி!  

'நீ தாலியக் கட்டுங்கடா... நான் பாத்தியக் கட்டுறேன்'னு முதல் பந்தியிலயே சோத்தைக் கொழைச்சு அடிக்கும் பஞ்சமா பாதகர்களை யாராலும் சமாளிக்க முடியாதுங்க. ஐயர் தாலிக்கு மேளம் கொட்டுற சிக்னல் கொடுத்த அடுத்த செகண்டே பந்திக்கு முந்துற உங்க அலும்பு ஓவருப்பா. மைக்ரோ செகண்ட்ல தனக்கும் இடம்புடிச்சு, பொண்டாட்டி புள்ளைகளுக்கும் கர்ச்சீப் போட்டு ரிசர்வ் பண்ணிடுவாங்க. மொத்தக் கூட்டமும் எந்திரிச்சாலும் அடுத்த பந்தி வரைக்கும் எந்திரிக்காம இருந்து, 'பந்தி முடிஞ்சிருச்சா, இல்லை ஆரம்பிக்குதா'னு அடுத்த ரவுண்ட் மக்களை அநியா யத்துக்கு கன்ஃபியூஸ் பண்ணி காக்க வைக்கிறீங்களே... உங்களுக்கு மட்டும் எப்படிய்யா காலங்காத்தால பசிக் குது? அதுலயும் முஸ்லிம் வீட்டு நிக்காஹ்னா, ஒரு வாரத்துக்கும் முன் னாடியே 'ஆபரேஷன் பிரியாணி' ஆரம்பிச்சு, வயித்தைக் காயப்போட்டு சீஸன் பண்ணிக் களமிறங்கி கபளீ கரம் பண்ணும், காண்டாமிருக வயிறுகொண்டவர் களின் எண்ணிக்கை நிக்காஹ் நிக்காஹ்வுக்கு எகிறும் மாயம் என்ன?    

ரிசப்ஷன்ல மேடையில இடதுபக்கமா ஏறி, வலது பக்கமா இறங்கி, ஒரு வரிசை போய்க்கிட்டு இருக்கும். ஆனா, 'வரிசையில வர்றது எறும்போட குணம்... நாங்க எருமைடா!'னு தாறுமாறா மேடையில ஏறி கொலாப்ஸ் பண்ணிடுவாக சில கொலஸ்ட்ரால் க்ரூப்ஸ். இந்தக் குரூப்பா... அந்த குரூப்பா எனத் தெரியாமல், போட்டோகிராஃபர் குத்துமதிப்பா போட்டோ எடுப்பாரு. 'யார்கிட்ட மொதல்ல கிஃப்ட் வாங்குறது?'னு மாப்பிள்ளையும் பொண்ணும் கன்ஃப்யூஸ் ஆவாங்க. இப்படிக் கூட்டமா வந்து கும்மி அடிக்கிற கும்கிப் பசங் களே... உங்களுக்கு ஏன் இந்த 'பார்கே' வெறி? வாழ்த்துறோம்கிற பேர்ல திருநீறு பூசும் பெரியவரே... அரியவரே... மணமக்களோட நெத்தி என்ன விளையாட்டு மைதானமா? ஒண்ணு பூசு... இல்லை கேமராவுக்கு போஸ் கொடு. அது என்ன கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசைனு டூ-இன்-ஒன் டார்ச்சர்? பொண்ணோட கண்ணுல பாதி, மாப்பிள்ளையோட மூக்குல மீதினு திருநீறைப் பூசுறதுக்குலாம் இ.பி.கோ. கிடையா தாங்க?

எக்கச்சக்க டென்ஷன், பணம்-பஞ்சாயத்து, உறவுக்கார முறைப்பு, ஐயர் அங்கிள் கிளப்பும் புகை, கசகச கூட்டம்னு பொண்ணும் மாப்பிள்ளையும் மிக இளம் வயதில் பி.பி. ஏறி மேடையில உட்கார்ந்திருப்பாங்க. அப்பத்தான்யா இந்த போட்டோகிராஃபர்களுக்கு வரும் ஒரு கடமை உணர்ச்சி. ஏற்கெனவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிற மாப்பிள்ளையையும் பொண்ணையும், 'சார், தாவாங்கட்டையில கைவெச்சு பொண்ணு கண்ணையே பாருங்க!', 'சார்... சார்... தோள்ல ட்வென்டி டிகிரி சாயுங்க!', 'கொஞ்சம் சின்டவுன் பண்ணுங்க... நீங்க கொஞ்சம் ஃபேஸ் அப் பண்ணுங்க', 'மிராண்டாவைக் குடிச்சுக்கிட்டே மிரண்ட மாதிரிப் பாருங்க', 'மாறி மாறி ஊட்டிக்கிட்டே ஊட்டி ஹனிமூன் ஃபீல் கொடுங்க'னு பாடாப் படுத்தி எடுக்கிறீங்களே... இது உங்களுக்கே நியாயமா போட்டோகிராஃபர்மாரேஏ...ஏ...ஏ...ஏ..?

வீடியோகிராஃபர் எங்கே ஆங்கிள் வெச்சாலும் கேமராவைக் கவனிக்காத விஜய் மாதிரியே லுக் கொடுக்கிறது, சாப்பிடும்போது சாம்பார் சாதம், அவியல், பொரியல், அப்பளம், ஊறுகாய் பேக்கேஜ் நிரம்பிய திறந்த வாயோடு ஃப்ரீஸ் ஆகுறதுனு பப்ளிசிட்டிக்கு மயங்குற பப்ளிகுட்டிப் பசங்களா... உங்களை எல்லாம் கட்டிவெச்சு விடிய விடிய லத்திகா டி.வி.டி. போட்டு மரண பயத்தைக் கண்ணுல காட்டணும்! மேடையில ஏறிவந்து கை கொடுக்கிறீங்க சரி... கேமராவைப் பார்த்து வெட்கப்படுறீங்க சரி... வீடியோகிராஃபருக்கும் போட்டோகிராஃபருக் கும் வித்தியாசமே தெரியாம வீடியோ எடுக்கும் போது மிலிட்டரி அட்டென்ஷன்ல நின்னு திருதிருனு விநோதமா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக் கிறீங்களே... ஆத்தி பயந்து வருது!

மொபைல் போன்ல போட்டோ எடுக்கிறதுக்குனே பொண்ணு சைடுலயும் மாப்ள சைடுலயும் கூட்டம் கூட்டமா கேமரா செல்போனைத் தூக்கிட்டு வர்றீங்களே... யாருப்பா நீங்கள்லாம்? மேடைக்கு முன்னாடி நின்னுக்கிட்டு மொத்தக் கூட்டத்துக்கும் முதுகுகாட்டி வெளாட்டு காட்டுறீங்களே... டூமச் டார்ச்சருப்பா. சைனா மொபைல்ல மக்கா நாள் டெலீட் பண்ணப் போற போட்டோவுக்கு இவ்ளோ பில்ட்அப் ஆகாதப்பு!

பேனர் காமெடி தனி ரகம். மாப்பிள்ளை மண்டையை மட்டும் தல அஜித் உடம்புல ஃபிட் பண்ணி டெரர் கௌப்புறது, கமல்ஹாச னோடு சோடி போட்டு 'விஸ்வரூபம்' கெட்அப்ல நடந்து வர்றதுனு போட்டோ ஷாப் உதவியோட பொடனியில அடிக்கிற டெரர் க்ரூப்ஸ் இப்போ வகைதொகை இல்லாம எல்லா ஊர்லயும் இருக் காய்ங்கப்பா. வீட்டுக்கே போய் வெத்தலை பாக்கு வெச்சுக் கூப்பிட்டதை எல்லாம் மறந்துட்டு, 'தாயா புள்ளையா பழகினோம். கடைசியில ஃப்ளெக்ஸ்ல என் போட்டோவை விட்டுட்டாய்ங்களே'னு ஜென்ம விரோதியாவே மாறி சண்டை போடுறீங்களே... உங்களை எல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர்ல உருட்டிப் புரட்டி அடிக்கணும்யா!

இது எல்லாத்தையும்கூடச் சகிச்சுக்கலாம்... சமாளிச்சுக்கலாம். ஆனா, ஆர்கெஸ்ட்ராங்கிற பேர்ல கல்யாண மஹாலையே கர்ணகொடூரமாக்கி அட்மாஸ்பியர் டெசிபலையும் டென்ஷனையும் ஏகத்துக்கும் எகிறவைக்கும் 'உள்ளூர் சங்கீதப் பறவைகளை'க் கூட்டுக்குள்ள அடைக்கிறது எப்படி?

சங்கீத சிரோன்மணி ஒருத்தர் கொலக் குத்தா, 'கடவுள் நினைத்தான்... மண நாள் கொடுத்தான்... வாழ்க்கை ஒன்றாகவே...' பாட்டை டி.எம்.எஸ்ஸை விட ஃபீலிங்ஸா பாடிப் படுத்தி எடுப்பார். அதே சமயம் கீழே உட்கார்ந்திருக்கிற ஒருத்தர் எந்திருச்சு 'வி.டி.வி.' கணேஷ் குரல்ல, 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந் தான்...' பாட்டைப் பாடித் தன் பங்குக்கு எரியுற நெருப்புல பெட்ரோல் ஊத்துவார். உங்களை எல்லாம் 'நான் கடவுள்' ஆர்யாகிட்ட அனுப்பி, குரவளையைக் கடிச்சுவெச்சாதான் சரியா வருவீங்கடே!

10 வருஷத்துக்கு முன்னாடி 101 ரூபாய் மொய் செஞ்சிருப்பாரு ஒருத்தரு. இப்போ இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு அதே 101 ரூபாவோட போய் கணக்கைச் சரிக்கட்டுவாய்ங்க சிலரு. விலைவாசி, பணவீக்கம், உலகமயமாக்கல் என எல்லாத்தையும் முதுகுக்குப் பின்னால தூக்கி வீசிட்டுப் போய்ட்டே இருக்கீங்களே... உங்களாலதான் இந்தியா இன்னும் டல்லரசாவே இருக்கு!

மொய் எழுதுற ரூல்டு நோட்டுல ரூல்ஸே இல்லாம அவன் பேரு, அவங்க அப்பா பேரு, தாத்தா பேரு, ஊரு பேரு, தெரு பேருனு 'ஜி.பி.எஸ்.' டீட்டெய்லிங் கொடுத்துட்டு, ஸ்லோமோஷன்ல போற மகராசா... உனக்குலாம் மனசாட்சினு ஒண்ணு இருக்கா?

'இதாச்சும் பரவாயில்லை'னு சொல்ல வெச்சிடுவாங்க கிஃப்ட் வழங்கும் கோஷ்டி. தன் வீட்டு விசேஷத்துக்குப் பரிசா வந்த 'வால் க்ளாக்', 'நைட் லேம்ப்'னு ஆகாத, போகாத பொருட்களையெல்லாம் மூணு ரூபா கிஃப்ட் ரேப்பர்ல அழகாச் சுத்திக் கொண்டுவந்து பெருமையா போட்டோவுக்கு போஸ் கொடுக்குற கொடூர மனம் கொண்டவர்களை... மந்திரி நாராயணசாமிகிட்ட 15 நாள் டியூஷனுக்கு விடணுமுங்கோ!

'மணமக்காள்... நீவீர் இருவரும் நகமும் சதையும்போல... பூவும் நாரும்போல... கடலும் அலை யும் போல...' என காலாவதியான 'கவிஜ'களை ஒரு அட்டையில் அச்சடிச்சு, அதில் அம்பது காசு மிட்டாய் பின் பண்ணிக் கொடுக்கும் அங்காளி பங்காளிகளே... மாமன் மச்சான்களே... அட்லீஸ்ட் நடுவுல 'மானே... தேனே...'வாவது போடுங்களேன்!