Monday, April 15, 2013

சிறுவர்களை இணையத்தில் நல்வழி நடத்த

எட்டு வயதிலேயே இணையத்தைத் தேடித் தங்களுக்கு வேண்டியதைப் பெறும் வழிகளைச் சிறுவர்கள் அறிந்து வருகின்றனர். கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வீடுகளில் இன்றையமையாத சாதனங்களாக அமைந்து, அனைவரின் வாழ்க்கையிலும் இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில், இணையத்தின் தீய பக்கங்களில் இருந்து, அவை தரும் விஷமத்தனமான தகவல்களிலிருந்து, வன்முறையைப் போதிக்கும் பக்கங்களிலிருந்து, சிறுவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். சிறுவர்களுக்குத் தடை விதித்தால், அவற்றை மீறத் துடிக்கும் ஆசையும், ஆர்வமும் அவர்களிடம் உண்டாகிறது. அப்படியானால், இதற்கு என்னதான் தீர்வு? என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் ஓங்கி நிற்கிறது. தீர்வுக்கான பல வழிகளையும் இணையமே தருகிறது. அவற்றில் ஒன்றான K9 Web Protection என்னும் புரோகிராம் குறித்து இங்கு அறியலாம். 

இணையத்தில் http://www1.k9webprotection. com/getk9webprotectionfree என்ற முகவரியில் இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து, சிறுவர்களை இணையத்தில் கட்டுப்பாட்டுடன் வழி நடத்தும் வழிகளை செட் செய்திடலாம். நாம் அருகில் இல்லை என்றாலும், இந்தக் கட்டுப்பாடுகள் செயல்பாட்டில் இருக்கும். இதனால், எந்த சூழ்நிலையிலும், சிறுவர்கள், நாம் அமைத்த வழிகளை மீறி இணையத்தில் தளங்களைக் காண இயலாது. இவை தரும் பல்வேறு வழி நிலைகளை இங்கு காணலாம்.

வன்முறை, இனவேறுபாடு, வெறுப்பு வளர்க்கும் போதனைகளைக் கொண்ட தளங்களைத் தடை செய்திடலாம். பாலியல், போதைக்கு வழி காட்டுதல், டேட்டிங் போன்ற வழிகளைக் கொண்டுள்ள தளங்களைத் தடை செய்திடலாம். 
ஒவ்வொரு சிறுவனுக்குமான வயதின் அடிப்படையில், தடைகளை ஏற்படுத்தலாம். அனைத்து வகை தேடல்களிலும், இந்த தடைகள் செயல்படும் வகையில் SafeSearch என்ற வழியை அமைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணைய இணைப்பு கிடைக்காத வகையில் அமைக்கலாம். மற்ற பாஸ்வேர்ட்கள் இல்லாமல், நாம் அமைத்துக் கொடுக்கும் பாஸ்வேர்டுகளுக்கு மட்டும், இணையம் வழி கிடைக்க வகை செய்திடலாம். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் கூட, இந்த தடைகளை மாற்றி அமைக்க முடியாது. மீறி தடை செய்யப்பட்ட தளங்களை யாரேனும் பார்த்தால், அது குறித்த நேரம், தள முகவரி குறித்த அறிக்கையினை நம் மின்னஞ்சலுக்கு அனுப்பும் வகையில் செட் செய்திடலாம். 

இந்த புரோகிராமினை விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களிலும் இயக்கலாம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இந்த புரோகிராம் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த புரோகிராமினை, இன்ஸ்டால் செய்து இயக்கத் தொடங்குகையில், அதற்கான லைசன்ஸ் கீ கேட்கப்படும். இதனை http://www1.k9webprotection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் இலவசமாகப் பெறலாம். 

இதே புரோகிராம் ஐ போன், ஐ பாட் டச் மற்றும் ஐ பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகைகளிலும் கிடைக்கிறது. இந்த சாதனங்களுக்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் இதனைப் பெற்று பயன்படுத்தவும்.