Monday, November 9, 2015

உனக்கே புரியும், நான் சொன்னது சரிதான்னு

உங்களுக்குப் புரிஞ்சுதா?

ரு ஊர்ல அர்ச்சகர் ஒருத்தர், உபன்யாசகர் ஒருத்தர், செருப்பு தைக்கிற தொழிலாளி ஒருத்தர்னு மூணு பேர் இருந்தாங்க.

அர்ச்சகர் காலையிலும் மாலையிலும் கோயிலே கதின்னு கிடப்பார். மத்த நேரங்கள்லயும் சிவ நாமாவை மனசுக்குள்ள உச்சரிச்சுக்கிட்டே இருப்பார். உபன்யாசகருக்கு, ஊர் ஊராகச் சென்று சுவாமியின் மகிமைகளை மக்கள்கிட்டே பாடலாகவும், கதையாகவும் விளக்கிச் சொல்றதுதான் வேலையே! செருப்பு தைக்கிற தொழிலாளிக்குத் தன் தொழிலிலும் குடும்பத்தைக் கவனிப்பதிலுமே நேரம் சென்றது. எப்போதாவது பகவானை நினைப்பதோடு சரி.

ஒரு தடவை, பூமியில நாரதர் உலா வந்தபோது, இவங்க இருந்த ஊருக்கும் விஸிட் அடிச்சார். அப்ப இவங்க மூணு பேரும் சொல்லி வெச்ச மாதிரி அவர்கிட்டே ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டாங்கஞ் 'எனக்கு எப்போ மோட்சம் கிடைக்கும்?'

'பகவான் நாராயணனைப் பார்த்து, அவர்கிட்டேயே உங்க கேள்வியைக் கேட்டு பதில் வாங்கிட்டு வரேன்'னுட்டு கிளம்பிப் போயிட்டார் நாரதர். அதேபோல, மகாவிஷ்ணுவைப் பார்த்துக் கேட்கவும் செஞ்சார். பகவான் சொன்ன பதில் நாரதருக்கு ஆச்சரியமா இருந்துது. 'செருப்பு தைக்கிற தொழிலாளிக்குதான் முதல்ல மோட்சம் கிடைக்கும்'னு சொன்னார் திருமால்.

'என்ன இப்படிச் சொல்றீங்க சுவாமி? செருப்புத் தைக்கிற தொழிலாளி உங்களை எப்பவாவது ஒரு தடவைதான் வணங்கறான். மத்த ரெண்டு பேரும் பகவானின் கைங்கர்யத்தையே நாளும் பொழுதும் பண்ணிட்டிருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தானே முதல்ல மோட்சம் கிடைக்கணும்?'னு கேட்டார் நாரதர்.

மகாவிஷ்ணு புன்னகைச்சார். 'நீ மறுபடியும் அந்த ஊருக்குப் போ. வைகுண்டத்திலே பகவான் என்ன பண்ணிட்டிருக்கார்னு கேப்பாங்க. ஊசியின் காதுக்குள்ளே ஒட்டகங்களை நுழைச்சு நுழைச்சு எடுத்துட்டிருக்கார்னு சொல்லு. அதுக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னு பாரு. உனக்கே புரியும், நான் சொன்னது சரிதான்னு!' அப்படின்னார்.

நாரதர் மறுபடியும் பூமிக்கு வந்து, அந்த ஊருக்குப் போனார். மகாவிஷ்ணு சொன்ன மாதிரியே, 'என்ன சுவாமி, பகவான்கிட்டே நான் எப்போ மோட்சத்துக்குப் போவேன்னு கேட்டீங்களா? நீங்க போனப்போ சுவாமி என்ன பண்ணிட்டிருந்தார்?'னு ஆர்வமா கேட்டாங்க அர்ச்சகரும், உபன்யாசகரும். நாரதரும் உடனே, 'ஊசியின் காதுக்குள்ளே ஒட்டகங்களை நுழைச்சு நுழைச்சு விளையாடிட்டிருந்தார் பகவான்'னு சொன்னார்.

'நீங்கதான் சுவாமி இப்ப விளையாடறீங்க? ஊசியின் காதுக்குள்ளே எங்கேயாவது ஒட்டகங்களை நுழைக்க முடியுமா?'ன்னு நம்பிக்கை இல்லாம கேட்டாங்க ரெண்டு பேரும். செருப்பு தைக்கிற தொழிலாளிகிட்டேயும் நாரதர் இதையேதான் சொன்னார். அதுக்கு அந்தத் தொழிலாளி, 'அப்படிங்களா சாமி! நல்லதுங்க'ன்னார். 'என்னப்பாஞ் ஊசியின் காதுக்குள்ளே ஒட்டகங்களை நுழைச்சார்னு சொல்றேன். உனக்குக் கொஞ்சம்கூட சந்தேகமே வரலையா?'ன்னு கேட்டார் நாரதர்.

'இதுல சந்தேகப்பட என்ன சாமி இருக்கு? கடவுளால முடியாததுன்னு ஏதாச்சும் உண்டா? அவருக்கு இதெல்லாம் சகஜம்தானுங்களே?'ன்னார் தொழிலாளி.

இந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளிதான் முதல்ல மோட்சம் போவார்னு பகவான் ஏன் சொன்னார்னு இப்போ புரிஞ்சுடுச்சு நாரதருக்கு. உங்களுக்குப் புரிஞ்சுதா?