Thursday, November 8, 2012

மன அழுத்தம் - எப்படி தவிர்ப்பது ?லைவாணி எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவாள். அவள் அழுகையை அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவும் முடியாது. அதோடு, எப்போதும்  அது இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று யோசித்துக் யோசித்து குழம்பிக் கொண்டே இருப்பாள். இதனால் அவளுக்கு அடிக்கடி தீராத தலைவலி வந்து சேரும். தலைவலிக்கு வைத்தியம் பார்க்க போனபோது தான் தெரிந்தது அவளுக்கு இருப்பது மன அழுத்தம் என்று. இதைக் கேட்டு அவளின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காரணம் அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் எப்படி மன அழுத்தம் வரும் என குழம்பிப் போனார்கள். கலைவாணி மட்டுமல்ல, இது போன்ற பலரும் இந்த மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள்.


இந்த மன அழுத்தம் யாருக்கு வரும், எதனால் வரும், அதை எப்படி தீர்ப்பது என்று சொல்லுகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா.

மனம்தான் நம்முடைய அத்தனை செயல்களுக்கும் அடிப்படை. மனதை நன்றாக வைத்திருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். மனதை சுத்தமாகவும், நிம்மதியாகவும் வைத்திருந்திருக்க யோகா, தியானம் என்று பல வழிகளைக் கையாள்கிறோம்.

மன அழுத்தம் என்பது வியாதி இல்லை என்பதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அது ஒருவிதமான மன சிக்கல் அவ்வளவுதான். ஆனால் மன அழுத்தம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் எதனால் வருகிறது ?

வாழ்க்கையில் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை என்றால் மன அழுத்தம் வரும். குழந்தை பெற்ற பெண்ணுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடும்பங்கள்தான். குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வது என்பது பலருக்கு தெரிவதில்லை. இரவில் கண்விழிக்க வேண்டி இருக்கும். சரியாக சாப்பிட முடியாது. இதையெல்லாம சமாளிப்பதற்கு பெண்களுக்கு எந்தவிதமான மனப்பயிற்சியும் தருவதில்லை. சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்த பிரச்னை வரும். பழக்க வழக்கம் குறித்த பிரச்னைகள், தாழ்வு மனப்பான்மை, எதாவது மிக பெரிய இழப்பு, நீண்ட நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டவர்கள், தவறான மருந்து எடுத்துக் கொண்டவர்கள், குடி - புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மன அழுத்தத்தின் அறிகுறி

பசி, தூக்கம் எதுவும் இருக்காது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை என்பது துளியும் இல்லாமல் இருப்பார்கள். எப்போதும் ஒருவிதமான விரக்தி, எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும். மற்றவர்களிடத்தில் சகஜமாக பேசாமல் விலகி இருப்பார்கள். நான் எதற்காக வாழ வேண்டும் என்ற மனநிலையில், தற்கொலை குறித்து யோசித்துக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு அதிகமான பசியும், தூக்கம் இருக்கும்.

தன்னை யாரும் கவனிப்பதில்லை, என்னுடைய பிரச்னைகளை யாரும் காது கொடுத்து கேட்பது  இல்லை என்று அவர்களே நினைத்துக் கொண்டு, சுவற்றில் தலை மோதிக்கொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என அடிக்கடி முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எப்படி தவிர்ப்பது?

பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு மனநிலையில் இருந்தாலே போதும் மன அழுத்தம் குறைந்து, படிப்படியாக குணமாகிவிடும். தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம். நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யலாம். செடி வளர்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, புத்தகங்கள் படிப்பது, இசையை ரசிப்பது போன்ற விஷயங்களை செய்யலாம்.

எதிர்காலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்களுடன் பழகுவது மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.  பக்தியும் இந்த விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் 'கடவுள்' என்பது பலரது நம்பிக்கைச் சின்னம். எனவே பக்தி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி, நீங்கள் சம்பந்தப்பட்டவரிடம் வாய்விட்டு பேசினாலே போதும், பல பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

நம்முடைய பழக்கவழக்கங்களை சீராக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த வழி. அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, சத்தான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள்  வைத்திருந்தால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வாழ்க்கையை நேசியுங்கள்.. மனது தெளிவாகும்.. வாழ்க்கை வளமாகும்.!


- இரா.ரூபாவதி
Youthful Vikatan