Saturday, November 24, 2012

கோவைக்கு வயது 208

கோவைக்கு இன்று 208 வயது
 
கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான கோவை, பழங்குடியின மக்களின் வசிப்பிடமாக இருந்துள்ளது. அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்தூர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

கோவையை ஆண்டவர்கள்

கோவை மண்டலம் ரெட்டி, சாளுக்கியர்கள்,ராஷ்டிரியர்கள்,சேர,சோழ,பாண்டியர்கள்,கொங்கு சோழர்கள்,கொங்கு பாண்டியர்கள், ஹோய்சலர்கள்,விஜயநகரம், மதுரை நாயக்கர்கள், மைசூர் உடையார்கள்,ஹைதர் அலி,திப்பு சுல்தான் ஆகியோரின் ஆளுகையில் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் கைக்கு கோவை சென்றது.அந்த காலத்தில் கேரளா மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது கோவையிலிருந்து நீலகிரிக்கு செல்லும் மலைப்பாதையை அமைத்தது ஆங்கிலேயர் தான். அது மட்டுமல்லாமல் நீலகிரி மற்றும் வால்பாறையில் தேயிலை சாகுபடி செய்யும் முறையை கற்றுக் கொடுத்தவர்களும் ஆங்கிலேயர்கள் தான்.

கோவை உருவான நாள்

சாலை மற்றும் தொழில் ரீதியாக கோவையின் முக்கியத்துவம் உயர்ந்ததை தொடர்ந்து 24.11.1804 அன்று கோவையை மாவட்ட தலைநகரமாக ஆங்கிலேயர் ஆட்சி அறிவித்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவான நொய்யல் ஆறு கோவையின் பல பகுதிகளில் பாய்ந்தோடியதால் பல குளங்கள் உருவாக்கப்பட்டன. கோவையை சுற்றியுள்ள நிலங்களின் பாசன வசதிக்காக குளங்கள், தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டன.

கோவை தொழில் ரீதியாக எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பது குறித்து கோவை சிறுதுளி அமைப்பைச்சேர்ந்த ராஜேஷ் கோவிந்தராஜுலு கூறியதாவது:–

கோவை மாவட்ட தலைநகரமாக தரம் உயர்த்தப்பட்ட அடுத்த சில ஆண்டுகளில் கோவை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. பருத்தி நெய்தலுக்கான இதமான தட்பவெப்பநிலை நிலவியதால் கோவையில் முதன் முதலாக 1878–ம் ஆண்டு ஸ்டேன்ஸ் நிறுவனம் முதல் மில்லை தொடங்கியது. அதைதொடர்ந்து கோவையில் ஏராளமான மில்கள் உருவாயின. இதன் மூலம் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றது. கோவையில் ஏராளமான மில்கள் உருவானதால் தொழில் வளம் பெருகி அடிப்படை தொழிற் கட்டமைப்புகள் மேம்பட்டன. 1921 முதல் 1936 வரை கோவை நகராட்சியின் சேர்மனாக பதவி வகித்த திவான் பகதூர் சி.எஸ். ரத்தினசாரதி காலத்தில் கோவையில் வணிக நிறுவனங்கள் அமைவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.


சிறுவாணி குடிநீர் திட்டம்

அவர் காலத்தில் தான் சிறுவாணி குடிநீர் திட்டம், பைக்காரா நீர் மின்சார திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன. மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. பாலங்கள், பள்ளிக் கூடங்கள் உள்பட அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.
கோவையின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட தொழில் அதிபர்களான ஜி.குப்புசாமி நாயுடு, பி.எஸ்.ஜி. சகோதரர்கள், பொள்ளாச்சி மகாலிங்கம், வி.ரங்கசாமி நாயுடு, பி.ஏ.ராஜு செட்டியார், வின்சென்ட், பி.ரங்கசாமி நாயுடு, ஜி.டி.நாயுடு, வி.எஸ்.செங்கோட்டையா, ஆர்.கே.எஸ். சகோதரர்கள், கோபால் நாயுடு உள்பட ஏராளமான தொழில் முனைவோர்கள் அனைத்து துறையிலான தொழில்களையும் தொடங்கி கோவையை தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் முக்கிய வர்த்தக மையமாக்கினார்கள் என்றால் மிகையாகாது.

வர்த்தக மையம்

ஆர்.கே.சண்முகம் செடடியார் தான் முதல் முதலாக கோவையில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபையை உருவாக்கினார். அவர் தான் பின்னாளில் இந்தியாவின் முதல் நிதி மந்தியாகவும் ஆனார். கோவையின் முதல் எம்.பி.யான டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் தான் இந்தியாவில் முதல் முதலாக கூட்டுறவு அமைப்பை உருவாக்கினார்.

சுதந்திரத்திற்கு பின்னர் டெக்ஸ்டூல் பாலசுந்தரம், ஜி.கே. தேவராஜுலு, ஆர்.வெங்கடசாமி நாயுடு, ஜி,கே.சுந்தரம், பி.ஆர்.ராமகிருஷ்ணன், எல்.ஜி. குடும்பத்தினர், சக்தி குரூப் உள்பட பலர் தொழில் அதிபர்கள் கோவையை ஒரு வர்த்தக மையமாக உலகிற்கு எடுத்துக் காட்டினார்கள். கோவையின் மற்றொரு முக்கிய அம்சம் சிறந்த கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும் ஆகும்.
கோவை மாவட்ட தலைநகரமாக உருவாகி இன்றுடன் 208 ஆண்டுகள் ஆவதால் கோவை தினத்தை கோவை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.