Friday, November 16, 2012

FACEBOOK - அடிமையாக முடங்கிக் கிடக்கிறார்கள்

''நேற்று மாலை வீட்டுக்கு திரும்பும்போது மல்லிப்பூ வாங்க மறந்துவிட்டேன். மனைவி திட்டுவாள் என்று பயந்தேன். 'இன்னிக்குத்தான் பத்து ரூபாயை மிச்சம் பண்ணி இருக்கீங்க...' என்றாள். பெண்களைப் புரிஞ்சுக்கவே முடியலைப்பா!''- இப்படி ஒரு ஸ்டேட்டஸ்


''உங்க வீட்டுக்காரம்மா ரொம்ப சமர்த்து!''


''நிதி அமைச்சராக உங்கள் மனைவியை ஏன் நியமிக்கக் கூடாது!''


''நாங்க டெய்லி பத்து ரூபாய் மிச்சம் பண்றோம்... காரணம், எங்களுக்குத்தான் கல்யாணமே ஆகலியே...''


வரிசையாக இத்தனை கமெண்ட்ஸ்... கூடவே இன்னும் இருபது பேரின் லைக்ஸ்.


எகிப்து புரட்சிக்கு வித்திட்டதாகச் சொல்லப்படும் சமூக வலைத்தளங்களை நாம் இப்படித்தான் அணுகி வருகிறோம். தடுக்கி விழுந்தால்கூட பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது, அதற்கு 'லைக்ஸ்' போடச் சொல்லி நண்பர்களை டார்ச்சர் செய்வது என சமுக வலைத்தளங்களின் அடிமையாகவே இன்று சிலர் முடங்கிக் கிடக்கிறார்கள். இன்னும் சிலரோ, பொழுதுபோக்க மட்டும் அல்லாது தங்களுக்கு ஆகாதவர்களைப் போட்டுத்தாக்கும் தளமாகவே வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய உதாரணம்... சின்மயி!
சரி, விஷயத்துக்கு வருவோம். 'சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஒரு புது ரகத்தினர் மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதுகுறித்து மனநல மருத்துவர் செந்தில்வேலன் விரிவாகப் பேசுகிறார்.


''சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறிய ஒன்பதாம் வகுப்பு மாணவியை என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த மாணவி 'படிக்கிறேன்' என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம் வரை சமூக வலைத்தளத்தில் மூழ்கி இருந்திருக்கிறார். அவருக்கு அந்த வலைத்தளத்தில் 500-க்கும் மேற்பட்ட நண்பர்கள். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 30-40 பேராவது அவருடன் அந்தத் தளம் வாயிலாக 'சேட்' செய்வது வழக்கம். நான்கு வரி தட்டச்சு செய்து அனுப்பிவிட்டு, அதற்கு என்ன பதில் வருகிறது என்ற காத்திருப்பு அவருக்கு ஒரு போதையை ஏற்படுத்தி இருக்கிறது. புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று மணிக்கணக்கில் கவனித்தபடியே இருந்ததால் படிப்பு பாதிக்கப்பட்டது. வகுப்பில் முதல் 10 இடங்களுக்குள் வரும் அந்த பெண், தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார். சுதாரித்துக்கொண்ட பெற்றோர் அவரது நடவடிக்கையைக் கண்காணித்து என்னிடம் அழைத்துவந்தனர். கவுன்சிலிங் மூலமாக சமூக வலைத்தளத்துக்கு அடிமையாகி இருந்த அவரை மீட்டோம்'' - உதாரண நிகழ்வோடு ஆரம்பித்தார் டாக்டர் செந்தில்வேலன்.


''மூளையில் 'டோபோமைன்' என்ற வேதிப்பொருள் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் உண்டாவதும் இது போன்ற 'அடிக்ஷன்' ஏற்பட காரணம். ஒரு காலத்தில் மது, சூதாட்டம், சிகரெட்... என வீட்டுக்கு வெளியே இருக்கும் விஷயங்களுக்குத்தான் ஒரு சிலர் அடிமைப்பட்டார்கள். ஆனால், இன்றோ வீட்டின் நட்ட நடுக் கூடத்தில் 'கௌரவம்' என்று கருதப்படும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் போன்றவற்றுக்கு, வயது வித்தியாசமின்றி பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.
சமூகத் தளங்கள் மூலமாகப் பள்ளி மாணவிகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது. குழந்தைகள் யாருடன் பழக வேண்டும், நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. யார் என்றே தெரியாமல், முகம் தெரியாத ஆட்களுடன் 'தான் யார், தனக்கு என்ன சினிமா பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது' என்று துவங்கி தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள். புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில் உணர்வு ரீதியான உறவாகவும் மாறுகிறது. இதனால்தான் முகம் தெரியாத நபருடன் காதல், ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டவருடன் ஓட்டம் என்று பல செய்திகளை நாம் பார்க்கிறோம்!'' என்ற டாக்டர் செந்தில்வேலன் இந்த அடிமைத்தனத்துக்கு ஆட்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் விளக்கினார். ''சமூக வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின் மீது கவனம் குறையும். கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும். நிறைய 'லைக்ஸ்', 'ஷேர்' கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து மனஅழுத்தம் ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து வந்தால், அதைத் தாங்கும் பக்குவமற்று சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும் மாறும். யாரைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற அளவுக்கு இணைய சுதந்திரம் நம் தேசத்தில் இருக்கிறது. அதனால், நம்மை நோக்கிய தாக்குதல் எந்த நேரத்திலும் இணையத்தில் வெளிப்படலாம்.

மறைமுகப் பெயர்களால் கருத்துரீதியான தாக்குதலுக்கு நாம் ஆளாகலாம். ஆனால், இதை எல்லாம் சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள ஆர்வத்தால் எத்தகைய மனச்சிக்கலுக்கும் ஆளாக நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும் உருவாகும்.


மனம் மட்டும் அல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும் கண் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது வேலையில் கவனம் குறையும். குடும்ப உறவில் விரிசல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகும்!' என வலைத்தள பாதிப்புகளைப் பட்டியல் போட்டவர், அடுத்து சொன்ன சம்பவம் இன்னும் முக்கியமானது.
'சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நபர் அவர். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள். எல்லா ஆண்களுக்கும் 'அழகி' படத்தைப்போல, பள்ளி- கல்லூரிக் காலத்தில் ஏதாவது ஒரு காதல் அனுபவம் இருந்திருக்கும். இவர் பிளஸ்-1 படித்தபோது உடன் படித்த மாணவி மீது ஒரு கண். இருவரும் பார்த்துக்கொண்டதோடு சரி... காதலை வெளிப்படுத்தவில்லை. இப்போது அந்த பெண் என்ன செய்கிறார்? ஃபேஸ்புக்கில் இருக்கிறாரா என்று தேட ஆரம்பித்திருக்கிறார் அந்த நபர். படித்த பள்ளியை வைத்துத் தேடியபோது அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகி, பள்ளி செல்லும் வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு இவர், 'ஃபிரெண்ட் ரிக்வஸ்ட்' அனுப்பினார். இருவரும் நண்பர்கள் ஆயினர். பள்ளிக்காலத்து நிகழ்வுகளை அவர் அந்தப் பெண்மணியின் மனதில் தூண்டிவிட்டார். பழைய நினைவுகளில் இருவரும் மூழ்கினர். அந்தப் பெண்மணி இல்லை என்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு இவர் ஆளாகிவிட்டார்.
மற்ற எந்த வேலையும் செய்யாமல் இணையத்தில் பேசுவதிலேயே இருவரும் நேரத்தை செலவிட்டனர். இதனால் இருவர் குடும்பத்திலும் சண்டை சச்சரவு. அவரை அவரது மனைவி என்னிடம் அழைத்துவந்தார். 'தினமும் மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்னிலையில் உட்கார்ந்திருக்கிறார். மொபைல் ஃபோனே கதி என்று இருக்கிறார். பிள்ளைகளுடன் கூடப் பேசுவது இல்லை...' என்றார்.


சமூக வலைத்தளத்தில் இருந்து விடுபட அவருக்கு கவுன்சிலிங் அளித்தேன். தற்போது அவர் சமூக வலைத்தளம் பக்கம் போவது இல்லை. சமூக வலைத்தளம் குடும்ப உறவை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதற்கு இவரது வாழ்கை ஓர் உதாரணம். சமூக வலைத்தளத்தில் மூழ்கியவர்களுக்கு இதர விஷயங்களில் கவனம் திரும்பாமல் போய்விடுகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, பேசுவது, பொது விஷயங்களில் கலந்துகொள்வது போன்றவை எல்லாம் வீண் வேலை என்றே நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் மூழ்குவதுதான் ஒரே மகிழ்ச்சி  என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.


இந்த நிலைக்கு ஆளாகிவிடாமல் இருக்க முதலில் சுயக் கட்டுப்பாடு தேவை. அரை மணி நேரம் மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் செலவழிப்பேன் என்று வரையறுத்துவிட்டால், அதை மீறக்கூடாது.


பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்குச் சமூக வலைத்தளங்கள் தேவை இல்லை. எனவே, இதில் பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.


இதற்கு மாறாக, புத்தகம் படிப்பது, அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில் சந்தோஷத்தை உருவாக்க வேண்டும். சமூக வலைத்தளங்களுக்கு 'அடிக்ட்' ஆனவர்களை இந்த நோயில் இருந்து மீட்க ஒரே தீர்வு... அத்தகைய ஆர்வத்தை உடனடியாக நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மூன்றே வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட முடியும்.'' என நம்பிக்கையோடு சொல்கிறார் டாக்டர் செந்தில்வேலன்.


''என் குழந்தைகளுக்கு இன்டர்நெட் வசதியை நான் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. காரணம், என் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க நான் இருக்கிறேன். இன்டர்நெட் நல்லதும், கெட்டதுமான கலவை. குழந்தைகள் மட்டும் அல்ல... நாமும் அதனை எச்சரிக்கையோடு அணுகுதலே நலம்!'' - ஒரு பேட்டியின்போது உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சொன்ன கருத்து இது. இதில், உங்களுக்கு உடன்பாடுதானே?