Tuesday, November 6, 2012

தீபாவளி திருநாள் ஸ்வீட் - காரம்’ ரெசிபிகள்

ஸ்வீட் ஸ்டால்களைப் பார்க்கும்போது, 'எப்படித்தான் இவ்வளவையும் செய்து குவிக்கிறார்களோ?!' என்று நம்மில் பலர் மலைத்திருப்போம். ''இதெல்லாம் ஒண்ணும் பிரம்ம வித்தை இல்லை... நிறைய ஆர்வமும், கொஞ்சம் கவனமும் இருந்தால் போதும்... வீட்டிலேயே செய்து அசத்தலாம்'' என்று கூறி, '30 வகை ஸ்வீட் - காரம்' ரெசிபிகளை வழங்குகிறார், சமையல் சாம்ராஜ்ஜியத்தில் நீண்ட காலமாக வெற்றிக் கொடி நாட்டி வரும் 'மெனு ராணி' செல்லம்.  

''தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்''

தூத் பேடா

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பாலைக் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவும். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான வடிவத்தில் ஷேப் செய்து வெட்டி பரிமாறவும்.

காசி அல்வா

தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கப், துருவிய வெள்ளைப் பூசணிக்காய் - 2 கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப், பொடித்த ஏலக்காய் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, முந்திரி பருப்பு, ஃபுட் கலர் - சிறிதளவு.

செய்முறை: துருவிய வெள்ளைப் பூசணிக்காயை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். சர்க்கரை, பூசணிக்காய், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பின்னர் சர்க்கரை சேர்க்காத கோவா சேர்த்துக் கிளறி ஃபுட் கலர் சேர்க்கவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து நெய்யுடன் இதில் சேர்த்து, குங்குமப்பூவையும் சேர்த்துக் கிளறி சுடச்சுடப் பரிமாறவும்.

மேதி கரேலா

தேவையானவை: மைதா - 2 கப், அரைத்த வெந்தயக் கீரை சாறு - அரை கப், உப்பு - தேவையான அளவு, ஓமம் - 2 டீஸ்பூன், நெய் அல்லது டால்டா - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து, மாவை 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, சிறுசிறு சதுரங்களாக இட்டு, துண்டுகளின் நடுவில் கத்தியால் பல முறை கீறவும். இரண்டு முனைகளையும் பிடித்துச் சுழற்றி, பின் ஒரங்களை ஒட்டிவிடவும். இப்போது கரேலா (பாகற்காய்) வடிவம் கிடைக்கும். இவற்றை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 அதிரசம்

தேவையானவை: ஈர பச்சரிசி மாவு - 4 கப் (பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, துணியில் போட்டு, நிழலில் உலர வைத்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும்), துருவிய வெல்லம் - 4 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்துடன் 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். பிறகு, கீழே இறக்கி, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும் (அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது). இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைக்கவும். பிறகு, வாழை இலையில் வட்டமாக தட்டி, எண்ணெயில் அதிரசமாக பொரித்து எடுக்கவும். இந்த அதிரசம் ஒரு மாதம் வரை கெடாது.

காஜு கத்லி

தேவையானவை: முந்திரி பருப்பு, சர்க்கரை - தலா 100 கிராம், பால் (அழுக்கை நீக்க), நெய் (தட்டில் தடவ) - சிறிதளவு.

செய்முறை: முந்திரி பருப்பைப் பொடி செய்யவும். ஒரு பங்கு சர்க்கரைக்கு அரை பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாகில் சிறிதளவு பால்விட்டு, அழுக்கை வடிகட்டிக் கொள்ளவும். பாகு கம்பிப்பதம் வந்தவுடன் பொடித்த முந்திரி பருப்பை போட்டுக் கிளறவும். கொப்புளித்து (பப்பிள்ஸ்) வரும் வேளையில் உடனடியாக நெய் தடவிய தட்டில் கொட்டவும். சமமாகப் பரத்தி, மேலே ஜரிகைப் பேப்பரை பரத்தி, நன்றாக ஆறியவுடன், 'கட்' செய்து பரிமாறவும் (ஜரிகை பேப்பர் கட்டாயமில்லை... விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம்).

 மசாலா கரேலா

தேவையானவை: மைதா மாவு - அரை கிலோ, வனஸ்பதி - 50 கிராம் (சூடாக்கிக் கொள்ளவும்), ஓமம் - 2 டீஸ்பூன்,  சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எள் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் உப்பு, ஓமம், எள், சமையல் சோடா கலந்து, வனஸ்பதி சேர்த்துப் பிசையவும். மாவை சிறிய நீள் சதுரங்களாக தேய்க்கவும். ஒவ்வொரு துண்டின் நடுவிலும் கத்தியால் பலமுறை கீறிவிடவும்.

பிறகு, அந்த துண்டுகளின் இருமுனைகளைப் பிடித்து சுழற்றி,  ஓரங்களை ஒட்டிவிடவும். இப்போது பாகற்காய் வடிவத்தில் கிடைக்கும் 'கரேலா'க்களை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 ராஜ் போக்

தேவையானவை: பசும்பால் - ஒரு லிட்டர், பே வாட்டர் - ஒரு கப், சர்க்கரை - 4 கப்,  பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா கலவை  - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: பாலைக் கொதிக்க வைத்து, பொங்கி வரும்போது பே வாட்டரை அதில் விடவும். பின் பால் திரிந்த பின் அதை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டித் தொங்கவிடவும். இதுதான் பனீர். இந்தப் பனீரைத் துணியிலிருந்து எடுத்து, ஒரு தட்டின் மேல் கொட்டி கையால் அழுத்திப் பிசையவும். இத்துடன் குங்குமப்பூ சேர்க்கவும். இதை உருண்டைகளாக்கி, பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை உள்ளே வைக்கவும்.

4 கப் தண்ணீர், 2 கப் சர்க்கரையை கலந்து கொதிக்க வைத்து, கொதிக்கும் நிலையிலேயே தயாராக வைத்துள்ள ராஜ் போக் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு அமிழ்த்தி இறக்கி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இரு மடங்கு பெரியதாக உப்பி வந்ததும்... மீதமுள்ள  சர்க்கரையில் தேவையான தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைக்கவும். சில மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும். விருப்பப் பட்டால் மேலே ஜரிகைத் தாள், கலர் முதலியவை போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: பொதுவாக பெங்காலி ஸ்வீட்ஸ் செய்ய பசும்பாலும் பே வாட்டரும் தேவை. பாலைக் காய்ச்சும்போது, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து பாலைத் திரித்த பின், வடிகட்டி எடுக்கும் தண்ணீர்தான் பே வாட்டர். இதைச் சில நாட்கள் பாட்டிலில் வைத்து வைத்துப் புளிக்க வைத்துக் கொண்டால், எல்லா பெங்காலி ஸ்வீட்ஸ் செய்யவும் பயன்படுத்தலாம்.

 குலாப் ஜாமூன்

தேவையானவை : சர்க்கரை சேர்க்காத கோவா - 300 கிராம், மைதா - 100 கிராம், பால் - சிறிதளவு (அழுக்கு நீக்க), சர்க்கரை - அரை கிலோ, தண்ணீர் - 300 மில்லி (ஒரு பெரிய டம்ளர்), எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கோவாயையும், மைதாவையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். பிசுக்கு பதம் வந்ததும், சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி, வடிகட்டி தனியே வைத்துக் கொள்ளவும். கோவா - மைதா கலவையைப் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). பின் சர்க்கரை பாகில் போட்டு, சில மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும்.

 பாக்கர் வாடி

தேவையானவை: கடலை மாவு - 4 கப், சோள மாவு - 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு எள் - அரை டீஸ்பூன், கெட்டியான புளித் தண்ணீர் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

பூரணம் தயாரிக்க: வெள்ளை எள் - 2 டீஸ்பூன், துருவிய கொப்பரை தேங்காய் - அரை கப், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப், மராட்டி மசாலா (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், ஆம்சூர் பொடி - 2 டீஸ்பூன், கரம் மசாலா - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், கறுப்பு எள் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி... கசகசா, வெள்ளை எள், கொப்பரை முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். நறுக்கி, அலசி, காய வைத்த கொத்தமல்லி, பச்சை மிளகாய், சர்க்கரை, உப்பு, அம்சூர் பொடி, மசாலா பொடிகளுடன் வறுத்தவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து பூரணமாக வைத்துக் கொள்ளவும்.

மாவை சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்க்கவும் (மிகவும் கனமாகத் தேய்த்தால் கல்போல் ஆகிவிடும்). அதில் சிறிதளவு புளித் தண்ணீர் தடவி, பூரணத்தைச் சமமாகப் பரத்தி, சுருட்டவும். சுருட்டிய சுருளை கத்தி கொண்டு கால் இன்ச் அகல துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

அஞ்சீர் கப்ஸ்

தேவையானவை: பொடியாக நறுக்கிய அத்திப்பழம் - 2 கப், பொடித்த முந்திரி - 100 கிராம், சர்க்கரை - 100 கிராம், லிக்விட் குளூக்கோஸ் - அரை டீஸ்பூன், பாதாம், திராட்சை - தேவையான அளவு.

செய்முறை: அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி, வெந்நீரில் போட்டு எடுத்து மசிக்கவும். இப்போது சர்க்கரை எவ்வளவு இருக்கிறதோ அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சவும். இதனுடன் பொடித்த முந்திரியை சேர்த்துக் கிளறவும். லிக்விட் குளூக்கோஸை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து, அதனையும் சேர்த்துக் கிளறவும். தோசை மாவு பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி வைத்து, ஒரு தட்டில் கொட்டிக் கிளறினால் சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்துவிடும். ஆறியவுடன் சிறுசிறு கிண்ணம் வடிவத்தில் இந்த முந்திரி கலவையை ஷேப் செய்து...  மசித்த அத்திப்பழம், பாதாம், திராட்சை கொண்டு நிரப்பிப் பரிமாறவும்.

காஜு ஃப்ளவர்

தேவையானவை: முந்திரி - 100 கிராம் (பொடிக்கவும்), சர்க்கரை - 100 கிராம், லிக்விட் குளூக்கோஸ் - அரை டீஸ்பூன், கலர் வகைகள் - சிறிதளவு, தண்ணீர் - 50 மில்லி, பால் - சிறிதளவு (அழுக்கு நீக்க).

செய்முறை: சர்க்கரையும் தண்ணீரையும் சேர்த்துக் கலந்து கொதிக்க வைத்து... சிறிது பால்விட்டு, அழுக்கை வடிகட்டி, பின் மீண்டும் கடாயில் விடவும். மெல்லிய கம்பிப்பதம் வந்தபின், பொடித்த முந்திரியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கைவிடாமல் கிளறவும். பின்னர் லிக்விட் குளூக்கோஸை சிறிதளவு தண்ணீரில் கரைத்து இதனுடன் கலக்கிக் கிளறவும். தோசை மாவு பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆறவிடவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு சுருண்டு வந்தவுடன் சிறுசிறு பகுதிகளாக பிரித்து சிலவற்றில் பச்சை, சிவப்பு கலரைச் சேர்த்து பூக்களாக வடிவமைக்கவும் (வெள்ளை உருண்டைகளை கிண்ணம் போல செய்து... பச்சை அல்லது சிவப்பு உருண்டைகளை  அதன் உள்ளே வைத்து கத்திரிக்கோல் கொண்டு வெட்டினால் பூ வடிவம் கிடைக்கும்). ஜரிகை பேப்பர் கொண்டு அலங்கரிக்கவும்.

முள்ளு முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், எள் - 2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (எண்ணெய் தவிர) சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை முறுக்கு அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மூங்க்தால் சீரா

தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - அரை கப், கேசரி கலர் - சிறிதளவு, பொடித்த ஏலக்காய் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திரி, பாதாம் - சிறிதளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, அதனை 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வாசனை வந்து,  பிரவுன் நிறமாக ஆனபின் அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை உருகிய பின், மீதமுள்ள நெய்யை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். உருண்டு பந்து போல் வரும்போது பொடித்த ஏலக்காய், கேசரி கலர் சேர்த்து, கடைசியில் கோவாவையும் சேர்த்துக் கிளறி கீழே இறக்கி... முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.

பூந்தி லட்டு

தேவையானவை: கடலை மாவு - 2 கப், வனஸ்பதி - 2 டீஸ்பூன், சர்க்கரை - 3 கப், தண்ணீர் - ஒன்றரை கப், பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஃபுட் கலர் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து பாகு காய்ச்சவும். கடலை மாவு, வனஸ்பதியை சேர்த்துப் பிசைந்து, ஃபுட் கலர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத் துக் கொள்ளவும். பின் ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, நேராக சூடான எண்ணெயின் மேல் கரண்டியை  வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் முத்து முத்தாக விழும். இதை பொன்னிற மாகப் பொரித்து, உடனேயே சர்க்கரைப் பாகில் போட்டு... பாகிலிருந்து பூந்திகளை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து லட்டு பிடிக்கவும்.

 சந்திரகலா

தேவையானவை - மேல் மாவு செய்ய: மைதா - கால் கிலோ, உப்பு - ஒரு சிட்டிகை, நெய் அல்லது வனஸ்பதி - 2 டேபிள்ஸ்பூன்.

பூரணம் செய்ய: பால் கோவா, சர்க்கரை - தலா அரை கப், பொடித்த ஏலக்காய் - 2 டீஸ்பூன், பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்.

பாகு தயாரிக்க: சர்க்கரை - 2 கப், தண்ணீர் - 1 கப்.

செய்முறை: மேல் மாவு செய்ய கொடுக்கப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அழுத்திப் பிசைந்து கொள்ளவும். பூரணம் செய்ய தரப்பட்டுள்ள பொருட்களை கலந்து கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் கலந்து கொதிக்கவிட்டு பிசுக்குப் பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். பிசைந்த மாவை சிறுசிறு வட்டங்களாக இட்டு... தயாராக வைத்துள்ள பூரணத்தை உள்ளே வைத்து மடித்து ஓரத்தை ஒட்டி, பிறகு ஓரத்தை சிறிது வடிவமைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... சூடான சர்க்கரைப் பாகில் நனைத்து எடுத்து பரிமாறவும்.

 பாதுஷா

தேவையானவை:  மைதா - 3 கப், வனஸ்பதி - ஒரு    கப், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன். சர்க்கரை -  2 கப், தண்ணீர் - ஒரு கப், எண் ணெய்-பொரிக்க தேவை யான அளவு, பாதாம், முந்திரி, குங்குமப்பூ - சிறி தளவு.

செய்முறை: சர்க்கரையும் தண்ணீரும் கலந்து கொதிக்கவிட்டு, சிறிது பால் சேர்த்து அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதம் வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் மைதாவைக் கொட்டி, கெட்டியான வனஸ்பதியை விரல் நுனியால் உதிரியாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்கத் தேய்த்து... மைதாவுடன் கலந்து பிசையவும் கூடுமானவரை தண்ணீரே சேர்க்க வேண்டாம். சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, உள்ளங்கையில் வைத்து அழுத்தி வட்டமாக ஷேப் செய்யவும் கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சர்க்கரைப் பாகில் (சூடாக இருக்க வேண்டும்) அமிழ்த்தி எடுக்கவும். இதில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ கொண்டு அலங்கரிக்கவும்.

பாதாம் சிரோட்டி

தேவையானவை: மைதா - 300 கிராம், பாதாம் - 100 கிராம், சர்க்கரை - 4 கப், தண்ணீர் - 2 கப், நெய் - கால் கப், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, முந்திரி, பாதாம் - சிறிதளவு.

செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும் இந்த விழுதை மைதாவுடன் கலந்து பிசைந்து கொள்ளவும். நெய், அரிசி மாவு இரண்டையும் நுரைக்க கலந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீரையும் சர்க்கரையையும் கலந்து பிசுக்குப் பதத்தில் பாகு ரெடி செய்து கொள்ளவும்.

பிசைந்த மைதா மாவை சிறுசிறு வட்டங்களாக இடவும். ரெடியாக உள்ள நெய் - அரிசி மாவு கலவையை அதன் மேல் தடவவும். இன்னொரு வட்டத்தை அதன் மேலே வைக்கவும். இவ்வாறு ஒன்றின் மேல் ஒன்றாக (5 அல்லது 6) வைத்துச் சுருட்டவும். பின்னர் துண்டுகளாக வெட்டி, உள்ளங்கையால் சிறிது அழுத்தி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். உடனே சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைத்து... ஊறிய பின் வெளியே எடுத்து பாதாம், முந்திரி அலங்கரித்து பரிமாறவும்.

தில் பஹார்

தேவையானவை: பசும்பால் - 2 லிட்டர், பே வாட்டர் - 2 கப், சர்க்கரை - ஒரு கிலோ, தண்ணீர் - 8 டம்ளர், பாதாம், முந்திரி, செர்ரி - சிறிதளவு.

சாஸ் செய்ய: கோவா, சர்க்கரை - சம அளவு.

செய்முறை: பாலைக் கொதிக்க வைத்து, பே வாட்டர் சேர்த்து பாலை திரித்து, ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்து அழுத்திப் பிசைந்து பனீர் தயாரித்து தனியே வைத்துக் கொள்ளவும். அரை கிலோ சர்க்கரை, 4 டம்ளர் தண்ணீரைக் கலந்து கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்தவுடன் பனீரை இதய வடிவில் ஷேப் செய்து சர்க்கரைப் பாகில் ஒவ்வொன்றாகப் போட்டு இறக்கி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இரு மடங்கு பெரியதாக மாறியதும்... மீதமுள்ள சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு தயாரித்து, இதய வடிவ பனீரை மீண்டும் சர்க்கரைப் பாகில் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். இதுதான் தில் பஹார்.

பிறகு, சர்க்கரையையும் கோவாவையும் சம அளவில் கலந்து அடுப்பில் 2 நிமிடம் வைத்து, ஆற விடவும். தில்பஹாரை சர்க்கரைப் பாகிலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து, ரெடியாக உள்ள கோவா சாஸை அதன் மீது பரத்தவும். பாதாம், முந்திரி, செர்ரி கொண்டு அலங்கரிக்கவும்.

மட்ரி

தேவையானவை: மைதா - 3 கப், எள் - 2 டீஸ்பூன், சீரகம் அல்லது ஓமம் - 2 டீஸ்பூன், நெய் அல்லது வனஸ்பதி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.  

செய்முறை: மைதா, உப்பு, எள், சீரகம் அல்லது ஒமம் ஆகியவற்றை சேர்த்து ஒரு தட்டில் கொட்டி, நடுவில் குவித்துக்கொண்டு, சூடாக்கிய நெய் அல்லது வனஸ்பதியைக் கொட்டி, விரல் நுனியால் அழுத்திப் பிசைந்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்து, சின்னச் சின்ன வட்டங்களாகத் தட்டவும். அவற்றை எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

தேன்குழல்

தேவையானவை: அரிசி - 3 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, சீரகம் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து... அரிசி சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, சீரகம், வெண்ணெய் கலந்து, தண்ணீர் தெளித்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, பொரித்தெடுக்கவும்.

காலா ஜாமூன்

தேவையானவை: மைதா, பனீர், சர்க்கரை சேர்க்காத கோவா - தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சவும். மைதா, பனீர் கோவா இவை அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து... பின்னர் சர்க்கரைப் பாகில் நனைத்து பரிமாறவும்.

 ஜாங்கிரி

தேவையானவை: ஜாங்கிரி உளுத்தம்பருப்பு -  - ஒரு கப்  (ஜாங்கிரி செய்வதற்காக தனி உளுத்தம்பருப்பு கடைகளில் கிடைக்கும். ஜாங்கிரி உளுத்தம்பருப்பு கிடைக்கவிட்டால், சாதரண உளுத்தம்பருப்பிலும் செய்யலாம்),  சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப், ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை, ஜாங்கிரி பிழியும் காடா துணி (காடா துணியில் ஒரு துளை போட்டு, அந்தத் துளையைச் சுற்றி, பட்டன் ஹோல்ஸ் தையல் போட்டு வைக்க வேண்டும்),  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை நீண்ட நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஆரஞ்சு கலரைச் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரையை பிசுக்குப் பதத்தில் பாகு செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், 'ரிட்'டில் (ஜாங்கிரி பிழியும் துணி) மாவை வைத்து, நுனியை மடித்து மூட்டை போல் பிடித்துக் கொண்டு, ஜாங்கிரி வடிவில் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். உடனேயே பக்கத்தில் ரெடியாக உள்ள சூடான சர்க்கரைப் பாகில் போடவும்.

மோகன் தால்

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், சர்க்கரை சேர்க்காத கோவா - ஒரு கப், நெய் - ஒன்றரை கப், ஜரிகை பேப்பர், முந்திரி, பாதாம், குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: கடலை மாவை நெய்யில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த கடலை மாவுடன் கோவாவைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சர்க்கரையின் அளவில், பாதி அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பிப் பதம் வரும்வரை கொதிக்கவிடவும். இப்போது கோவா - கடலை மாவு கலவையைச் சிறிது சிறிதாக கொதிக்கும் சர்க்கரையில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். சுருள வரும்போது நெய் விட்டுக் கிளறி... நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே ஜரிகை பேப்பர், முந்திரி, பாதாம், குங்குமப்பூ தூவி அலங்கரித்து, செட்டான பின் வெட்டி பரிமாறவும்.

 கார்ன் மிக்ஸர்

தேவையானவை: தட்டை கார்ன் - 4 கப் (மக்காச்சோளம் தட்டையாக, மிக்ஸர் செய்வதற்காகக் கடைகளில் கிடைக்கும். இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்)  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 2 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், வறுத்த முந்திரி - கால் கப், வறுத்த திராட்சை - கால் கப், உப்பு - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வறுத்த கறுவேப்பிலை - கால் கப்,

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு தாம்பளத்தில் கொட்டிக் கலந்து, டப்பாவில் போட்டு குலுக்கி வைக்கவும்.

மலாய் சாண்ட்விச்

தேவையானவை:  பசும்பால் - 2 லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, பே வாட்டர் - 2 கப், சர்க்கரை சேர்க்காத கோவா, பாதாம், முந்திரி, திராட்சை  - தேவையான அளவு.

செய்முறை: பாலைக் கொதிக்க வைத்து, பே வாட்டர் சேர்த்து பாலை திரித்து, ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, பனீர் தயாரிக்கவும். இதை நீள வடிவத்தில் ஷேப் செய்யவும். சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு வைக்கவும். நீளவாக்கில் ஷேப் செய்த பனீரை இந்தப் பாகில் போட்டு ஊற வைக்கவும். பரிமாறும் முன் வெளியே எடுத்து கத்தியால் ஸ்லைஸ் செய்து அதன் உள்ளே  முந்திரி, திராட்சை, கோவா ஆகியவற்றைக் கலந்து சாண்ட்விச் செய்யவும். கலர் கலராகக் கூட சாண்ட்விச் செய்யலாம்.

சாக்லேட் பர்ஃபி

தேவையானவை: மைதா - ஒரு கப், கோவா - 2 கப், கோகா -  7  டீஸ்பூன், சர்க்கரை - 4 கப், நெய் (தட்டில் தடவ) - சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, கோகோ எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவற்றை கலந்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தவும். பின் கோகோ, கோவா, சர்க்கரை கலவையும் கிளறி இதன் மேல் கொட்டி பரத்தவும். ஆறிய பின் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

பாதாம் அல்வா

தேவையானவை: பாதாம் - 200 கிராம், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப், பொடித்த ஏலக்காய், முந்திரி, குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறவும். இப்போது குங்குமப்பூ, பொடித்த ஏலக்காய், நெய் சேர்த்து சுருளக் கிளறி கீழே இறக்கி வைத்து, முந்திரிப் பருப்பு தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

புதினா ஓமப்பொடி

தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, புதினா சாறு - அரை கப், பச்சை கலர் - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், நெய் (அ) வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் (எண்ணெயைத் தவிர) அனைத்தையும் சேர்த்துக் கலந்து ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்தெடுக்கவும்.

உக்காரை

தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், பயத்தம்பருப்பு - ஒரு கப்,  வெல்லம் - 2 கப், தண்ணீர் - ஒரு கப், நெய் - ஒரு கப், ஏலக்காய், முந்திரி - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைய விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு அரைத்த பருப்பை சேர்த்து கைவிடாமல் கிளறி, நன்றாக வெந்தவுடன் வெல்லப்பாகை சேர்த்துக் கிளறி... ஏலக்காய், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

 லேகியம்

தேவையானவை: தனியா - 4 கப், இஞ்சி - 200 கிராம், ஓமம் - 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி - தலா 10 கிராம், வெல்லம் - 100 கிராம் (துருவிக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - 5 கிராம் (விருப்பப்பட்டால்), நெய் - கால் கப்.

செய்முறை: தனியாவை ஊற வைத்து அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். இஞ்சியை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். சுக்கு, மிளகு, திப்பிலியை பொடித்துக் கொள்ளவும். வடிகட்டிய தனியா சாறு, இஞ்சிச் சாறு, சுக்கு - மிளகு - திப்பிலி பொடி, ஓமம், பொடித்த ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து, வெல்லத்துடன் கலக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி, பின்னர் நெய் சேர்த்து, சுருள வந்தவுடன் கீழே இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்



(Source: Aval Vikatan)