Sunday, April 14, 2013

முக்கிய புத்தகம் - நம்புங்கள் உங்களால் முடியும்!

தனி மனிதனுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று பட்டியல் போட்டால், அது பல கி.மீ தூரத்துக்குச் செல்லும். அப்படி வரும் பிரச்னைகளைக் கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடு வாழ்க்கையை வழிநடத்தும் தெம்பினைத் தரும் புத்தகம்தான் இந்த 'அன்ஸ்டாப்பபிள்'.
இந்தப் புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும்முன் புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றி  அறிவது அவசியம். இந்தப் புத்தகத்தின் ஆசிரியருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும், கால்களும் கிடையாது (புத்தகத்தின் அட்டையில் போடப்பட்டிருக்கும் போட்டோ ஆசிரியருடையதுதான்).  இவ்வளவு பெரிய குறை இருந்தும் தனக்குப் பிடித்த செயல்களைச் செய்து வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றார்.
அது எப்படி சாத்தியம் என்கிற உங்கள் கேள்விக்கு, அவர் என்ன பதில் சொல்கிறார் தெரியுமா? 'உங்கள் செயலின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை அதீதமானதாக இருந்தால் எதுவும் சாத்தியம்தான். முதலில், நீங்கள் செய்யும் ஒரு விஷயத்தை முழுமையாக நம்புங்கள். பின்னர் அதனை முழுமையாகச் செய்தால் வெற்றி நிச்சயம். உங்கள் மீது, உங்கள் திறமையின் மீது, உங்களுடைய குறிக்கோள் மீது, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் நம் மீது செலுத்தும் அன்பின் மீது, இறைவன் உங்களுடைய வாழ்க்கைக்காக வைத்திருக்கும் திட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடும்' என்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர் நிக்.
சிறு பிள்ளையாக இருக்கும்போது இப்படி கையும் காலும் இல்லாமல் பிறந்துவிட்டோமே! இறைவன் இப்படி ஒரு பிறவியை எடுக்க வைத்துவிட்டானே என்று நிக் ரொம்பவுமே வருந்தினாராம். ஆனாலும், அவரைப்போல பலரும் இருப்பதைப் பார்த்தபின்னர், இறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நம்மை இப்படிப் படைத்திருக்கின்றான். அது என்னவென்று தெரிந்துகொண்டு அதைச் செயலாக்க வேண்டும் என்று தீர்மானித்து செயல்பட ஆரம்பித்தாரம்.


'நீங்கள் உலகில் இருக்கும்வரை உங்களுக் கென்று ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறான் இறைவன். இறைவன் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார். உங்களைச் சுற்றிலும் பல சாமான்ய மனிதர்களையும், புரபஷனல் களையும் உங்களுக்கு உதவுவதற்காக அவர் தந்துள்ளார். அவர்களுடைய உதவியுடன் எல்லா இடர்பாடுகளையும் தாண்டி நீங்கள் நிச்சயமாக நினைத்ததைச் சாதிக்க முடியும். இதை முழுமையாகப் புரிந்துகொள்ள என்னைப் பாருங்கள். கையும் காலும் இல்லாத நான் உலகம் முழுவதும் பயணிக்கின்றேன். சந்தோஷமும் அன்பும் கொண்டவர்களாகிய பல லட்சம் மக்களைச் சந்திக்கிறேன்.
நம்முடைய செயல்களில் நாம் அதீத நம்பிக்கை வைக்கும்போது, தடுத்துநிறுத்த முடியாத வெற்றியை (அன்ஸ்டாப்பபிள்) பெரும் நபராக இறைவன் நம்மை மாற்றி விடுகின்றான் என்கிறார் நிக்.
உங்களால் எதன் மீது நம்பிக்கை வைக்க முடிகின்றதோ, அதில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் அதில் பெரும் வெற்றிபெற முடியும் என்று சொல்லும் ஆசிரியர், அதை பல்வேறு உதாரணங்களைச் சொல்லி விளக்கியுள்ளார்.
'ஒரு காரியத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தாலும், நீங்கள் அந்த விஷயத்தைச் செய்து முடிக்க எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே, உங்கள் வெற்றி தீர்மானமாகும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், நீங்கள் எதை அடைய முடியும் என்று தீவிரமாக நம்பி, அதிக ஈடுபாடு கொண்டுள்ளீர்களோ, அதில் நிச்சயமாக நீங்கள் ஒரு சாதனையாளராக வரமுடியும்' என்கின்றார் நிக்.
'நான் என் பிறவிக் குறைபாடுகளை மனதில் வைத்துக்கொண்டு என்னைச் சுற்றி இருக்கும் உலகுக்கு நான் எதைத் தரமுடியும் என்று சிந்தித்தேன். அன்றாட வாழ்வின் பல அறைகூவல்களைக் (சேலஞ்ச்) கண்டு பயப்படும் மனிதகுலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுவதுதான் என் சிறப்பான செயல்பாடாக இருக்கும் என்று நினைத்தேன். இறைவன் என்னைப் படைத்ததே தோல்வியையும், இயலாமையையும் கண்டு துவளும் மனிதர்களுக்கு நம்பிக்கை தரத்தான் என்று உணர்ந்தேன். அதனாலேயே நான் நம்பிக்கையுடன் வாழ்ந்து மற்றவர்கள் மனதிலும் நம்பிக்கை விதையை நாட்டுகின்றேன்' என்கிறார் ஆசிரியர்.
பிறப்பினால் கிறிஸ்தவரான இவர் இறைநம்பிக்கை மிகவும் உள்ளவராகவும், பல்வேறு சமயங்களில் பைபிளில் இருந்து மேற்கோள்களையும் இந்தப் புத்தகத்தில் காட்டியுள்ளார்.
'நம்பிக்கையைச் செயல்களின் மூலம் காட்டுங்கள். வெற்றி என்பது உங்களைத் தேடி ஓடிவரும்' என்கிற சக்சஸ் ஃபார்முலாவை ஒற்றை வரியில் எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் மனம் தளர்ந்துபோகும் போதெல்லாம் ஒருமுறை படித்து ரீ-சார்ஜ் செய்துகொள்ளலாம்.