Sunday, December 7, 2014

ஓர் உண்மையை எப்படி சொன்னால், உலகம் திரும்பி பார்க்கும்

என் நண்பனின் தம்பி, பேசும், கேட்கும் திறன் அற்ற மாற்று திறனாளி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று, வேலைக்கு முயற்சி செய்தார். ஏழெட்டு முறை நேர்காணல் வரை சென்றும் தோல்வியே கிட்டியது. மிகவும் புத்திசாலியான அவர், முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அடுத்த சுற்றான நேர்காணல் வரும்போது, தேர்ச்சி பெற முடிவதில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்று தெரியாமல், கலங்கி போனார். இத்தனைக்கும், ஒவ்வொரு நேர்காணலின் போதும், தன்னால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும், அவர்கள் கேள்விகளை எழுதி கொடுத்தால், பதில்களை எழுதி காண்பிப்பதாகவும் ஒரு தாளில் எழுதி, அதை தன் சான்றிதழுடன் இணைத்து தந்து விடுவார். ஆனாலும் தோல்விதான் மிஞ்சியது.

இதனால், விரக்தியில் இருந்தவருக்கு, இன்னொரு இடத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் தன்னுடைய குறையை எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்த நேர்காணல் செய்பவர், அதை கிழித்தெறிந்து, வேறொரு தாளில் ஏதோ எழுதி இவரிடம் கொடுத்துள்ளார். அதில், 'நான் வேலை நேரத்தில் வீண் அரட்டை அடிக்க மாட்டேன்; ஏனெனில், என்னால் பேச இயலாது. எனக்கு கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் என் கவனம் சிதற வாய்ப்பில்லை. எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் மனதை, ஒருநிலைப்படுத்தி என்னால் வேலை செய்ய முடியும். இப்போது, உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்...' என்று எழுதி, பின்குறிப்பாக, 'இப்படி எழுதியிருந்தால் உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டியிருப்போம்...' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதுதான் தன்னுடைய தவறு அவருக்கு புரிந்தது. ஓர் உண்மையை எப்படி சொன்னால், உலகம் திரும்பி பார்க்கும் என்பதை உணர்ந்த அவர், இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

தன் குறையை, நேர்மறை சிந்தனையுடன் மாற்றி யோசித்து, வானத்தை வசப்படுத்தலாம் என்பது புரிகிறதல்லவா வாசகர்களே!

டி. ஹேமப்ரியா, சென்னை.
(Dinamalar 07/12/2014)