Wednesday, November 21, 2012

நீதிமன்றத்திலே விவாகரத்து - சற்றே யோசித்தால்....


தீர்மானங்களோடும் அநேக எதிர்பார்ப்புகளோடும் கனம் நீதிபதி அம்மையார் வழங்கும் விவாகரத்து பெற நின்றுகொண்டிருந்தேன்

நீ உனக்கு விருப்பமானவரை மூன்றாண்டுகளுக்கு முன் பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்துகொண்டாய்

உன் மணவாழ்வில் உன் மாமனாரும் மாமியாரும் புகுந்தார்கள் ஆரம்பமானது ரகளை....!

உன் கணவன் யாருக்கு பரிந்து பேசுவது என்றறியாமல் திகைத்தான்....

கணவன் உனக்காக பேசவில்லையே என்று நீ உன் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றாய்....

உன் தகப்பனும் உன் தாயும் உன்னையும் உன் பிள்ளைகளையும் அன்புடன் ஏற்றுக்கொண்டனர்....

நாட்கள் நகர்ந்தது....


உறவினர்களும் பெற்றோர்களும் சகோதரர்களும் விவாகரத்து செய்துவிடும்படி ஆலோசனை கொடுத்தனர்....

உனக்கும் அதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது. ஆனால் முடிவெடுக்க மனமில்லை....இதுதானே உன் கதை...?

இனி நான் பேசுகிறேன்.தொடர்ந்தார் ஜட்ஜ் அம்மா... 


ஒரு நிமிடம் உன் பெறோரையும் உன் கணவரின் பெறோரையும் மறந்துவிட்டு உனக்கும் உன் கணவனுக்கும் உள்ள உறவை மாத்திரம் நினைத்துப்பார்..

அவனுக்கு உன்மீது அன்பே இல்லை என்று உன்னால் உறுதியாய் சொல்லமுடியுமா?

அதுபோல உனக்கும் அவன் மீது அன்பில்லையென்று நிச்சயமாக சொல்ல முடியுமா?

வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று உன்னை சுற்றியுள்ளவர்கள் சொல்வது சுலபம். அதன்படி செய்வது மிகக் கடினம்...

கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைக் கைக்குட்டையால் ஒற்றிய படி நீதிபதி அம்மையார் பேச்சை தொடர ஆரம்பித்தார்கள்..

நானும் உன்னைப் போலவே ஒருநாள் திருமணம் செய்தவள் தான்.... சிலவருடங்களில் என் கணவர் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பதை அறிந்தேன்....

கோபத்துடன் என் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு என் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன்....

அன்று வந்தவள்தான்.... இன்று நான் பதவி ஓய்வு பெறும் வயது....என் பெற்றோரும் மறைந்துவிட்டனர்....என் பிள்ளைகளும் மணமுடித்துக்கொண்டனர்

ஆனால் கடந்த வாழ்வில் நான் பட்ட வேதனையை யார் அறிவார்...?

நான் சிந்திய கண்ணீர் எவ்வளவு....!

அடைந்த பாடுகள் எத்தனை....

"வாழாவெட்டி" என்று பழி சொன்னவர்கள் ஏராளம்...

எனக்காக பரிந்து பேசினவர்கள் சிலர் மட்டுமே..

என் பிள்ளைகள் கூட தகப்பன் இல்லாததால் பட்ட நிந்தைகள் பல....

அவர்களைக் காரணமின்றி இம்சைப் படுத்தின உறவினர்கள்கூட உண்டு

உன் பெற்றோர் எத்தனை வருடம் உயிரோடு இருப்பார்கள்...?

உன் கூடபிறந்தவர்கள் எத்தனை வருடம் உன்னை ஆதரிப்பார்கள்...?

அவர்களுக்குத் தனித்தனி குடும்பங்கள் உண்டே...!ஆகவே அவசரப்படாதே..! 


ஒருவேளை நானும் என் கணவரைவிட்டு வராமலிருந்திருந்தால் அவரை நான் என் அன்பினால் திருத்தியிருந்திருப்பேன்....

என் பொறுமையைக் கண்டு அவரும் மனந்திரும்பியிருப்பார்..

என் கதி உனக்கும் வரக்கூடாது என்றுதான் இவ்வளவு உன்னிடம் சொல்கிறேன்... இனி உன் இஷ்டம்... உன் வாழ்க்கைக்கு நீதான் நீதிபதி நானல்ல...

தாயின் உள்ளத்தோடு பேசிவிட்டு திரும்பிப் பார்த்தார்கள்...

என் மாமனார், மாமியாருடன் வாழ்வதற்கு உறுதியான தீர்மானத்துடன் வெளிச்சத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்

வாழ்க்கை இனி என் கையில்.... இருட்டில் இருப்பவனுக்குத்தானே நியாயாதிபதி வேண்டும்.

நான் இனி வெளிச்சத்தின் பிள்ளை.. என் செல்ல ஜட்ஜ் அம்மாவுக்கு நன்றி.