Tuesday, April 23, 2013

குட்டிச் சுட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கை குறிப்புக்கள்

ம் நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 லட்சத்து 36 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்களில் 1,61,800 பேர் மீட்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, 75,000 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.'' சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தப் புள்ளிவிவரத்தை அளித்தவர், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் பபன் சிங் கதோவர். சிறுவர்கள் காணாமல் போவதற்கு, சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுடன் குற்றச் செயல்களும் முக்கியக் காரணம் என்கிறது அரசு. அதே வேளையில், ஆள்கடத்தல் என்ற மோசமான சூழலும் காரணம் என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.


காணாமல்போகும் சிறுவர்களின் படங்களை வெளியிடுவது, பெற்றோர்கள், சிறுவர்களுக்கு வழிகாட்டுவது, குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான சட்ட நடைமுறைகளை அனைவரும் தெரிந்துகொள்வதற்கு, 'ட்ராக் சைல்ட்' (http://trackthemissingchild.gov.in/trackchild) என்ற சிறப்பு வலைதளத்தை, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்திவருகிறது.


சுட்டிகளின் பாதுகாப்புக்குப் பெற்றோர், ஆசிரியர், அரசு, காவல் துறை எனப் பல்வேறு தரப்பினரும் முக்கியத்துவம் தருகின்றனர். அதே வேளையில், சுட்டிகளும் தங்கள் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது அவசியம். அதற்கு நாம் சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்.


குட்டிச் சுட்டிகளுக்கு...


12 வயதுக்கு உட்பட்ட சுட்டியாகிய நான், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தவறாமல் பின்பற்றுவேன்.

என் முழுப் பெயர், பெற்றோர் பெயர்கள், வீட்டு முகவரி, வீட்டுத் தொலைபேசி எண்கள் மற்றும் என் பெற்றோரின் செல்போன் எண்கள் ஆகியவை எனக்கு முழுமையாகத் தெரியும்.

எனக்குத் தெரிந்த நபரோ அல்லது தெரியாத நபரோ ஏதேனும் பொருட்களை என்னிடம் கொடுக்கும்போது, அதைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு, என் பெற்றோரிடமோ அல்லது நான் நம்பும் நபர்களிடமோ முதலில் தெரிவிப்பேன். அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெறுவேன்.

விளையாடுவதற்கோ அல்லது வெளியிலோ செல்லும்போது, என் அண்ணன் அல்லது அக்காள் அல்லது நண்பர் உடன்தான் செல்வேன்.

எனக்குப் பயமோ, குழப்பமோ ஏற்படும் வகையில், என்னை யாராவது தொட்டு அணுகினால், 'வேண்டாம்' என்று சொல்லி மறுப்பேன்.

எந்தச் சூழ்நிலையிலும் 'வேண்டாம்' என்று சொல்லக்கூடிய தைரியம் என்னிடம் உள்ளது. ஏனெனில், எனக்கு வேண்டியதைச் செய்ய, என் பெற்றோர் இருக்கிறார்கள்.

எனக்குப் பயமோ, தயக்கமோ,  குழப்பமோ ஏற்படும் சூழலைப்பற்றி, என் பெற்றோரிடம் நிச்சயம் சொல்வேன்.

நான் உறுதியாகவும், தெளிவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.


டீன் சுட்டிகளுக்கு...


டீன் ஏஜ் சுட்டியான எனக்கு, குட்டிச் சுட்டிகளின் உறுதிமொழிகளும் பொருந்தும். அவற்றுடன் கீழ்க்கண்ட விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுவேன்.

நான் தனியாக வெளியே போக மாட்டேன். எப்போது வெளியே சென்றாலும், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படுவேன். நான் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பேன் என்பதை, எனக்கு நம்பகமானவர்களுக்குத் தெரியும்படி பார்த்துக்கொள்வேன். அப்போதுதான், எனக்கு ஏதாவது ஒன்று என்றால், அவர்கள் என்னை எளிதில் அணுக முடியும்.

என் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் எவரேனும் தப்பான நோக்கத்துடன் தொட்டால், அதை உடனே தடுப்பேன்.

எனக்கு 'குட் டச்' எது? 'பேட் டச்' எது? என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இதுவரை தெரிந்திருக்கவில்லை எனில், என் பெற்றோர், ஆசிரியர் அல்லது நான் நம்பும் பெரியவர்களிடம் தெரிந்துகொள்வேன்.

எவரேனும் பாலியல் உணர்வுகளைத் தூண்டினாலோ, போதைப்பொருட்களைக் கொடுத்தாலோ, எனக்குத் தவறு எனத் தோன்றுவதைச் செய்தாலோ, என் மன உறுதியைத் தளரவிடவே மாட்டேன்.

வீட்டில் நிதி உள்ளிட்ட காரணங்களால் அமைதியற்ற சூழல் நிலவினால், அதுபற்றி ஆசிரியர்கள், நண்பர்களிடம் சொல்லி ஆலோசனை பெறுவேன்.

இனி, பள்ளிக்குச் சென்று திரும்பும்போதும், வீட்டில் தனியாக இருக்கும்போதும் கவனிக்க வேண்டியவற்றைப் பார்ப்போம்.


பள்ளிக்குச் செல்லும்போது...


பேருந்துக்காகக் காத்திருக்கும்போது, நண்பர்களுடன் குழுவாகவே இருங்கள். அது ஜாலியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

பள்ளிக்குச் செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் எவரேனும் தொல்லைகள் கொடுத்தால், உடனடியாகப் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் சொல்லுங்கள்.

பொது இடங்களில், உங்களிடம் வயதில் பெரிய சந்தேகத்துக்குரிய நபர்கள் ஏதாவது உதவியோ, வழியோ கேட்டால், சொல்லாமல் நகருங்கள்.

உங்களுக்குத் தெரியாதவர் எவரேனும் 'லிஃப்ட்' தருகிறேன் என்றாலோ, ஒன்றாகப் பேசிக் கொண்டே பயணிப்போம் என்றாலோ, யோசிக்காமல் மறுத்துவிடுங்கள்.

உங்களை யாராவது பின்தொடர்ந்து வந்தால், அதுபற்றி உடனடியாக உங்கள் வீட்டுப் பெரியவர்களிடமோ, ஆசிரியரிடமோ தகவல் சொல்லுங்கள்.

உங்களை யாராவது சட்டெனப் பிடித்து இழுத்துச் செல்ல முற்பட்டால், 'இவர் என்னை இழுத்துச் செல்கிறார், காப்பாத்துங்க...' என்று சத்தமாகக் கூச்சலிடத் தயங்க வேண்டாம்.

உங்கள் உள்ளுணர்வுகளை நம்புங்கள். உங்களை எவரேனும் பயம், பதற்றம் அடையச் செய்தால், அதுபற்றி நம்பகமானவர்களிடம் தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்.


வீட்டியில் தனியாக இருக்கும்போது...


கதவைத் திறந்து உள்ளே நுழையும் முன், வீட்டுக்குள் இயல்பான சூழ்நிலைதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது தவறாகப்பட்டது என்றால், உடனடியாக உதவிக்குப் பெரியவர்களை அழையுங்கள்.

வீட்டில் தனியாக இருக்கும்போது, கதவை எப்போதும் பூட்டித்தான் வைத்திருக்க வேண்டும்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவையோ, அப்பாவையோ தொலைபேசியில் அழைத்து, நீங்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட தகவலைச் சொல்லுங்கள்.

உங்கள் வீட்டுத் தொலைபேசியில் யாராவது அழைத்தால், நீங்கள் தனியாக வீட்டில் இருக்கும் விஷயம், அந்த நபருக்குத் தெரியக் கூடாது.

நம்பகமான குடும்ப நண்பர்கள், உறவினர்கள் தவிர வேறு எவர் வந்தாலும், வீட்டுக் கதவைத் திறக்கக் கூடாது. அவர்களைப் பிறகு வரச் சொல்லுங்கள்.

உங்களுக்கு மிகவும் பழக்கமான பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது அவர்களுடன் பேசிப் பழக வேண்டாம். வீட்டில் பெரியவர்கள் கண்காணிப்பில்தான் அவர்களுடன் பழக வேண்டும்.